இங்கிலாந்தில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்திருக்கிறது. பிரிட்டனின் முதல் இந்திய வம்சாவளிப் பிரதமராகப் பார்க்கப்பட்ட ரிஷி சுனக் பதவியை இழந்திருக்கிறார். தொழிலாளர் கட்சியின் தலைவர் கியர் ஸ்டாமர் இங்கிலாந்தின் புதிய பிரதமராக உருவெடுத்திருக்கிறார்.
பிரிட்டன் நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை மொத்தம் 650 சீட்டுகள் உள்ளன. இதில் தொழிலாளர் கட்சி 412 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
கடந்த தேர்தலில் 365 இடங்களைக் கைப்பற்றிய கன்சர்வேட்டிவ் கட்சி இந்த முறை 121 இடங்களில் சுருங்கியுள்ளது. பிரிட்டன் வரலாற்றில் ஒரு மோசமான சரிவினை கன்சர்வேட்டிவ் கட்சி சந்தித்திருக்கிறது.
ஐரோப்பாவில் பல நாடுகளில் வலதுசாரிகளின் ஆதிக்கம் பெருகி, பல இடங்களில் அவர்கள் அதிகார மையமாக மாறி வரும் சூழலில் பிரிட்டனில் எப்படி தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்தது? பிரிட்டனில் தொழிலாளர் கட்சியின் வெற்றி இடதுசாரிகளுக்கான வெற்றியா? யார் இந்த கியர் ஸ்டாமர்?
இப்படி பல கேள்விகள் இந்த தேர்தல் முடிவுகளையொட்டி எழுகின்றன. இந்த கேள்விகளுக்கு விடை காண முயல்வோம்.
யார் இந்த கியர் ஸ்டாமர்?
தற்போது பிரிட்டன் பிரதமராக பதவியேற்கும் கியர் ஸ்டாமர் லண்டனில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். தனது 16 வயதிலேயே தொழிலாளர் கட்சியின் இளைய சோசலிஸ்ட்கள் அணியில் சேர்ந்தார். சிறு வயதிலேயே தொழிற்சங்கங்களுக்கான ஆதரவு நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
இவர் சட்டப் படிப்பினை முடித்து மனித உரிமை வழக்கறிஞரானார். பல்வேறு மனித உரிமை வழக்குகளை நடத்தியுள்ளார். கரீபியன் நாடுகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க அந்த பிராந்தியம் முழுதும் பயணம் செய்தார்.
2003 ஆம் ஆண்டு வட அயர்லாந்தின் காவல்துறை தொடர்பான வாரியத்தில் மனித உரிமை ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு பிரிட்டனின் சட்டத்துறை தொடர்பான உயர்பதவிகளை வகித்தார். அதன்பிறகு இடதுசாரி அரசியல் நிலைப்பாட்டிலிருந்து மாற்றம் கொண்டார்.
பிரேசிலைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளரான ஜீன் சார்லஸ் காவல்துறை அதிகாரியால் தீவிரவாதி என நினைத்து கொல்லப்பட்ட போது, காவல்துறை அதிகாரிகளுக்கு தண்டனை வழங்க மறுத்தது மக்களிடையே விமர்சனமாகப் பார்க்கப்பட்டது. விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்க அரசிடம் ஒப்படைப்பது குறித்தான வழக்கிலும், அவரை விரைவாக அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் முயற்சியினை கியர் ஸ்டாமர் மேற்கொண்டார். இதுவும் மனித உரிமை ஆர்வலர்களால் விமர்சிக்கப்பட்டது.
2015 ஆம் ஆண்டு முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2017 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார்.
2020 ஆம் ஆண்டு தொழிலாளர் கட்சியின் தலைவராக இருந்த இடதுசாரியான ஜெரேமி கார்பைனை வீழ்த்தி கட்சியின் தலைவரானார் கியர் ஸ்டாமர். தொழிலாளர் கட்சியினை இடதுசாரி பாதையிலிருந்து திருப்பி மையம் என்ற இடத்தை நோக்கி திருப்பியவர் கியர் ஸ்டாமர் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.
கியர் ஸ்டாமர் தலைவரான குறுகிய காலத்திலேயே, தொழிலாளர் கட்சிக்குள் யூத வெறுப்பு அதிகமாகிவிட்டதாகச் சொல்லி ஜெரேமி கார்பைன் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஜேரேமி கார்பைன் பாலஸ்தீன் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
சில காலத்திற்குப் பிறகு கார்பைன் மீண்டும் தொழிலாளர் கட்சியில் தொடர்ந்தாலும், அவர் இந்த தேர்தலில் கட்சி சார்பாக போட்டியிடுவது தடை செய்யப்பட்டதால் சுயேட்சையாக போட்டியிடுவதாக அறிவித்தார். தொடர்ந்து தொழிலாளர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் கார்பைன்.
மேலும் கட்சியிலிருந்த பல இடதுசாரி வேட்பாளர்களை படிப்படியாக நீக்கியதாகவும் கியர் ஸ்டாமர் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. பிரிட்டனின் முதல் கருப்பின எம்.பியான டயான் அபாட் தொழிலாளர் கட்சி இடதுசாரிகளை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக வெளிப்படையாகவே குற்றம் சாட்டினார். மேலும் இஸ்ரேல்-பாலஸ்தீன் விவகாரத்திலும் இஸ்ரேலின் நடவடிக்கைகளை எதிர்க்காமல் அதற்கு துணை போகிறார் என்ற குற்றச்சாட்டும் கியர் ஸ்டாமர் மீது எழுப்பப்பட்டது.
கியார் ஸ்டாமரின் கொள்கைகள் என்ன?
கியர் ஸ்டாமரை எந்த சித்தாந்தமும் இல்லாத ஒரு நபராக பிரிட்டனின் சில அரசியல் விமர்சகர்கள் வரையறுக்கிறார்கள். அதேசமயம் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் குறித்த விவகாரத்திலும், தேசியமயமாக்கல் விவகாரத்திலும் அவரிடம் சரியான பார்வை இருக்கிறது என்கிறார்கள். எனவே கியர் ஸ்டாமர் தொழிலாளர் கட்சியை இடதும் இல்லாமல், வலதும் இல்லாமல் மையத்தில் வைத்திருக்கிறார் என்றே சொல்லப்படுகிறது.
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் பிரிந்து செல்லும் வகையில் மேற்கொள்ளப்பட்ட பிரெக்சிட்-க்கு எதிராக இருந்தார் கியர் ஸ்டாமர். பிரிட்டனின் பொருளாதார வளர்ச்சி பின்தங்கியதற்கு Brexit, கோவிட் பெருந்தொற்று, ரஷ்யா-உக்ரைன் போர் போன்றவையும், கன்சர்வேட்டிவ் அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளும் தான் காரணமாக இருந்தது என்பதைத் தொடர்ந்து பேசி வந்தார்.
தொழிலாளர் கட்சிக்கு தலைமையேற்றவுடன் அவர் சொன்ன உறுதிமொழிகள் என்னவென்றால் டாப் 5% சதவீத பணக்காரர்களின் வருமான வரியை உயர்த்துவது, பிரிட்டனின் ஆயுத வியாபாரத்தைக் கட்டுப்படுத்துவது, ரயில் போக்குவரத்தை தேசியமயமாக்குவது, மின்சாரம் மற்றும் தண்ணீர் போன்ற துறைகளையும் தேசியமயமாக்குவது மற்றும் தொழிலாளர் உரிமைகளை பலப்படுத்துவது போன்ற பல விடயங்களை சொன்னார்.
ஆனால், இந்த தேர்தலில் தொழிலாளர் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இந்த விடயங்களில் ரயில்களை தேசியமயமாக்கும் ஒரு விடயம் மட்டுமே இடம் பெற்றிருந்தது. மற்ற வாக்குறுதிகளை கைவிட்டார் கியர் ஸ்டாமர். ஆக மையம் என்பதே கியர் ஸ்டாமரின் கொள்கையாக இருக்கிறது.
தொழிலாளர் கட்சி பெற்றிருப்பது பிரம்மாண்ட வெற்றியா?
தொழிலாளர் கட்சியின் இந்த வெற்றி வெளியில் பிரம்மாண்டமாக தெரிந்தாலும், இன்னொரு விடயம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 202 இடங்களில் வெற்றி பெற்ற போது தொழிலாளர் கட்சி பெற்ற வாக்கு சதவீதம் 32.1% ஆகும். இந்த முறை 412 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் தொழிலாளர் கட்சியின் வாக்கு சதவீதம் 33.8% சதவீதமாகவே இருக்கிறது. வாக்கு சதவீதம் 1.7% சதவீதம் மட்டுமே கூடியிருக்கிறது.
கன்சர்வேட்டிவ் கட்சியின் வாக்கு சதவீதத்தில் ஒரு பெரிய உடைவு நடந்திருப்பதே தொழிலாளர் கட்சி பெற்ற வெற்றிக்கு முக்கியமான காரணமாகப் பார்க்கப்படுகிறது.
43.6% சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த கன்சர்வேட்டிவ் கட்சியின் வாக்கு சதவீதம் 23.7% சதவீதமாகக் குறைந்திருக்கிறது. இந்த வாக்குகள் தொழிலாளர் கட்சிக்கு மாறவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
ஐரோப்பாவில் தீவிரமாக வளர்ந்து வரும் வலதுசாரி அரசியலின் விளைவாக கன்சர்வேட்டிவ் கட்சியின் வாக்குகளை புதிதாக உருவெடுத்த தீவிர வலதுசாரி கட்சியான Reform UK கட்சி பெருமளவுக்கு பெற்றுள்ளது. 14.3% சதவீத வாக்குகளை Reform UK கட்சி பெற்றுள்ளது.
இக்கட்சியின் தலைவரான நிகல் ஃபராகே டொனால்ட் ட்ரம்புக்கு நெருக்கமானவராக இருந்தவர். ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் பிரிவதற்காக பிரச்சாரங்களை மேற்கொண்டவர். இவரும் இவரது கட்சியும் அடைந்திருக்கும் வளர்ச்சியின் காரணமாக வலதுசாரி வாக்குகள் பிரிந்ததே தொழிலாளர் கட்சியின் வெற்றிக்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
எனவே பிரிட்டன் பாராளுமன்றம் இந்த முறை தொழிலாளர் கட்சியின் வசம் வந்திருந்தாலும், வலதுசாரிகளின் ஆதிக்கம் எதிர்காலத்தில் பெரிதாக இருக்கும் என்றே கணிக்கப்படுகிறது.
பிரிட்டனின் பொருளாதார சரிவு என்பது மிகவும் சிக்கலுக்குரிய பிரச்சினையாக இருக்கிறது. இதில் கியர் ஸ்டாமர் சறுக்கும் பட்சத்தில் வலதுசாரிகளின் வளர்ச்சி என்பது பிரிட்டனில் பிரம்மாண்டமானதாக மாறும்.
விவேகானந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த ஆற்காடு சுரேஷ் கும்பல்? பகீர் தகவல்கள்!
விக்கிரவாண்டி தேர்தல்… பாமகவின் பெயரை உச்சரிக்காத ஸ்டாலின்
ஆம்ஸ்ட்ராங் கொலை… எடப்பாடி கண்டனம்!
புதிதாக 1.48 லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை: ஸ்டாலின் அறிவிப்பு!
நீட் தேர்வை ரத்து செய்யக் கூடாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம்!