திமுகவுக்கு பாமக நிபந்தனையற்ற ஆதரவு… ஆனால்: அன்புமணி வைத்த கோரிக்கை!

Published On:

| By Kavi

வன்னியர்களுக்கு 15 சதவிகித உள் ஒதுக்கீடு கொடுத்தால், ஒரு சீட் கூட கேட்காமல் திமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருகிறோம் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இன்று, டிசம்பர் 24ஆம் தேதியுடன் 1000 நாள் ஆகிறது.

ஆனால் இதுவரை வன்னியர்களுக்கான 10.5 சதவிகித இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி பெரியார் நினைவு நாளான இன்று பாமகவினர் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காஞ்சிபுரத்தில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ், “அன்று எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது, ராமதாஸ் எங்களுக்கு ஒரு சீட்டு கூட வேண்டாம். நான் வெற்று பேப்பரில் கூட கையெழுத்து போட்டுக்கொடுக்கிறேன். எங்களுக்கு வேண்டியது எல்லாம் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு தான். தேர்தல் எல்லாம் எங்களுக்கு பெரிது கிடையாது என்றார்.

இப்போதுள்ள முதல்வரிடம் கேட்கிறேன்…. வன்னியர்களுக்கு 15 சதவிகித உள் ஒதுக்கீடு கொடுத்தால் அடுத்த தேர்தலில் நிபந்தனை இல்லாமல் உங்களுக்கு நாங்கள் ஆதரவு கொடுக்கிறோம். 15 விழுக்காடு என்று கையெழுத்து போடுங்கள் எங்கள் ஒட்டுமொத்த சமுதாயமும் உங்களுக்கு ஆதரவு அளிக்கும். எந்த சீட்டும் எங்களுக்கு வேண்டாம்.

ஆனால் கொடுக்கவில்லை என்றால், ஸ்டாலின் அரசு ஒரு விரோதி அரசு என்று வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்வோம். அடுத்த தேர்தலில் மானம் உள்ள ஒரு வன்னியர் கூட உங்களுக்கு வாக்களிக்கமாட்டார்கள்” என்று காட்டமாக பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், “தரவுகளை சேகரித்து உள் ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியும் இன்னும் எங்களுக்கு நீதி வழங்கப்படவில்லை.

நானும், மருத்துவர் ராமதாஸும் முதல்வர் ஸ்டாலினை தலா மூன்று முறை தனிதனியாக சந்தித்தோம். ஆனால் எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை.
இந்த சமூகம் அடிமையாக இருந்து ஓட்டு மட்டும் போட வேண்டும் என்று முதல்வர் நினைக்கிறார்.

ஒருசில விஷ கிருமிகள் தேர்தல் வருவதால் நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்கிறார்கள். நாங்கள் 45 ஆண்டுகளாக போராடுகிறோம். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதை சாதாரணமாக செயல்படுத்தலாம். தெலங்கானா, பீகாரில் எல்லாம் நடத்தி முடித்துவிட்டார்கள்.

நிதிஷ் குமார், ரேவந்த் ரெட்டி, சித்தராமையா ஆகியோருக்கு அதிகாரம் இருந்ததால் தானே அவர்கள் இதற்கு கையெழுத்து போட்டிருக்கிறார்கள்.

அப்படியானால் உங்களுக்கு அதிகாரம் இல்லையா? தமிழ்நாடு இந்தியாவில் இருக்கிறதா? இல்லையா?. இனியும் எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. இது சாதி பிரச்சினை அல்ல. சமூக நீதி பிரச்சினை.

சமூக நீதி என்று சொல்லி நாடகமாடிக்கொண்டு இருக்கிற ஆட்சி போதும். நாடகம் ஆடுவதுதான் திராவிட மாடல்” என்று கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெறுமா? வானிலை அப்டேட்!

குறைந்தது தங்கம் விலை… நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel