கடந்த 18ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற யூஜிசி நெட் தேர்வில் முறைகேடு நடந்திருப்பது உறுதியான நிலையில், அத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டுக்கான யுஜிசி நெட் தேர்வு கடந்த 18ஆம் தேதி நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது.
அதனையடுத்து இந்த தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக தேசிய சைபர் கிரைம் பிரிவில் இருந்து யூஜிசிக்கு நேற்று தகவல் அனுப்பியது.
அதனை உறுதிப்படுத்திய நிலையில் தேர்வை ரத்து செய்ய மத்திய கல்வி அமைச்சகத்திற்கு பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தியது.
அதன் அடிப்படையில், தேர்வு முறையின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில் 2024 யூஜிசி நெட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சகமும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தேர்வுகளின் புனிதத்தன்மையை உறுதிப்படுத்தவும், மாணவர்களின் நலன்களை பாதுகாக்கவும் அரசு உறுதிபூண்டுள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் அளித்த (I4C) தகவலின் அடிப்படையில் UGC-NET ஜூன் 2024 தேர்வை ரத்து செய்ய கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. .
புதிதாகத் தேர்வு நடத்தப்படும். அதற்கான தகவல்கள் தனித்தனியாகப் பகிரப்படும். அதே நேரத்தில், இதுகுறித்த முழுமையான விசாரணைக்காக தேர்வில் நடந்த முறைகேடு விரிவான விசாரணை நடத்த இந்த விவகாரம் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வும் ரத்தாகுமா?
மேலும் நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அதுகுறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், ”நீட் (யூஜி) தேர்வு-2024 தொடர்பான விஷயத்தில், கருணை மதிப்பெண்கள் தொடர்பான பிரச்சினை ஏற்கனவே முழுமையாக தீர்க்கப்பட்டுள்ளது. பாட்னாவில் தேர்வு நடத்தப்பட்டதில் சில முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் நிலையில், பீகார் காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரியிடம் விரிவான அறிக்கை கோரப்பட்டுள்ளது. இந்த அறிக்கை கிடைத்ததும் அரசு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும்.
தேர்வுகளின் புனிதத்தன்மையை உறுதிப்படுத்தவும், மாணவர்களின் நலன்களை பாதுகாக்கவும் அரசு உறுதிபூண்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஈடுபடும் எந்தவொரு தனிநபர்/அமைப்பும் கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று மீண்டும் வலியுறுத்தப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா