முரளி சண்முகவேலன்
லண்டனிலிருந்து முரளி சண்முகவேலன் எழுதும் தொடர்
சென்ற வாரம் செம்பு என்ற உலோகத்துக்கு உள்ள மதிப்பையும் அவற்றின் அடிப்படையில் உண்டாகும் தொழில்வளத்தையும் பார்த்தோம். குறிப்பாக, வளர்ந்த மேற்கத்திய நாடுகளுக்கு மட்டுமல்லாமல், தற்போது வளர்ச்சி முகத்தில் இருக்கும் இந்தியா, சீனா, பிரேசில் போன்ற சந்தைகளிலும் செம்பு உலோகம் உற்பத்திக்கும், வளர்ச்சிக்கும் அடிப்படையாக உள்ளதைப் பார்த்தோம்.
இது உண்மையானால் ஜாம்பியா ஒரு பொருளாதார வல்லரசாக இருக்க வேண்டும். சில மாதங்களுக்கு வெளியிடப்பட்ட ஜாம்பிய நாட்டின் ஒரு மதிப்பீட்டின்படி 2018ஆம் ஆண்டு ஒரு மில்லியன் டன் செம்பு சுரங்கங்களில் இருந்து தோண்டப்படும். ஜாம்பியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருவாயில் செம்பு வர்த்தகம் 75 சதவிகிதமாகும். ஆனால், இந்தச் செம்பு உற்பத்தியின் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருவாய் அந்நாட்டின் உள்ளூர் வருவாயின் வெறும் இரண்டு சதவிகிதம்தான் பங்களிக்கிறது. இந்த ஏற்றுமதி வருவாய் பெரும்பாலும் மேற்கத்திய நிறுவனங்களுக்கும், அவற்றின் தொழில்நுட்ப, நிர்வாக செலவுகளுக்கும் பின்வாசல் வழியாக மீண்டும் செல்கிறது. வறுமையில் உள்ள ஆப்பிரிக்க நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்களிடம் நிதி ஆதாரம் வேண்டி இருப்பதால், இந்தக் காலனிய பாணி (அல்லது நவகாலனியம்) சுரண்டல் தொடர்ந்து நடைபெறுகிறது.
மேற்கத்திய கார்ப்பரேட்டுகளின் தொழில் தந்திரம்
அது மட்டுமல்ல. ஜாம்பிய நாட்டின் முதல் அதிபர் கென்னத் கவுண்டா மிகப்பெரிய அதிர்ச்சியான தகவலைக் குறிப்பிடுகிறார். “எமது ஜாம்பிய நாட்டின் சுரங்கக் கட்டுப்பாட்டு அமைப்புகளிடம் வெளிநாட்டு செம்பு உற்பத்தி நிறுவனங்கள் பற்றிய முழுத் தகவல்களும் கிடையாது.” இன்றைய உலகில் கார்ப்பரேட் நிறுவனங்கள் வெளிப்படைத்தன்மை பற்றி உலக அரங்குகளில் முழங்கிவரும் வேளையில், ஜாம்பியா போன்ற அரசாங்களுக்கு தங்கள் நாடுகளில் உள்ள தொழில்வளம், வருவாய் பற்றிய தகவல்களையே மேற்கத்திய கார்ப்பரேட்டுகள் வழங்க முன்வருவதில்லை.
இந்த ஊழல் உள்ளூர் அரசியல்வாதிகளின் துணையோடும், அதிகாரிகளின் ஒத்துழைப்போடும் நடக்கின்றபடியால் ஜாம்பியா ஓர் ஊழல் நாடு என்ற முழக்கமே மேற்கத்திய, உலக அரங்குகளில் பெரிதாகக் கேட்கிறது. வரிகளை ஏய்க்கும் செம்புச் சுரங்கங்கள் பற்றியும் அவர்களின் நடத்தைப் பற்றியும் யாரும் கவலைப்படுவதாக இல்லை. உலக நிதி மற்றும் வர்த்தக அரங்குகளில் இது பற்றி 2000ஆம் ஆண்டுகளில் விவாதம் ஒன்று எழுப்பப்பட்டது. இந்தப் பிரச்சினையை ஒழுங்குக்குக் கொண்டுவரும் நோக்கத்துடன் பூமியிலிருந்து பிரித்தெடுக்கப்படும் வளம் குறித்த தொழில்களில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஒரு சர்வதேச அமைப்பு தொடங்கப்பட்டது (Extractive Industries Transparency Initiative – இனிமேல் ‘ஈஐடிஐ’). 2003ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் நோக்கமானது உலகெங்கும் உள்ள இயற்கை வள நிறுவனங்களில் நிதிப்புழக்கங்களில் வெளிப்படைத்தன்மை உள்ளது பற்றி தணிக்கை செய்து அறிக்கை வெளியிட ஆரம்பித்தது. 2017ஆம் ஆண்டின் அறிக்கையின்படி ஈஐடிஐயில் 57 நாடுகள் – ஜாம்பியா உள்பட – உறுப்பினராகச் சேர்ந்துள்ளன.
இந்த நிறுவனம் பற்றியோ, அவற்றின் பயன்பாடு பற்றியோ பொதுவெளியில் அதிகம் தெரிவதில்லை. ஜாம்பியா போன்ற நாடுகளோ இந்த நிறுவனத்தினால் சில மில்லியன் டாலர்கள் அதிகமாகக் கிடைக்கும்பட்சத்தில் அதிக அளவு எதிர்ப்புக் குரல் எழுப்புவதும் கிடையாது. ஆனாலும், அல்ஜீரா நிறுவனத்தைச் சேர்ந்த கதீஜா ஷரிஃப் என்பவர் 2011ஆம் ஆண்டு இந்நிறுவனத்தின் அறிக்கையைச் சற்று கூர்ந்து புலனாய்வு செய்தார்.
உதாரணமாக, இந்த அமைப்பு இயற்கை வள நிறுவனங்களின் உள்ள ஆண்டறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள வருமானங்களைப் பற்றிய நிதிகளின் வெளிப்படைத்தன்மை பற்றி மட்டுமே கவனத்தில் கொள்கிறது. அதாவது, இந்த அமைப்பானது ஒரு சுரங்க நிறுவனத்தின் அறிவிக்கப்பட்ட வருவாய்க்கும் அவற்றின் உற்பத்தியின் அளவுக்கான வருவாய்க்கும் உள்ள இடைவெளி பற்றி கவலைகொள்வது கிடையாது. அது மட்டுமல்ல… ஜாம்பியாவிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மொத்த செம்பில் 50 சதவிகித அளவு சுவிஸ்ஸைச் சேரவே இல்லை என்பதையும் கதீஜா தனது புலனாய்வில் கண்டுபிடித்தார். மேலும் ஜாம்பியாவில் கொள்முதல் செய்யப்பட்ட செம்பை சுவிஸ்ஸில் இறக்குமதி செய்யும்போது அதன் கொள்முதல் விலை ஆறு மடங்கு அதிகமாகப்பட்டதையும் கதீஜா கண்டுபிடித்தார். இப்படி அதிகமாக்கியதால் ஜாம்பியாவுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு 11.4 பில்லியன் டாலராகும். ஜாம்பியாவின் 2008ஆம் ஆண்டின் மொத்த உற்பத்தியின் மதிப்பே 14.3 பில்லியன் டாலர் என்பதைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் செம்பு ஏற்றுமதியினால் ஏற்பட்ட இழப்பு எவ்வளவு முக்கியம் என்பது தெரியவரும்.
இம்மாதிரியான நிறுவனங்களும், பன்னாட்டு விதிகளுக்கான தினசரி நடைமுறைகள் பற்றி ஊடகங்களிலும் பொதுவெளியிலும் தினசரி பேசப்படுவதில்லை. இவற்றின் செயல்பாடுகளும் எங்கோ வானத்து மேகங்களுக்கு இடையில் நடைபெறுவதைப் போல் மறைக்கப்பட்டு வருகிறது. இதனால் ஜாம்பியா போன்ற நாட்டின் மக்களே தினசரி வறுமைக்குள்ளாகி வருகின்றனர்.
ஜாம்பியா போன்ற ஆப்பிரிக்க நாடுகள் பெயரளவில் சுதந்திரம் அடைந்திருந்தாலும், இம்மாதிரியான இயற்கைவளச் சுரண்டலின் மூலம் தொடர்ந்து காலனிய ஆதிக்கத்தின் கீழ் இருந்து வருகிறது என்பதே நிதர்சனமாகும். இந்த மாதிரியான காலனிய மீளுருவாக்கத்திற்குப் பன்னாட்டு நிதி நிறுவனங்களின் விதிகளும் துணைபோகின்றன.
உலக வங்கி, பன்னாட்டு நிதி நிறுவனத்தின் நிபந்தனையின் பேரில் ஜாம்பிய அரசாங்கம் செம்புச் சுரங்கங்களுக்கு குறைந்த அளவு வரி விதித்தது. சுரங்கங்களுக்கு 30 சதவிகிதம் எனவும், மற்ற நிறுவனங்களுக்கு 33 சதவிகிதம் எனவும் உலக வங்கியின் நிபந்தனை நிர்ணயம் செய்தது. ஜாம்பியாவின் மிகப் பெரிய சுரங்க நிறுவனமான கொன்கொலா செம்புச் சுரங்கம் (இனி ‘கேசிஎம்’) சிறப்பு ஒப்பந்த நிபந்தனையாக 25 சதவிகித வரியுடன் செயல்பட ஆரம்பித்தது. அதுமட்டுமல்லாமல், அனைத்துவிதமான தொழில்நுட்ப முதலீடுகளும், கட்டுமானங்களும் செலவினமாகக் கருதப்பட்டு கேசிஎம் ஆரம்பிக்கப்பட்ட பல வருடங்களுக்கு நட்டக் கணக்குக் காண்பித்து வந்தது. இன்றும் முதலீட்டைச் செலவினமாகக் காட்டி, அரசுக்கு மிகக் குறைந்த வரியே செலுத்தி வருகிறது. இப்புகழ்பெற்ற கேசிஎம் லண்டனில் உள்ள பங்குச் சந்தையில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனம். கேசிஎம் என்பது உலகில் பல செம்புச் சுரங்கங்களை லாபகரமாக நடத்திவரும் வேதாந்தா என்னும் நிறுவனத்தின் ஒரு கிளை நிறுவனம்.
உலகெங்கும் கனிம நிறுவனங்கள் தாங்கள் தோண்டும் கனிம தாது வளங்களின் உற்பத்திக்குத் தகுந்தவாறு குத்தகை செலுத்த வேண்டும். இந்தக் குத்தகை செலுத்தும் முறை இன்றளவும் இருந்து வருகிறது. கேசிஎம், வேதாந்தா போன்ற பல பன்னாட்டுச் சுரங்க நிறுவனங்கள் இம்முறையை மட்டுமே கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் முனைப்பாக உள்ளது. ஆங்கிலத்தில் Rent Seeking என்று சொல்லப்படும் இந்தக் குத்தகை காலனியத்தின் எச்சம். சுரங்கச் சுரண்டலின் ஒரு முக்கியமான அம்சம் இந்தக் குத்தகை முறையில் இருக்கிறது. இது பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.
கட்டுரையாளர் குறிப்பு: முரளி ஷண்முகவேலன்
[முரளி ஷண்முகவேலன்](https://mobile.twitter.com/muralisvelan) – ஊடக மானுடவியல் ஆய்வாளர் – லண்டன் பல்கலைக்கழகம் – ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் & ஆஃப்ரிக்கன் ஸ்டடீசில் , சாதி மற்றும் தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.
(தொடரின் அடுத்த பகுதி வரும் புதன்கிழமை…)
கட்டுரை 1: [பிரிட்டனின் இளவரசர் திருமணம் சொல்லும் செய்தி என்ன?]
கட்டுரை 2: [விண்ட்ரஷின் குழந்தைகள் சொல்லும் பாடம் என்ன?]
கட்டுரை 3: [காலனியமும் சேவை நிறுவனங்களும்]
கட்டுரை 4: [காலனியத்துக்கு ஆதரவான சமகாலக் குரல்கள்]
கட்டுரை 5: [சாம் செல்வன்; டரினிடாட் தமிழர்]
கட்டுரை 6: [சிறப்புப் பத்தி: நிழல் உலக அறிவுஜீவி சிவானந்தன்]
கட்டுரை 7: [ஈழ அரசியலும் காலனியத்துவமும்]
கட்டுரை 8: [கலைஞரும் காலனியமும்]
கட்டுரை 8: [காலனியத்தின் வித்துக்களும் விளைவுகளும்!]
கட்டுரை 9: [எல்லைப் பாதுகாப்பும் காலனியமும்]
கட்டுரை 10: [சிறப்புப் பத்தி: சுவர் சொல்லும் பாடம்]
கட்டுரை 11:[உலோகமும் காலனியமும்]
கட்டுரை 12: [சிறப்புப் பத்தி: காப்பர் காலனியம்]
கட்டுரை 13: [இன்றைய உலகில் செம்பு]