தமிழ்நாடு முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் மத்திய அரசையும், ஆளுநரையும் கண்டித்து தி.மு.க இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் இன்று (ஆகஸ்ட் 20) காலை தொடங்கியுள்ளது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதிஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனை திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், ”உதயநிதி தலைமை தாங்கி இருக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உங்களை வாழ்த்தும் வாய்ப்பு முதல் முறையாக எனக்கு கிடைத்துள்ளது.
ஆதிக்ககாரர்களால் அமல்படுத்தப்பட்ட நீட் தேர்வை எதிர்த்து நடக்கும் போராட்டம் இது. இளம் மாணவர்களை நிமிர விடாமல், ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மருத்துவராக மாறும் வாய்ப்பை இழந்து இருக்கிறார்கள்.
மோடி அரசு நீட் தேர்வை திணிப்பதில் வேகமாக இருக்கிறது. நீட் தேர்வுக்கு எதிராக திமுக நீண்ட சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு நீட் தேர்வை கல்வியாளர்கள் பலரும் எதிர்க்கிறார்கள்.
நீட் தேர்வுக்கு எதிராக எத்தனையோ இளம் சிட்டுக்கள் தங்களது இன்னுயிரை மாய்த்து கொண்டு உள்ளனர். ஆனால் இவற்றையெல்லாம் ஒன்றிய மோடி அரசு தனது சர்வதிகாரதனத்தில் கண்டுகொள்ளாமல் உள்ளது.
ஒட்டுமொத்த இந்தியாவில் நாம் மட்டும்தான் நீட் தேர்வை எதிர்த்து வருகிறோம். ஏனென்றால், இது எதிர்காலத்தை சீரழிக்கும் என்ற வருங்கால சிந்தனை நமக்கு உண்டு.
நீட் தேர்வுக்கு பலர் விடும் சாபம் பாஜக ஆட்சியை ஒழித்து விடும். உதயநிதி காலத்தில் நீட் தேர்வு ஒழிந்தது என்ற வரலாறு, சரித்திரத்தில் இடம் பெறும். அதைச் செய்யும் ஆற்றல் உதயநிதி ஸ்டாலினுக்கு உள்ளது. நான் 3 தலைமுறையை பார்த்தவன் உதயநிதியால்தான் நீட் தேர்வை ஒழிக்க முடியும்” என்று அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
திமுக நீட் எதிர்ப்பு உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது!
மதுரை அதிமுக மாநாடு: கொடியேற்றி துவக்கி வைத்தார் எடப்பாடி