பிரிட்டன் பொதுத்தேர்தலில் 350க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற தொழிலாளர் கட்சி ஆட்சி அமைக்கிறது. கடந்த 14 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த தற்போதைய பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி தேர்தலில் 100 இடங்களில் கூட வெல்ல முடியாமல் படுதோல்வியை சந்தித்துள்ளது.
மொத்தம் 650 இடங்களுக்கான பிரிட்டன் பொதுத்தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய வம்சாவளியான பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி மற்றும் கியெர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கிடையே கடும் போட்டி நிலவியது.
பிரிட்டனில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி தான் கடந்த 2010 முதல் 14 ஆண்டுகளாக ஆட்சிப்பொறுப்பில் இருந்து வந்தது. ஆனால் ஆட்சி நிர்வாகத்தில் தடுமாற்றம், பொருளாதார பின்னடைவு காரணமாக 14 ஆண்டுகளில் 5 முறை பிரதமர்கள் மாறினர். மேலும் பல்வேறு நிர்வாக சீர்கேடு காரணமாக மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவியது.
தற்போது அந்நாட்டின் பிரதமராக இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் இருந்து வரும் நிலையில், நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.
அதில் தேர்தலுக்கு முந்தைய கணிப்பின்படியே தற்போது கெய்ர் ஸ்டோர் தலைமையிலான தொழிலாளர் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அக்கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 350க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
அதேவேளையில் 14 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்த ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி தேர்தலில் 100 இடங்களில் கூட வெல்ல முடியாமல் படுதோல்வியை சந்தித்துள்ளது.
தேர்தல் முடிவுக்கு ரிஷி – கியெர் கூறியது என்ன?
இதனையடுத்து தேர்தலில் தோல்வியை ரிஷி சுனக் ஒப்புக் கொண்டுள்ளார்.
அவர், ”கன்சர்வேட்டிவ் கட்சியின் தோல்விக்கு நான் பொறுப்பேற்கிறேன். வெற்றி பெற்ற தொழிலாளர் கட்சிக்கும் கியெர் ஸ்டார்மர் எனது மனமார்ந்த பாராட்டுகள் எனவும் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்த தொழிலாளர் கட்சி சார்பில் அதன் தலைவரான கியெர் ஸ்டார்மர் பிரிட்டனின் புதிய பிரதமராகிறார்.
வெற்றி குறித்து அவர், “நாம் சாதித்துவிட்டோம். இத்தேர்தலில் தொழிற்கட்சிக்காக பிரச்சாரம் செய்த அனைவருக்கும், தொழிற்கட்சி மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைவருக்கும் நன்றி. மாற்றம் இங்கிருந்து தொடங்குகிறது” என்று ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
Share Market : டிவிஏசி விசாரணையால் தொடர் சரிவில் அதானி குழும பங்குகள்!
பாம்பன் கோவில் குடமுழுக்கு: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!