ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அனைத்து மருத்துவமனை வசதிகளும் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் உதயநிதிஸ்டாலின் இன்று (ஜூன் 3) தெரிவித்துள்ளார்.
ஒடிசா பாலசோர் மாவட்டத்தில் நேற்று இரவு ஏற்பட்ட கோரமான ரயில் விபத்தில் சிக்கி இதுவரை 288 பேர் உயரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்துள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்த கோரமண்டல் ரயிலில் மட்டும் 867 தமிழர்கள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டனர்.
எனினும் நேற்று நடந்த விபத்தில் இதுவரை தமிழர்கள் யாரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகவில்லை.
இந்நிலையில் விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர், அன்பில் மகேஷ் ஆகியோர் சம்பவம் நடந்த ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
முன்னதாக இன்று காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், “விபத்து குறித்து ஒடிசா முதல்வருடன் தமிழக முதல்வர் பேசியுள்ளார்.
அங்குள்ள கள நிலவரம் மற்றும் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து விசாரணை மேற்கொள்ள உள்ளோம்.
ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அனைத்து மருத்துவ வசதிகளும் தயார் நிலையில் உள்ளது. ஒடிசா சென்ற பிறகு அங்கு கூடுதல் தகவல்களை தெரிவிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
ரயில் விபத்து… உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின்
கோர ரயில் விபத்து… கட்டுப்பாட்டு அறையில் முதல்வர்!