திமுக இளைஞர் அணி செயலாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதியின் பிறந்தநாளை ஒட்டி அவரது அதிகாரபூர்வ இல்லமான சென்னை பசுமைவழிச் சாலையிலுள்ள குறிஞ்சி இல்லத்தில், பிறந்தநாள் விழா இன்று (நவம்பர் 27) காலை முதலே களை கட்டியுள்ளது.
காலையில் எழுந்து தயாராகி சித்தரஞ்சன் சாலையில் உள்ள தமிழக முதல்வரும் திமுக தலைவரும் தனது தந்தையுமான ஸ்டாலின் மற்றும் தாயார் துர்கா இருவரையும் சந்தித்து ஆசியும் வாழ்த்துகளையும் பெற்றுக் கொண்டார். அப்போது, ‘குடியரசுத் தலைவர் -ஆளுநரின் அதிகாரங்கள்’ என்ற புத்தகத்தை தனது தந்தையிடம் வழங்கினார் உதயநிதி.
அதன் பின் கோபாலபுரம் கலைஞர் இல்லத்துக்குச் சென்று பாட்டி தயாளு அம்மாளிடம் வணங்கி ஆசிபெற்றார். கலைஞர் படத்துக்கு மாலை மரியாதை செலுத்திவிட்டு, மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் சமாதிக்கு சென்று வணங்கினார்.
பிறகு சிஐடி காலனிக்கு சென்று ராஜாத்தியம்மாளிடம் ஆசி பெற்றார். அங்கிருக்கும் கலைஞர் படத்துக்கும் மரியாதை செலுத்திவிட்டு, தனது அத்தை கனிமொழியிடம் ஆசி வாங்கினார். பட்டு சால்வை அணிவித்து உதயநிதிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார் கனிமொழி.
அதன்பிறகு பெரியார் திடல் சென்ற உதயநிதி, திராவிடர் கழக தலைவர் கி. வீரமணியை சந்தித்து வாழ்த்துகள் பெற்றார்.
பின் சித்தரஞ்சன் சாலை வீட்டுக்கு சென்ற உதயநிதி முக்கிய நண்பர்கள் மற்றும் தொழில் அதிபர்களை சந்தித்து விட்டு அதன் பிறகு கிரீன் வேஸ் சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்திற்கு பகல் 11.55 மணிக்கு வந்தார்.
முன்னதாகவே அமைச்சர்கள், எம். எல். ஏ. க்கள், மாவட்டச் செயலாளர்கள் கட்சி நிர்வாகிகள் குறிஞ்சி இல்லத்துக்குள் வந்து காத்திருந்தனர். கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள குடியிருப்புகளில் உதயநிதி வசிக்கும் குறிஞ்சி இல்லத்திற்கு மட்டும்தான் மூன்று கேட்கள். குறிஞ்சி இல்லத்தில் உதயநிதியை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல மூன்று வரிசைகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
யார் யார் எந்த வழியில் வரவேண்டும் என்று பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் கண்டிப்புடன் உத்தரவு போட்டனர். இதனால் சீனியர் எம். எல். ஏ. க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட கொஞ்சம் முகம் சிறுத்துதான் போனார்கள்.
அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆரின் அன்பு இல்லம் பக்கத்தில் உள்ள கேட் வழியாக உள்ளே வருவதற்கு அமைச்சர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். எம். எல். ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் சபாநாயகர் அப்பாவு வசிக்கும் மலரகம் இல்லம் அருகே உள்ள கேட் வழியாக அனுமதிக்கப்பட்டார்கள். அந்த வழியாகத்தான் கட்சி நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள் சென்றனர்.
அமைச்சர் அன்பில் மகேஷ் வசிக்கும் தென்பெண்ணை இல்லத்திற்கும் குறிஞ்சி இல்லத்திற்கும் இடையில் நடந்து செல்லும் அளவுக்கு ஒரு பாதை இருக்கிறது. அந்த வழியாக முக்கிய நண்பர்கள், தொழில் அதிபர்கள் சென்றனர்.
அமைச்சர்கள், எம். எல். ஏ. க்கள் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகளை மட்டும் வீட்டுக்குள் வரவழைத்து பொன்னாடை மற்றும் பரிசுகளைப் பெற்றுக்கொண்டார். udhayanithistalin birthday celebration
குறிஞ்சி இல்லம் வளாகத்தில் அமைக்கப்பட்ட மேடையில் நின்று கட்சி நிர்வாகிகள் இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்தார். அங்கேயே மைக்கில், ‘யாரும் சால்வை, பூங்கொத்துகளைக் கொடுக்க வேண்டாம். வெளியே புத்தகக் கடைகள் இருக்கின்றன. அங்கிருந்து புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள்’ என்று அறிவித்துக் கொண்டிருந்தனர்.
வாழ்த்த வந்த கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் தயிர் சாதம், சாம்பார் சாதம், வாட்டர் பாட்டில் வழங்கினார்கள்.
உதயநிதி வீட்டு வாசலில் வாழ்த்த வந்த தொண்டர்களிடம் பேசியபோது, ‘குறிஞ்சி இல்லம் என்னமோ முதல்வர் வீடுபோல தோரணையா தெரியுதுங்க’ என்கிறார்கள் மகிழ்ச்சியாய்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
வணங்காமுடி
தலித் இளைஞர்கள் வாயில் சிறுநீர் கழித்த கொடூரம்: செல்வபெருந்தகை கண்டனம்!
’எந்த கடவுளும் கறி சாப்டா தப்புன்னு சொல்லல’: நயனின் அன்னபூரணி ட்ரெய்லர்!
udhayanithistalin birthday celebration