’பிரதமரும் கொலை செய்ய அழைக்கிறாரா?’: சனாதன சர்ச்சைக்கு உதயநிதி பதிலடி!

Published On:

| By christopher

udhyanithi stalin point out pm modi and question

”நான் சனாதன கோட்பாடுகளை ஒழிக்க வேண்டும் என்று தான் மேடையில் கூறினேன். அதில் நான் என்றும் உறுதியாக இருப்பேன்” என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் நான் பேசியது இனப்படுகொலைக்கான அழைப்பு என்றால், பிரதமர் மோடி பேசியது என்ன? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை காமராஜர் அரங்கில் தமுஎகச சார்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் திமுக இளைஞர் அணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், “கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா போன்று சனாதன தருமத்தையும் ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் பணி” என்று தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு இணையதளத்தில் வைரலான நிலையில் நாடு முழுக்க கடுமையான எதிர்ப்புகள், கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

அவர்மீது உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் என்பவர் டெல்லி போலீசாரிடம் 4 பிரிவுகளில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நேற்று (செப்டம்பர் 3) இரவு நடைபெற்ற அகில இந்தியா ஆக்கி இறுதிப்போட்டி நிகழ்ச்சிக்கு உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார்.

அப்போது தனது கருத்துக்கு எழுந்த எதிர்ப்புகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார்.

பாஜக பொய் பிரச்சாரம்!

அவர், “சனாதனம் பற்றி நான் பேசியது சரியானது தான். பா.ஜ.க.வினர் நான் பேசியதை திரித்து பேசி வருகின்றனர். நான் சனாதன கோட்பாடுகளை ஒழிக்க வேண்டும் என்று தான் மேடையில் கூறினேன். அதில் நான் உறுதியாக இருக்கிறேன், என்றும் இருப்பேன்.

பல ஆண்டுகளாக பெண்கள் படிக்கக்கூடாது, பெண்கள் மேலாடை அணியக்கூடாது, கோயில்களுக்குள் செல்லக்கூடாது என்று சனாதனவாதிகள் கூறிவந்தார்கள். இந்த மூன்றையும் நாம் மாற்றி இருக்கிறோம். இதுதான் திராவிட மாடல். இதை தான் நான் பேசினேன்.

ஆனால் வழக்கம்போல் பாஜகவினர் நான் பேசியதை திரித்து நான் இனப்படுகொலை செய்ய கூறியதாக பொய் செய்திகளை பதிவிட்டு வருகின்றனர்.

இந்தியா (I.N.D.I.A.) கூட்டணி வலுப்பெற்று வருவதை திசை திருப்புவதற்காக தான் பா.ஜ.க.வினர் சனாதன கோட்பாடுகள் குறித்து நான் பேசியதை கையில் எடுத்துள்ளனர்.

பிரதமர் மோடி கொலை செய்ய போகிறாரா?

இங்கு நிறைய பேர் ’திராவிடத்தையும், கம்யூனிசத்தையும் ஒழிக்க வேண்டும்’ என்று பேசி வருகிறார்கள். அப்படியென்றால் அவர்கள் திமுகவினரை கொல்லப்போகிறார்களா?

பிரதமர் மோடி தொடர்ந்து ’காங்கிரஸ் முக்த் பாரத்’ என்று கூறி வருகிறார். அவர் என்ன காங்கிரஸ்காரர்களை கொலை செய்ய போகிறாரா?

எதுவும் மாறக்கூடாது, எல்லாமே நிலையானது என்பதே சனாதனம் என்று விளக்கம் கொடுக்கிறார்கள். எல்லாவற்றிலும் மாற்றம் ஏற்பட வேண்டும். எல்லோருக்கும், எல்லாமே கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல்.

திரும்பவும் நான் சொல்கிறேன். நான் பேசியதில் எந்த இடத்திலும் தவறும் இல்லை. நான் சனாதன கோட்பாடுகளை எதிர்க்கிறேன். தொடர்ந்து அதனை செய்வேன். அதற்காக என் மீது என்ன வழக்கு போட்டாலும் அதை சந்திக்கவும் தயாராக உள்ளேன்” என்று தெரிவித்தார்.

சீமான் ஆதரவு?

தொடர்ந்து சீமானின் திமுக ஆதரவு குறித்து பேசுகையில், “இன்னும் எதுவும் உறுதியாகவில்லை. முதலில் தேர்தல் அறிவிக்கட்டும். தைரியமிருந்தால் பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் போட்டியிடட்டும். சீமான் உணர்ச்சிவசத்தில் பேசக்கூடியவர். இதுகுறித்து பிறகு பேசுவோம்” என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

’நான் சூப்பர்ஸ்டாரா?’: குட்டிக்கதை சொல்லி லாரன்ஸ் வேண்டுகோள்!

ஆதிதிராவிடர் நலத்துறையில் பல லட்சம் ரூபாய் முறைகேடு!

அக்டோபர் 2-க்குள் மதுவிலக்கு அமல்படுத்தப்படாவிட்டால் மாநிலம் ஸ்தம்பிக்கும்: கிருஷ்ணசாமி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel