டிஜிட்டல் திண்ணை: அப்பாவை கேட்கச் சொன்ன உதயநிதி… ஸ்டாலினை நெருக்கும் மா.செ.க்கள்- கூட்டணியில் இருந்து வெளியேற்றப்படுகிறாரா திருமா?
வைஃபை ஆன் செய்ததும் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜூனா, விஜய் ஆகியோருடைய பேச்சுக்கு வெளியான எதிர்வினைகள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“டிசம்பர் 6ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசிய பேச்சு மீண்டும் திமுக- விசிக கூட்டணியில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலில் மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும், இனி பிறப்பால் ஒருவர் முதலமைச்சராக கூடாது என்றெல்லாம் திமுகவினரை கோபப்படுத்தும் வகையில் ஆதவ் அர்ஜுனா பேசிய சில மணித்துளிகளில்… நேற்று இரவு திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார் திருமாவளவன். அப்போது அவர், ஆதவ் அர்ஜுனா பேசியது அவரது சொந்த கருத்து என்று குறிப்பிட்டார். இது திமுகவினரை மேலும் கோபப்படுத்தியது,
நேற்று இரவே திமுகவின் பல்வேறு அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், இளைஞர் அணி நிர்வாகிகள் ஆகியோர் துணை முதலமைச்சர் உதயநிதியின் தனி உதவியாளர் செந்திலை தொடர்பு கொண்டு தங்களது வருத்தத்தையும் ஆவேசத்தையும் தெரிவித்திருக்கிறார்கள்.
அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்ட சிலர் வேலூரில் இருந்த உதயநிதிக்கு அலைபேசி செய்து ஆதவ் அர்ஜுனா பேசிய பேச்சையும் அது அவரது சொந்த கருத்து என்று திருமா சொன்ன விஷயத்தையும் தெரிவித்து அடுத்து நாம் என்ன செய்வது என்று கேட்டுள்ளனர்.
உதயநிதியிடம் உரிமையுள்ள சிலர், ‘அது ஆதவ் அர்ஜுனாவின் சொந்த கருத்து என்றால் திமுகவிலும் பலருக்கு விடுதலை சிறுத்தைகள் கூட்டணி பற்றி சொந்த கருத்து உள்ளது. அது பற்றி ஊடகங்களில் பேசலாமா? என்று கேட்டிருக்கிறார்கள். அப்போது உதயநிதி, ‘அதெல்லாம் ஒன்றும் பேச வேண்டாம். அப்பாவிடம் ஆலோசித்து விட்டு நானே சொல்கிறேன்’ என்று அவர்களை சமாதானப்படுத்தியுள்ளார்.
இதே போல திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலினையும் சீனியர் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் அவரது உதவியாளர் தினேஷ் மூலம் தொடர்பு கொண்டு திருமா விவகாரத்தில் தங்களது வருத்தத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
’ஆதவ் அர்ஜுனா திமுகவை பற்றி தரக்குறைவாகவும் ஏடாகூடமாகவும் பேசுவதும் அதை திருமாவளவன் சுற்றி வளைத்து நேரடியாக பதில் சொல்லாமல் மழுப்புவதும் தொடர்கதையாகி வருகிறது.
96 இல் கலைஞரோடு கூட்டணி வைத்த மூப்பனார் ஒரு கட்டத்தில் தோழமைக் கட்சி என்பதை மறந்து அரசை விமர்சிக்க ஆரம்பித்தார். அப்போது கலைஞர் அதை கண்டு கொள்ள வேண்டாம் என்று திமுகவினரிடம் கூறினார். அதேபோல இப்போது மூப்பனாரின் சிஷ்யர் திருமா செய்து வருகிறார். இதை நாம் தொடர்ந்து அனுமதிக்கக் கூடாது. ஏனென்றால் எதிர்க்கட்சி என்ற நிலையில் இருந்து நம்மை விமர்சிப்பது வேறு. ஆனால் திருமா கொள்கை கூட்டணி என்று சொல்லும் நிலையில்… தனிப்பட்ட முறையில் தொடர்ந்து உதயநிதியை தாக்கும் வேலையை ஆதவ் அர்ஜுனா செய்து வருகிறார். இதை திருமாவும் வெளிப்படையாக கண்டிக்காமல் இரட்டை நிலைப்பாட்டை மேற்கொண்டு வருகிறார்.
விடுதலை சிறுத்தைகள் நம்மை தாராளமாக விமர்சிக்கலாம். ஆனால் கூட்டணியில் இருந்து வெளியேறி விமர்சிக்கலாம். கூட்டணிக்கு தலைமை தாங்குகிற நாம் (திமுக) இதற்கு மேல் பொறுமையாக செல்லக்கூடாது’ என்றெல்லாம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தங்களுடைய கருத்துக்களை எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.
இதற்கிடையில்தான் வேலூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் உதயநிதி, ‘சினிமா செய்திகளை நான் பார்ப்பதில்லை’ என்று விஜய் புத்தக வெளியீட்டு விழா பற்றி கமெண்ட் அடித்ததோடு… ‘அறிவு இல்லாம பேசுறாரு அந்தாளு’ என்று ஆதவ் அர்ஜுனா மீதும் கோபத்தைக் கொட்டியிருக்கிறார்.
அமைச்சர்கள் பலரும் இந்த விவகாரத்தில் விஜய்யை விளாசுகிறார்களே தவிர, திருமா மீது பாய்ச்சல் காட்டவில்லை.
இதே நேரம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள்ளும் சீனியர் நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருமாவளவனுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். ’ஆதவ் அர்ஜுனா மீது தற்காலிக ஒழுங்கு நடவடிக்கையாவது எடுத்தால் தான் உங்களது தலைமை மீதான நம்பிக்கை அதிகரிக்கும். கூட்டணி விஷயம் ஒரு பக்கம் இருந்தாலும், அவர் விசிக கட்டுப்பாட்டையே மீறியிருக்கிறார். உங்களை விட விஜய்தான் தலித் மக்களின் தலைவர் என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியிருக்கிறார். ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு கட்சி, கூட்டணி இரண்டின் ஒழுங்கையும் கெடுத்துவிடும்’ என்று திருமாவிடம் சொல்லியிருக்கிறார்கள்.
திருமாவும் இந்த விவகாரத்தில் பேசி முடிவு செய்வோம் என்று அவர்களுக்கு பதில் சொல்லியிருக்கிறார். இரு கட்சிகளுக்கு உள்ளேயும் இதுதான் இப்போது ஹாட் விவாதம்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
அரசியலில் பதில் சொல்லக்கூடிய அளவுக்கு விஜய் வளரவில்லை : ரகுபதி
”நானும் இறுமாப்போடு சொல்கிறேன்” : விஜய்க்கு கனிமொழி பதில்!
நான் தடுமாறுகிறேனா? திருமாவளவன் பதில்!