வர இருக்கிற 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக திமுக சார்பில் சட்டமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது.
அமைச்சர் நேரு, ஆர். எஸ். பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஆகியோர் அடங்கிய இந்த குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் 21 ஆம் தேதி அறிவாலயத்தில் முடிந்தது. அதன் பிறகு ஜூலை 23ஆம் தேதி அமைச்சர் உதயநிதி இல்லத்தில் 234 தொகுதிகளுக்குமான சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு பார்வையாளர் என 234 பேர் நியமிக்கப்பட்டனர். அவர்கள் அந்தந்த சட்டமன்ற தொகுதிகளில் மாசெக்களால் அமைக்கப்பட்ட பூத் கமிட்டிகளை சரிபார்த்தல், சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட செயலாளர் ஆகியோருக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையிலான இணக்கமான உறவு குறித்து உண்மை நிலையை தலைமைக்கு எடுத்துரைத்தல், எங்கெங்கே பிரச்சனை இருக்கிறதோ அங்கங்கே சென்ற உடனடியாக சரி செய்தல் ஆகிய பணிகளை செய்தார்கள்.
இவர்கள் 234 பேரையும் ஜூலை 23ஆம் தேதி மாலை குறிஞ்சி இல்லத்துக்கு வரவழைத்து நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் செய்த பணிக்கு பாராட்டு தெரிவித்து விருந்தளித்தார் இளைஞர் அணி செயலாளரான அமைச்சர் உதயநிதி.
இதனை வெறும் நன்றி பாராட்டும் நிகழ்வாக மட்டுமே நடத்தி விடாமல், சட்டமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவினருடன் கலந்துரையாடல் நிகழ்வாக அமைத்திருந்தார் உதயநிதி.
நிகழ்வில் சட்டமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவினரோடு இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை உள்ளிட்டோர் மேடையில் அமர்ந்திருந்தனர்.
முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே என் நேரு, அமைச்சர் எ.வ, வேலு, அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் இந்நிகழ்வில் ஏதும் பேசவில்லை.
உதயநிதி ஸ்டாலின் உரையாற்றுவதற்கு முன்பு, சட்டமன்றத் தேர்தல் பார்வையாளர்களின் நாடாளுமன்றத் தேர்தல் அனுபவம் எப்படி இருந்தது என்பதை கேட்போமே என மூன்று பேரை மட்டும் பேச அழைத்தார்.
அந்த மூன்று பேர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, கோகுல் ,எஸ் கே பி கருணா ஆகியோர். தாங்கள் பேச அழைக்கப்படுவோம் என்று அவர்களுக்கும் தெரியாது. திடீரென அழைக்கப்பட்டதும் அவர்கள் தங்களுடைய நாடாளுமன்ற தேர்தல் அனுபவங்களை சில நிமிடங்கள் பகிர்ந்து கொண்டனர்.
தஞ்சாவூர் அஞ்சுகம் பூபதி பேசும்போது, “ தலைவர் கலைஞர் இருக்கும்போது நாங்களெல்லாம் தலைவர் கலைஞரை ஒருமுறை பார்த்துட்டு போனாலே… ஆறு மாதத்துக்கு வேகமும் துடிப்பும் இருக்கும். இப்போது தலைமையே அழைத்து எங்களை பாராட்டுவது அதேபோன்ற துடிப்பையும் அடுத்தடுத்து சிறப்பாக செயல்படுவதற்கான ஊக்கத்தையும் எங்களுக்கு அளிக்கிறது.
மாவட்டச் செயலாளரில் இருந்து ஒவ்வொரு நிர்வாகியும் எங்களை மதிக்கிறார்கள். தேர்தல் பணிகளை ஒருங்கிணைந்து செய்தோம்”: என்று குறிப்பிட்டார்.
எஸ்,கே.பி. கருணா பேசும்போது,
“எங்களுக்கு தலைமையில் இருந்தும் பென் டீமில் இருந்தும் கைடன்ஸ் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். அந்த ஒன்றியத்துல இப்படி ஒரு இஷ்யு இருக்கு, அங்க போங்க என்பார்கள். நாங்கள் ஒவ்வொரு பணியையும் செய்து முடித்து அதன் விவரத்தை தலைமைக்கு அனுப்புவோம். தலைமையில் இருந்து அடிக்கடி எங்களைத் தொடர்புகொண்டு கேட்டுக் கொண்டிருந்ததால் எங்கள் பொறுப்பு எப்படிப்பட்டது என்பதை உணர்ந்து மிகவும் பொறுப்புணர்வோடு பணி செய்தோம். சின்னவரின் பாராட்டின் மூலம் பெருமையாக உணர்கிறோம்” என்றார் கருணா.
கோகுல் பேசும்போது,
“கட்சிப் பிரச்சினை மட்டுமல்ல… தேர்தலில் எதிரொலிக்கக் கூடிய மக்கள் பிரச்சினைகளையும் உடனடியாக நாங்கள் தலைமைக்கு எடுத்து சொன்னோம். உடனடியாக சம்பந்தப்பட்ட அமைச்சர்களையே அங்கே அனுப்பி மக்கள் பிரச்சினைகள் மீது உரிய நடவடிக்கை எடுத்தது தலைமை.
தலைமை நம்மைத் தொடர்புகொள்கிறது என்கிறபோது பொறுப்பும் எச்சரிக்கை உணர்வும் அதிகரித்தது. இதேபோல பணியாற்றினால் வருகிற சட்டமன்றத் தேர்தலிலும் பெரும் வெற்றியை நாம் ஈட்ட முடியும்” என்று பேசினார்.
அதன் பின் 234 பேர்களுக்கும் உதயநிதி தன் கையால் நினைவுப் பரிசு வழங்கி அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டார். எடுத்த போட்டோவை அங்கேயே அவரவர்க்கு வாட்ஸ் அப்பில் அனுப்பிவிட்டார்கள் குறிஞ்சி டெக்னிகல் குழுவினர்.
நிறைவுரையாக உதயநிதி பேசும்போது,
“உங்கள் பணி சிறப்பான பணி. நமது கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 வெற்றி பெற்றதில் உங்கள் உழைப்பு கடுமையான உழைப்பு. தலைமை சொன்னதை தவறாமல் செய்திருக்கிறீர்கள். மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் எல்லாம் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்திருப்பாங்கனு நினைக்கிறேன்.
95% பேர் சிறப்பாக பணியாற்றியிருக்கின்றீர்கள். மீதி 5% பேர் அப்படி இப்படி இருந்திருக்கிறீர்கள். அதையெல்லாம் சரிசெய்துவிடுவோம்.
வர இருக்கிற 2026 சட்டமன்றத் தேர்தல் முக்கியமான தேர்தல். அதற்கான பணியை இப்போதே தொடங்கிவிட்டோம்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் மோடி அரசை குறை சொல்லி வாக்கு கேட்டோம். மோடி எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற வில்லை என்பதைச் சொல்லி ஓட்டுக் கேட்டோம்.
‘ஆனால் 2026 சட்டமன்றத் தேர்தல்… முழுக்க முழுக்க நமது முதல்வரின் நமது அரசின் சாதனைகளை, நிறைகளை சொல்லி ஓட்டுக் கேட்கப் போகிறோம். அதற்கான திட்டங்களை தலைமை உங்களுக்குக் கொடுக்கும்.
அதையும் சிறப்பாக செய்து 2026 இலும் மெகா வெற்றியை நாம் அடையவேண்டும்” என்று பேசினார் உதயநிதி.
ஜூலை 23 ஆம் தேதி இந்த கூட்டம் என்றால், ஜூலை 24 ஆம் தேதி திமுகவின் ஒவ்வொரு அணி நிர்வாகிகளையும் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் சந்திக்கத் தொடங்கிவிட்டார் உதயநிதி.
‘அதன் ஒரு பகுதியாக முதல் நாளான 24 ஆம் தேதி மகளிரணி – மகளிரணி பிரச்சாரக்குழு மற்றும் மகளிர் தொண்டரணி, மாணவரணி மாநில நிர்வாகிகளை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து உரையாடியுள்ளார்.
வருகிற 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலை உதயநிதியின் முழு மேற்பார்வையிலேயே நடத்த முடிவு செய்திருக்கிறார் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின். அதன் அடிப்படையிலேயே முன்கூட்டியே ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு கட்சியின் தேர்தல் பணிகளுக்கு உதயநிதியே தலைமை தாங்குகிறார் என்கிறார்கள் அறிவாலயத்தில்.
–வணங்காமுடி, வேந்தன்
‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு!
இத எதிர்பார்க்கவே இல்ல… அடியோடு சரிந்த தங்கம் விலை!