ஹமாஸ் அமைப்பின் திடீர் தாக்குதலை அடுத்து இரண்டு நாட்களாக இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனத்தின் காசா பகுதியின் மீது கடுமையான போர் தொடுத்து வருகிறது. சுமார் ஒரு லட்சம் துருப்புகளை இந்த போருக்காக இஸ்ரேல் ஈடுபடுத்தி உள்ளது.
காசா பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளில் குண்டுகள் விழுந்து செத்துக் கொண்டிருக்கிறார்கள். உயிர் பிழைத்தவர்கள் தப்பி எங்கே ஓடுவது என்று தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
இது தவிர தெற்கு இஸ்ரேலில் மூன்று இடங்களில் ஹமாஸ் படையினர் ஊடுருவி இஸ்ரேலிய படைகளுடன் நேரடி துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுவரை இரு தரப்பிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பார்கள் என்று அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் இஸ்ரேல்- ஹமாஸ் போரையடுத்து அவசரமாக அமெரிக்காவில் இந்திய நேரப்படி இன்று (அக்டோபர் 9) அதிகாலை கூடியது. இஸ்ரேல் அதிகாரபூர்வ போரை அறிவித்து மக்கள் அடர்த்தி மிகுந்த காசா பகுதிகளில் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில், ’closed doors’ என்ற அடிப்படையில் கமுக்கமாக கூடியது.
ஐ.நா.வின் மத்திய கிழக்கு அமைதிக்கான பிரதிநிதி Tor Wennesland தற்போது இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடந்து வரும் போர் பற்றி பாதுகாப்பு கவுன்சில் நாடுகளிடம் விளக்கினார்.
அப்போது அமர்விற்குள் நுழைந்த இஸ்ரேலின் தூதுவர் கிலாட் எர்டன், ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேலிய குடிமக்களின் படங்களை பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களிடம் காட்டினார்.
“பாருங்கள்… இவை அப்பட்டமான போர்க்குற்றங்கள், ஆவணப்படுத்தப்பட்ட போர்க்குற்றங்கள். கற்பனை செய்ய முடியாத இந்த அட்டூழியத்தை அனைவரும் கண்டிக்க வேண்டும். இஸ்ரேலுக்கு தன்னை காத்துக் கொள்ள ஆதரவு அளிக்க வேண்டும்” என்று உணர்ச்சிகரமாக கிலாட் எர்டன் பேசினார்.
ஐநா பாதுகாப்பு கவுன்சில் 90 நிமிடங்கள் கூடி விவாதித்தபோது, ‘இந்த விவகாரத்தில் ஹமாஸை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’ என்று அமெரிக்காவும் இஸ்ரேலும் அனைத்து உறுப்பு நாடுகளையும் வற்புறுத்தின.
ஆனால் ரஷ்யாவோ, ‘ஹமாஸ் அமைப்பைக் கண்டிப்பதை காட்டிலும் இந்த விவகாரத்தில் விரிவாக விவாதிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன’ என்று மறுப்பு தெரிவித்துள்ளது. உக்ரைன் விவகாரத்தில் இருந்து மேற்கத்திய நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் எதிராக இருப்பதால் ஹமாஸ் அமைப்பை ரஷ்யா கண்டிக்க முன் வரவில்லை.
அதேநேரம் எப்போதும் ரஷ்யா பக்கம் நிற்கும் சீனா இப்போது, ‘பொதுமக்கள் மீது நடத்தப்படும் எந்த தாக்குதலையும் நாங்கள் கண்டிப்போம்’ என்று கூட்டத்தில் கூறியிருக்கிறது.
இதே கூட்டத்தில் கலந்துகொண்ட பாலஸ்தீனியத்தின் தூதர், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதில் கவனம் செலுத்துமாறு பாதுகாப்புச் சபைக்கு அழைப்பு விடுத்தார்.
பாதுகாப்பு கவுன்சிலில் தற்போது தற்காலிக உறுப்பினராக உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ‘இந்த விவகாரத்தில் பாதுகாப்பு கவுன்சில் மீண்டும் கூடி விவாதிக்க வேண்டும். நிலைமை கவலை தருவதாக உள்ளது’ என்று கூறினார். ஐக்கிய அரபு எமிரேட் இப்போது இஸ்ரேலுடன் இணக்கமாக இருப்பது குறிப்பிடத் தக்கது.
ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளரிடம் பேசிய அமெரிக்க பிரதிநிதி ராபர்ட் வுட், “ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெற்றுள்ள அனைத்து 15 நாடுகளும் ஹமாஸ் அமைப்பை கண்டிக்கவில்லை என்றாலும் பரவலாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது” என்று கூறினார்.
ஹமாஸுக்கு எதிரான கூட்டறிக்கையை ரஷ்யா தனது வீட்டோ பவர் மூலம் தடுத்தது. அனைத்து நாடுகளிடையிலும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்பதால் ஹமாஸை கண்டித்து கூட்டறிக்கை வெளியிடாமல் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கலைந்தது.
தற்போதைய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளும்… அல்பேனியா, பிரேசில், ஈகுவெடார், காபோன், கானா, ஜப்பான், மால்டா, மொசாம்பிக், ஸ்விட்சர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 10 தற்காலிக உறுப்பு நாடுகளும் இடம்பெற்றுள்ளன.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்