திமுக இளைஞர் அணிச் செயலாளராக பொறுப்பேற்று இன்று (ஜூலை 4) ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
கலைஞரின் பேரனாக, முதல்வர் ஸ்டாலின் மகனாக ஆரம்பத்தில் அறியப்பட்ட உதயநிதி ஸ்டாலின், முதலில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் தயாரிப்பாளராக அடியெடுத்து வைத்தார்.
அதன்பின்னர் கதாநாயகனாக 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர், கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அதில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியது.
அதனையடுத்து பல மாவட்டங்களிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வந்த நிலையில் திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் நியமனம் செய்யப்பட்டார்.
அதன்பின்னர் வந்த 2021 சட்டமன்றத் தேர்தலிலும் உதயநிதியின் பிரச்சாரம் பலம் சேர்க்க திமுக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்தது. அத்தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட அவர், 69.355 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தொடர்ந்து கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த திமுகவில் உள்கட்சி தேர்தலில் இளைஞரணி செயலாளராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டார் உதயநிதி ஸ்டாலின். அதே ஆண்டின் இறுதியில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.
திமுகவின் எதிர்காலமாக கருதப்படும் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து அரசியலில் கவனம் பெற்று வருகிறார். இந்த நிலையில் தற்போது கட்சியின் இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழக இளைஞர் அணிச் செயலாளராக இன்று ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். உறுப்பினர் சேர்க்கை, கிளை-வார்டுகளுக்கும் நிர்வாகிகளை நியமித்தது, கைவிடப்பட்ட நீர்நிலைகளைச் சீரமைத்தது, கொரோனா கால நலத்திட்ட உதவிகள், நீட் தேர்வுக்கு எதிரான தொடர் போராட்டங்கள், திராவிட மாடல் பயிற்சிப் பாசறைக் கூட்டங்கள், தமிழ்நாடு முழுவதும் நேர்காணல் நடத்தி, மாவட்ட அளவிலான நிர்வாகிகளைத் தேர்வு செய்தது, இரண்டாவது மாநில மாநாடு, இல்லந்தோறும் இளைஞர் அணி முன்னெடுப்பு, சமூக வலைத்தளத்தில் இயங்கும் தன்னார்வலர்களை ஒருங்கிணைப்பது, முரசொலி பாசறைப் பக்கம், முத்தமிழறிஞர் பதிப்பகம், தொகுதிதோறும் கலைஞர் நூலகம், தேர்தல் பிரச்சாரங்கள்… மனதுக்கு நெருக்கமான பல பணிகளை செய்துள்ளோம் என்ற வகையில் மகிழ்வாக உள்ளது.
இந்த வாய்ப்பை வழங்கிய முதலமைச்சர் – கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளுக்கும், இளைஞர் அணியினரைக் களத்தில் உற்சாகப்படுத்தி ஒருங்கிணைக்கும் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கழகத்தினுடைய அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றி.
கழகப் பணிகள் அனைத்திலும் எனக்கு உறுதுணையாக நிற்கும் இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு என் அன்பும் வாழ்த்தும்! மக்கள் பணி, கழகப் பணியை தொய்வின்றி தொடர்வோம்!” என உதயநிதி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
நாடு திரும்பிய இந்திய வீரர்கள்: பிரதமர் விருந்து!
Share Market : இன்று முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய பங்குகள் என்ன?