பாஸ்கர் செல்வராஜ் Ukraine Palestine war what India should do
உக்ரைனிய–பாலஸ்தீனப் போர்கள் ஆதிக்கத்துக்கு எதிரானது
ரஷ்ய – உக்ரைன் போர் மூலதனம், நிதி, வணிகப் பரிவர்த்தனை தொடர்பானது. பாலஸ்தீன – இஸ்ரேலியப் போர் பூகோள அரசியல் பொருளாதாரம், வணிகப்பாதை தொடர்பானது. இரண்டுமே அடிப்படையில் அமெரிக்க டாலர் மைய ஆதிக்கத்துக்கு எதிரானது.
இரண்டிலும் ஆதிக்கவாதிகளின் தோல்வி உறுதியானது
உக்ரைனியப் போரில் டாலர் அல்லாத மாற்று நாணய, நிதி, வணிகம், பரிவர்த்தனை உருவாகி நிலைபெறுவதைத் தடுத்து, தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் நோக்கத்தில் அமெரிக்கா தோற்றுவிட்டது. பாலஸ்தீனப் போரில் யூரேஷிய பொருளாதார இணைவு, அதற்கான வணிகப் பாதைகளைக் கட்டுப்படுத்துவதில் சீன-ரஷ்ய-ஈரானிய அணி வெற்றி பெற்று வருகிறது. இதிலும் அமெரிக்க அணியின் தோல்வி உறுதியாகி வருகிறது.
பல்துருவ உலகம் உண்மையானது Ukraine Palestine war what India should do
ரஷ்யாவின் நேட்டோவுடனான போர், டாலர் மைய ஒற்றைத்துருவ உலகை உடைத்து ஆசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகளுடன் தத்தமது நாணயத்தில் வணிகத்தை விரிவுசெய்து பல்துருவ உலகத்தை உண்மையாக்கி டாலரின் ஆதிக்கத்தை மீள முடியாததாக்கி இருக்கிறது.
யூரேஷியா இணைவு தவிர்க்கவியலாதது
சீன உற்பத்தி வலிமையும் ரஷ்ய, ஈரானிய எதிர்ப்பியக்க ராணுவ அரசியலும் மேற்கு-மத்திய ஆசிய-சீன-ரஷ்ய நாடுகளை உள்ளடக்கிய யூரேஷிய இணைவைச் சாத்தியமாக்கி இப்பகுதிகளின் நில-நீர்வழி வணிகப் பாதைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததன் மூலம் சீனாவின் “ஒரே மண்டலம் ஒரே பாதை” திட்டம் வேகமெடுத்து சொந்த நாணயத்தில் வணிகம் பெருகி வருகிறது.
இந்தியாவின் நகர்வு குறுகலானது Ukraine Palestine war what India should do
இரண்டு போர்களையும் இந்தியா குறுகிய வணிக நோக்கில் இரு வணிக குழுமத்தின் நலனை மையமாகக் கொண்டு வெளியுறவு ஆதரவு எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்தது. ஆனால், இது நீண்டகால நீடித்து நிலைத்து நிற்கும் உற்பத்தி, மூலதன சுழற்சி, எரிபொருள், தொழில்நுட்பம், பரிவர்த்தனை, தங்குதடையற்ற வணிகப் போக்குவரத்து தொடர்பானது.
அரச முதலாளித்துவம் தேவையானது
ரஷ்ய ஆதரவு நிலைப்பாடு எடுத்து ரூபாயில் எண்ணெயை வாங்கி அதன் மதிப்பைத் தீர்மானிக்கும் ஆற்றலையும் இந்த ரூபாய்க்கான சந்தையைக் காக்கும் ஆயுத இறக்குமதியையும் தக்கவைத்து இந்திய தேசியத்தின் இறையாண்மையைக் காத்தாலும் சீன, ரஷ்ய நாடுகளுடனான பொருளாதார இணைவுக்கு அந்நாடுகளின் இயங்கும் அரச முதலாளித்துவ கட்டமைப்பை இந்திய பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைக்காமல் ஒன்றியம் தனியாருடன் இணைய கட்டாயப்படுத்துவதால் இந்திய வெளியுறவுக் கொள்கை தடுமாறுகிறது.
அரசினால் ரூபாய் நிலைப்படுத்தப்பட வேண்டியது
பல்துருவ உலகத்தையும் பல நாணய வணிகத்தையும் இந்தியா உள்வாங்கி பயன்படுத்த எழுபதுகள் கால அரச முதலாளித்துவமும் அதன் அடித்தளத்தில் இயங்கும் தனியார் சந்தை முதலாளித்துவமும் கலந்த கலப்புப் பொருளாதாரக் கட்டமைப்பும் மீண்டும் படிப்படியாக அரசே ரூபாய் மதிப்பைத் தீர்மானிக்கும் முறைக்கும் இது திரும்பக் கோருகிறது.
மாற்று நிதிய அமைப்புகள் உருவாக்க வேண்டியது
இந்தியாவில் ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் இல்லாத நிலையில் இப்போதிருக்கும் டாலர் மைய நிதிய, பரிவர்த்தனைக் கட்டமைப்பைத் தொடர்ந்து இயங்க அனுமதிப்பதைத் தவிர வேறு வழியில்லை. அதேசமயம் அடிமைத்தன அரசியலைத் தொடராமல் டாலர் பங்களிப்புக்கும் ஊக பேர பங்குச் சந்தைக்கும் வெளியில் இயங்கும் அரச முதலாளித்துவத்துக்கான மாற்று நிதி, வணிகம், பரிவர்த்தனை அமைப்புகளை ஏற்படுத்தி இயங்காமல் இதிலிருந்து விடுதலை இல்லை.
மாற்றுப் பொருளாதாரத் திட்டம் அவசியமானது
அந்தக் கட்டமைப்பைக் கொண்டு ரஷ்யாவுடன் ரூபாயில் எரிபொருள் வணிகம் செய்து தற்போதைக்கு அது கோரும் யுயனையும் அதனைக் கொண்டு நமக்கும் அந்நாடுகளுக்குமானப் பொருள்களை உற்பத்தி செய்து எதிர்காலத்தில் ரூபாய்-யுயன், ரூபாய்-ரூபிளில் கொடுத்து வாங்க ஒரு புதிய உற்பத்தி சுழற்சிக்கான திட்டம் இப்போது அவசியமானது.
உள்ளும் வெளியிலும் நிச்சயம் முரண்படக் கூடியது
தற்போது ரூபாயை டாலர் பதிலீடு செய்திருக்கும் நிலையில் டாலருக்கு எதிரான இந்த நகர்வு, மேற்குடனும் அதனுடன் நெருக்கமான வணிகத் தொடர்பு கொண்ட பெருநிறுவனங்களின் நலனுடனும் முரண்படாமல் இருக்க வாய்ப்பில்லை. அது ஒரு கடுமையான பொருளாதாரச் சரிவிலோ, அரசியல் மோதலிலோ, டாலரும் டாலர் முதலீடுகள் நிறைந்திருக்கும் பெருநிறுவனங்களின் நலனும் வீழும்போதோ அல்லது இப்பெருநிறுவனங்களின் நலனைப் பலி கொடுப்பதன் ஊடாகவோ நமது உள்வெளி முரண்களைத் தீர்த்துக்கொள்வதில் முடியக் கூடியது.
தற்காலிக சிறிய உடைப்புகள் சாத்தியமானது
இச்சூழல்களுக்குக் காத்திராமல் சிறு தனித்தனியான உடைப்புகளாகத் தொடங்கி பகுதியளவு மாற்றமாக அரச முதலீட்டில் பொதுத்துறை நிறுவன உருவாக்கமாகவும் அதன் வளர்ச்சியின் போக்கில் கிடைக்கும் வாய்ப்பின்போது ரூபாய் மூலதன சுழற்சியாக முழுமையடையச் செய்ய முடியும்.
தெளிவின்மையால் இந்தியாவின் நகர்வுகள் குழம்புகிறது
முதலில் ஈரானை மையப்படுத்திய வணிகப்பாதை (Instc) பின்பு இஸ்ரேலை மையப்படுத்திய வணிகப்பாதை (Imec) இப்போது மீண்டும் ரஷ்ய-ஈரானின் பக்கம் திரும்புவது என்பதான இந்தியாவின் குழப்பம் இரு பெருநிறுவன நலன் சார்ந்து இயங்குவதும் அவர்களின் எண்ணெய் சார்ந்த உற்பத்தி இயக்கத்தில் இருக்கும் வலுவான இருப்பை விடவும் முடியாமல் புதிய மரபுசாரா எரிப்பொருள் உற்பத்தி இயக்கத்தில் பங்களிக்க ஏதுமின்றி எவரிடமாவது இவர்களுக்கு வேண்டிய தொழில்நுட்பத்தை எப்படியாவது அறமற்ற அரசியல் ஊடாகவேனும் இவர்களுக்குப் பெற்றுத்தர துடிப்பதன் வெளிப்பாடு.
ஏற்றுமதி வணிக வாய்ப்பு தற்காலிகமானது
ரஷ்யாவுடன் மீண்டும் நெருங்கி ஈரான், வெனிசுவேலாவுடன் மலிவான எண்ணெய் வாங்கி சுத்திகரிக்க முனைவது, மின்னணு கருவிகள் உற்பத்தியை ஊக்குவிப்பது ஆகிய இரண்டிலும் இந்தியாவின் நோக்கம் ஏற்றுமதி வணிகம் சார்ந்ததாகவே இருக்கிறது. இது இரு பெருநிறுவனங்களின் லாபத்தைத் தற்காலிகமாகப் பெருக்கினாலும் மேற்கின் சரியும் பொருளாதார சூழலால் இது நீடித்து நிலைத்திருக்கும் வாய்ப்பற்றது.
இரட்டைக் குதிரை சவாரி இடறி விழவைப்பது
தற்போதைய மரபான எண்ணெய் சுத்திகரிப்பு அதற்கு மாற்றான மரபுசாரா மின்சாரம் மற்றும் மின்னணு கருவிகள் உற்பத்தி ஆகிய இரண்டையும் குஜராத்தில் நிறுவி இந்திய உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் இருவரது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சி செய்கிறது ஒன்றியம். ஒன்றுக்கொன்று எதிரான இந்த உற்பத்தி முறைகளில் இரட்டை சவாரி செய்ய முனையும் இவர்கள் நிச்சயம் இடறி வீழ்வார்கள். ஒன்றின் தேவையை இன்னொன்று நிறைவு செய்யும் வகையிலான பொருளாதாரத் திட்டமின்றி எண்ணெயை விடுத்து மாற்றைத் தழுவிக்கொள்ளும் நோக்கமின்றி இதில் வெற்றிபெற முடியாது.
உலகின் பிரச்சினை வாங்கும்திறன் தொடர்பானது
இதுவரையிலுமான மேற்கின் குறைமதிப்பு பொருள் தேவைக்கு தெற்குலகம் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதும் தெற்கின் மிகைமதிப்பு பொருள் தேவைக்கு மேற்கு ஏற்றுமதி செய்வதுமான ஏற்றத்தாழ்வான மிகை-குறை மதிப்பு நாணயங்களின் வழியான பொருளாதார சுழற்சி முடிவுக்கு வருகிறது. மேற்குலக மக்கள் சேமிப்பையும் வாங்கும் திறனையும் இழந்து கடனாளியாகக் காலம் கழித்ததும் இப்போது தொடர இயலாத நிலையை எட்டிவிட்டது. எனவே இப்போதைய உலகப் பிரச்சினை வாங்கும்திறன் தொடர்பானது. இந்தியாவின் ஏற்றுமதிசார் வணிகச் சிந்தனை தவறானது.
தற்சார்புக்கான காலம் திரும்புகிறது
மேற்கின் இந்த இழிநிலை உழைக்கும் வர்க்கத்தை உற்பத்தியில் இருந்து விலக்கி அவர்களின் திறனைக் குன்றச்செய்து சேவையாளர்களாக மாற்றியதன் விளைவு. சீனத் தொழிலாளர்களின் திறன்வளர்ச்சி மேற்கின் மிகைமதிப்பு பொருள் உற்பத்தி ஏகபோகத்தை உடைத்தது மட்டுமல்ல… உற்பத்தித் தொழில்நுட்பத்தில் பின்தங்கவும் வைத்திருக்கிறது. இது பொருள்களின் விலைகளைத் தீர்மானிக்கும் மேற்கின் வலிமையைப் பறிக்கும் நிலையில் அவரவர் தனக்கான பொருளைத் தானே உற்பத்தி செய்து அவரவர் உற்பத்தித் திறனுக்கேற்ப பொருட்களின் மதிப்பை அவரவர் நாணயத்தில் நிர்ணயித்து பரிமாறிக்கொள்ளும் தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கி மீண்டும் உலகம் திரும்புகிறது.
தொழிற்துறை வலுவிலான வணிக சமத்துவம் தவிர்க்கவியலாதது
சீனாவிடம் தொழிற்துறை உற்பத்திப் பொருட்களும், ரஷ்ய, மேற்காசிய நாடுகளிடம் உற்பத்திக்கான இயற்கை வளங்களும் இருப்பதால் இயல்பாக இணைந்து பொதுவான வணிகப்பாதை அமைத்து வணிகம் செய்வதை நோக்கி அது அவர்களைச் செலுத்துகிறது. இந்த இணைவில் இழப்பைச் சந்திக்கும் மேற்குலகம் இறங்கிவர மறுத்து போரிடுகிறது. உற்பத்தி வலிமை குன்றிய மேற்கு இந்தப் போராட்டத்தின் முடிவில் இறங்கி வந்து சமமாக இவர்களுடன் வணிகம் செய்ய உடன்படுவது தவிர்க்கவியலாதது.
இந்தியாவிடம் வாங்க ஆளுமில்லை கொடுக்கப் பொருளுமில்லை
தற்சார்புக்கான அடிப்படை வாங்கும் திறனுடைய சந்தை, அந்தத் தேவைக்கான பொருட்களைச் செய்யும் உற்பத்தி தொழில்நுட்பம். பயிரிடத்தக்க நிலம், மலிவான மனிதவளம் மட்டுமே இந்தியாவிடம் இருக்கிறது. இப்போதைய உற்பத்திக்கான எண்ணெய், மாறும் உற்பத்திக்கான தொழில்நுட்பம் என இரண்டுமே நம்மிடம் இல்லை. பிறரிடம் நுட்பங்களைப் பெற்று உற்பத்தியைப் பெருக்கினாலும் இந்தியர்களிடம் வாங்கும் திறனில்லை. ஆகவே வாங்கும் திறனுடைய சந்தை, உற்பத்தி தொழில்நுட்பம் ஆகிய இரண்டையும் இந்தியா உருவாக்கிக்கொள்ள வேண்டியுள்ளது.
சாதிய ஒழுங்கு உடையாமல் தொழில்மயமாக வாய்ப்பில்லை
சாதியச் சமூக ஒழுங்கின் ஊடாக உற்பத்தியைக் கைப்பற்றி இருக்கும் பனியாக்கள் முஸ்லிம்களை எதிரிகளாக்கி மக்களைப் பிளக்கும் வெறுப்பு அரசியல் வழியாக எதிர்கால தொழிற்துறை உற்பத்தியையும் தங்களிடம் குவிக்க முயற்சி செய்கிறார்கள். இதனை அடைய இவர்களுக்கு இந்தச் சாதிய ஒழுங்கு, இந்து தேசியவெறி, முஸ்லிம் வெறுப்பு அரசியல் தவிர வேறு வழியில்லை. அதேசமயம் இந்த ஏற்றத்தாழ்வான சாதிய ஒழுங்கில் இந்தியர்களின் திறன் பெருகி தொழிற்துறை வளர்ந்து வாங்கும்திறன் கூடவும் வாய்ப்புமில்லை. எனவே இந்தச் சாதிய ஒழுங்கு உடையாமல் தொழில்மயமாகி உலகோடு இந்தியா சமமாக வணிகம் செய்யும் சாத்தியமில்லை.
பார்ப்பனியம் அகவாற்றலைப் பெருக்கி தற்சார்படைய முடியாது
இந்தியர்கள் அனைவருக்கும் பலனளிக்கும் ஒரு பொதுவான பொருளாதார இலக்கை நோக்கி ஒருங்கிணைத்து அந்த மாபெரும் மனித ஆற்றலின் ஊடாக தற்சார்பு குறிக்கோளை எட்டுவதற்கு இந்தப் பார்ப்பனிய மூவர்ண மேலாதிக்க இந்து தேசிய இஸ்லாமிய மதவெறுப்பு அரசியல் இடமளிக்காது.
இந்துத்துவம் யூரேஷிய இணைவில் பலனடைய முடியாது
குழாய் வழியாக எண்ணெய், எரிவாயுவை இஸ்லாமிய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகள் வழியாக இறக்குமதி செய்யவும், பொருட்களை அந்நாடுகளின் (நில)வழியாக ஆசிய, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து யூரேஷிய இணைவில் பலனடைவும் இஸ்லாமிய வெறுப்பைக் கைவிட வேண்டும். இந்த இணைவுக்கு டாலர் காட்டும் எதிர்ப்பைச் சமாளிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பைக் கையில் எடுக்க வேண்டும். அதற்கு இணைய மின்னணு தொழில்நுட்ப முற்றோருமையைக் கைவிட வேண்டும். இந்த மூன்றையுமே இந்துத்துவத்தால் செய்ய முடியாது. எனவே யூரேஷிய இணைவில் இந்துத்துவம் பலனடைய முடியாது.
நிலவழி யூரேஷிய இணைவு வடக்கின் வீழ்ச்சியானது வரலாறு
ஐரோப்பா முதல் இந்தியா வரையான யூரேசியா ஒருகுடையின்கீழ் வந்த கிரேக்க, (உ)ரோமப் பேரரசுகளின் காலங்களில் நிலவழி வணிகம் செழித்து பௌத்த பார்ப்பனிய கருத்தியலைக் கொண்டு வடக்கின் மௌரியர்களும் குப்தர்களும் எழுந்தார்கள். இந்த யூரேஷிய இணைப்பு உடைபட்ட பின்னர் ஐரோப்பாவும் இந்தியாவும் உடைந்தது மட்டுமல்ல… மேற்காசியாவில் எழுந்த இஸ்லாமியர்களிடம் வடவர்கள் ஆதிக்கத்தை இழந்து வீழ்ந்ததை வரலாறு பதிவு செய்கிறது. அப்போது முதல் இப்போது வரை அவர்களுடன் இணக்கம் காணாததன் வெளிப்பாடுதான் சிந்துவெளி பகுதியில் இந்து-முஸ்லிம் கருத்தியலை உள்ளடக்கிய புதிய சீக்கிய கருத்தியலின் தோற்றம். எனவே இப்போதும் எப்போதும் இவர்களால் இஸ்லாமியர்களுடன் இணங்கி யூரேஷிய இணைவின்வழி எழுச்சி பெற முடியாது.
நிலவழி வடக்கின் வீழ்ச்சி நீர்வழி வணிக தெற்கின் எழுச்சி
கிரேக்கம் உடைந்து ஐரோப்பா சீனாவுடன் பட்டுச்சாலை வழியாக இணைந்தபோது தெற்கில் நீர்வழி வணிகம் செய்த முற்கால சேர, சோழ, பாண்டியர்கள் எழுந்தார்கள். (உ)ரோமர்களின் எழுச்சியின்போது வடக்கின் குப்தர்களுக்கு இணையாக தெற்கின் களப்பிரர்கள் வணிகம் செய்தார்கள். இஸ்லாமிய காலிபேட்டுகள் எழுந்து நிலவழி வணிகத்தைக் கைப்பற்றியபோது இந்தியாவில் வலிமையான கப்பற்படையைக் கட்டி எழுப்பிய ஒரே பேரரசான சோழர்கள் எழுந்ததையும் வரலாறு பதிவு செய்திருக்கிறது. பின்பு பார்ப்பனியத்தை ஏற்ற தமிழகம் உற்பத்தியில் தேங்கி வீழ்ந்தது. நிலவழிக்கான யூரேஷிய வணிகத்தின் இதயப் பகுதியைக் கைப்பற்றி எழுந்த மங்கோலிய, ஒட்டோமான் பேரரசுகளின் எழுச்சியை எதிர்கொள்ள மாற்று கடல் வணிகப் பாதைகளையும் புதிய உற்பத்தி, வணிகத்துக்கான நுட்பங்களையும் கண்ட மேற்கு ஐரோப்பியர்களின் ஆதிக்கத்துக்கு உள்ளாகி இன்றுவரையிலும் கடல்வழி வணிகத்தின் ஒரு முக்கிய மையமாகவே விளங்கி வருகிறது.
நமது தற்சார்புக்கான வாய்ப்பு Ukraine Palestine war what india should do
மின்கல மகிழுந்துகள் உற்பத்தியில் சீனாவைவிட பின்தங்கி உக்ரைன் போரில் மலிவான ரஷ்ய எரிவாயுவை இழந்து மேற்கு ஐரோப்பாவின் பொருளாதாரம் நலிவடைந்திருக்கிறது. மாற்று எரிபொருள் தொழில்நுட்பம் கண்டு ஆசியாவுடனான கடல்வழி வணிகத்தை வலிமைப்படுத்த வேண்டிய தேவை அவர்களுக்கு எழுந்திருக்கிறது. எண்ணெய் வழியான வடக்கின் ஆதிக்கத்தை வீழ்த்த மாற்று உற்பத்தி எரிபொருளைக் கைக்கொண்டு தொழில்நுட்ப தற்சார்பை அடைய வேண்டிய நெருக்கடியில் நாம் இருக்கிறோம். அவர்களுக்குத் தேவையான தொழிற்துறை பொருட்களை உற்பத்தி செய்து கொடுத்து அதன் வழியாக நமது தொழில்நுட்ப தற்சார்பை அடையும் பொன்னான வாய்ப்பு நம்முன் நிற்கிறது.
அவர்களுக்கு என்ன பொருட்கள் வேண்டும்? நமது தற்சார்புக்கு என்ன உற்பத்தித் தொழில்நுட்பம் வேண்டும்? எப்படி இரண்டையும் இணைத்துச் சாதிப்பது?
அடுத்த கட்டுரையில் காணலாம்…
கட்டுரையாளர் குறிப்பு
பாஸ்கர் செல்வராஜ் – தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உக்ரைன் போரின் முடிவு, இந்தியாவின் நிலைப்பாடு – பகுதி 1
இஸ்ரேல் – பாலஸ்தீனப் போரின் பூகோள அரசியல் பொருளாதாரம்! – பகுதி 2
இந்தியாவின் மீதான உக்ரைனிய – பாலஸ்தீனப் போர்களின் தாக்கம்! – பகுதி 3