வைஃபை ஆன் செய்ததும் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி நடத்தி வரும் இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்ட போட்டோக்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி, கடந்த பிப்ரவரி 14-ம் தேதி முதல் இளைஞர் அணியினருக்கான பிரத்யேக ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார். அதாவது ஒவ்வொரு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களை தனது குறிஞ்சி இல்லத்துக்கு வரவழைத்து அவர்களிடம் தனித்தனியாக ஆலோசனை நடத்துகிறார்.
கடந்த ஆண்டு இளைஞர் அணிக்கு மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களை தானே நேரடியாக நேர்காணல் செய்து பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பிறகு நியமித்தார் உதயநிதி ஸ்டாலின்.
அதன்பிறகு அவர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்பதை தொடர்ந்து கண்காணித்து வந்தார். இந்த நிலையில்தான் சேலம் மாநில இளைஞரணி இரண்டாவது மாநாடு முடிந்த பிறகு தனது குறிஞ்சி இல்லத்தில் மாநாட்டுக்காக உழைத்த அனைத்து மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களை ஒன்று கூட்டி அவர்களுக்கு பாராட்டு தெரிவித்து விருந்தும் பரிசும் அளித்தார்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட அமைப்பாளர்கள் பலர் தங்களது கருத்துக்களை உதயநிதியிடம் நேரடியாக தெரிவிக்க ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர்.
அந்த கூட்டத்தில் அவ்வளவு நிர்வாகிகளோடும் உரையாட வாய்ப்பு இல்லாததால் இளைஞர் அணி நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்த முடிவெடுத்தார் உதயநிதி.
அந்த விளைவுதான் பிப்ரவரி 14-ம் தேதி முதல் ஒவ்வொரு மண்டல வாரியாக மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களை தனித்தனியாக சந்தித்து வருகிறார். அவர்கள் பதவிக்கு வந்ததிலிருந்து சேலம் இளைஞர் அணி மாநாடு வரை அவர்கள் செய்த செயல்பாடுகள் என்ன என்பதை மினிட் புத்தகங்கள் மூலமும் போட்டோ ஆல்பங்கள் மூலமும் கேட்டு வாங்கி பார்த்து ஆய்வு செய்து இருக்கிறார் உதயநிதி.
அதற்கு முன்பே ஒவ்வொரு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்களின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை தனியாக ஆய்வு நடத்தி ஒரு ரிப்போர்ட்டை தயார் செய்து வைத்திருக்கிறார் உதயநிதி.
மேலும் அந்தந்த மண்டலங்களை நிர்வாகிக்கும் மாநில துணைச் செயலாளர்கள் மூலமாகவும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் பற்றிய விவரங்களை சேகரித்திருக்கிறார்.
இவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு அவர்களின் மினிட் புக்கில் இருக்கக்கூடிய தகவல்களை ஒப்பிட்டு பார்த்து அவர்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள் என்ற நிலையிலே மினிட் புக்கிலேயே… ’தங்களது செயல்பாடு சிறப்பாக இருக்கிறது மென்மேலும் உயர வாழ்த்துக்கள்’ என்று பச்சை மையில் எழுதி கையெழுத்துப் போடுகிறார் உதயநிதி.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் மிக முக்கியமான அம்சமே அந்தந்த மாவட்ட செயலாளராக இருக்கும் அமைச்சர்கள், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்களிடம் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்ற கேள்வியை கேட்டு அதற்கு ’எந்தவிதமான தயக்கமும் இன்றி உண்மையான பதிலை சொல்லுங்கள்’ என்றும் கேட்டிருக்கிறார் உதயநிதி.
இதுவரை ஆலோசனை கூட்டத்துக்கு சென்று வந்த இளைஞர் அணி மாவட்ட நிர்வாகிகளில் பலரும் தங்களுக்கு மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சர்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார்கள். சென்னையில் மா.சு. சிறப்பான ஒத்துழைப்பு வழங்கி வருகிறார் என்பதையும் தெரிவித்திருக்கிறார்கள்.
பெரும்பாலான மாசெக்கள் உதயநிதியை வெளிப்படையாக போற்றி புகழும் அதேநேரம்… மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்களை ஒரு படி குறைவாகவே ட்ரீட் செய்கிறார்கள் என்பதுதான் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் உதயநிதியிடம் கொட்டி தீர்த்திருக்கிற விஷயங்கள்.
இதுவரை சென்னை மண்டலம் மற்றும் கடலூர், விழுப்புரம் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார் உதயநிதி. ஆலோசனை முடிந்த உடனேயே ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் தங்களது மாவட்ட இளைஞரணி அமைப்பாளருக்கு போன் போட்டு… ‘என்ன தம்பி? ஆலோசனை கூட்டம் எப்படி இருந்துச்சு ? சின்னவர் என்ன கேட்டாரு? நீங்க என்ன சொன்னீங்க? நம்மளை பத்தி நல்லா சொன்னீங்கள்ல?’ என்று தானாக முன்வந்து கேட்டிருக்கிறார்கள்.
‘இதுவரை மாவட்ட செயலாளர்களை ஃபோனில் நாங்கள் பிடிக்க வேண்டும் என்றால் கூட நான்கைந்து முறை முயற்சி செய்ய வேண்டும். நேரில் பார்க்க வேண்டும் என்றால் அப்பாயின்ட்மென்ட் கேட்டு சில மணி நேரங்கள் காத்திருக்க கூட வேண்டி இருக்கும். ஆனால் உதயநிதியின் இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு மாவட்ட செயலாளர்களே எங்களுக்கு போன் செய்து விசாரிக்கிற அளவுக்கு நிலைமை சற்று மாறி இருக்கிறது’ என்கிறார்கள் இளைஞர் அணி நிர்வாகிகள்.
வரப்போகிற எம்பி தேர்தலுக்கு திமுக இளைஞரணியில் இருந்து குறைந்தபட்சம் ஐந்து வேட்பாளர்களாவது நிறுத்தப்பட வேண்டும் என்று உதயநிதி கணக்கு போட்டு வைத்திருக்கிற நிலையில்… இந்த ஆலோசனைக் கூட்டம் அது பற்றிய இறுதியான உறுதியான முடிவெடுப்பதற்கும் காரணமாக இருக்கும் என்கிறார்கள் குறிஞ்சி வட்டாரத்தில்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வதந்தியா? : போலீசாருக்கு பாக்யராஜ் கொடுத்த விளக்கம்!
முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கை ரத்து செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்