சனாதன கொள்கை குறித்து நான் கூறியதை திரித்து மக்களை பதற்றமடையை செய்யும் வகையில் பொய்யான செய்திகள் பரப்புவதை நிறுத்துங்கள் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் நேற்று ’சனாதன ஒழிப்பு மாநாடு’ நடைபெற்றது. இதில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர், சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே சிறந்தது என்றும், டெங்கு, மலேரியா, கொரோனா போன்ற தொற்று நோய்களை எதிர்க்க போராட மாட்டோம். ஒழித்துக்கட்டத் தான் முயற்சிப்போம். அதுபோல தான் சனாதனத்தையும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
உதயநிதி மீது வழக்கு?
உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு மாநில அரசியலைக் கடந்து தேசிய அளவிலும் விவாதத்திற்கு உள்ளாகி உள்ளது. அந்த வகையில், சனாதன தர்மத்தை இழிவுபடுத்திய உதயநிதி மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்ட உரிமை கண்காணிப்பகம் (Legal Rights Observatory- LRO) என்ற எக்ஸ் கணக்கில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், “கொண்டு வாருங்கள், நான் எந்த சட்ட சவாலையும் சந்திக்க தயாராக உள்ளேன். இது போன்ற காவி மிரட்டல்களுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். நாங்கள் பெரியார், அண்ணா மற்றும் கருணாநிதியை பின்தொடர்பவர்கள். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின் கீழ் சமூக நீதியை நிலைநாட்டுவோம்.
இதனை இன்றும் சொல்வேன், நாளையும் சொல்வேன், என்றென்றைக்கும் சொல்வேன். திராவிட மண்ணில் சனாதனத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எங்களது தீர்மானத்தில் இருந்து ஒரு துளி கூட பின்வாங்க மாட்டோம்” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இனபடுகொலைக்கு அழைப்பு?
அதனைத்தொடர்ந்து பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் அமித் மால்வியா தனது பதிவில், ”தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனும், திமுக அரசில் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும், வெறுமனே எதிர்க்கக்கூடாது என்று கருத்து தெரிவித்துள்ளார். சுருக்கமாகச் சொன்னால், சனாதன தர்மத்தைப் பின்பற்றும் பாரதத்தின் 80 சதவீத மக்களை இனப்படுகொலை செய்ய அவர் அழைப்பு விடுக்கிறார்.
திமுக எதிர்க்கட்சித் தொகுதியின் முக்கிய உறுப்பினராகவும், காங்கிரஸின் நீண்டகால கூட்டாளியாகவும் உள்ளது. இதுதான் மும்பை இந்தியா கூட்டணி சந்திப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டதா?” என்று அமித் மால்வியா கேள்வி எழுப்பியிருந்தார்.
பொய்யான செய்திகள் பரப்புவதை நிறுத்துங்கள்!
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உதயநிதி ஸ்டாலின், “நான் ஒருபோதும் சனாதன தர்மத்தை பின்பற்றும் மக்களை இனப்படுகொலைக்கு அழைத்ததில்லை. சனாதன தர்மம் என்பது சாதி, மத பெயரால் மக்களை பிரிக்கும் கொள்கை. அந்த கொள்கையை வேரோடு பிடுங்குவது மனித நேயத்தையும் மனித சமத்துவத்தையும் நிலை நிறுத்துவதாகும். இதனால் பாதிக்கப்படும் ஒடுக்கப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களின் சார்பாகவே பேசினேன். காவி மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டோம்.
நீதிமன்றமாக இருந்தாலும் சரி, மக்கள் மன்றமாக இருந்தாலும் சரி… எனக்கு வரும் சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.
அதேவேளையில் நான் கூறியதை திரித்து மக்களை பதற்றமடையை செய்யும் வகையில் பொய்யான செய்திகள் பரப்புவதை நிறுத்துங்கள் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
இன்பநிதி பாசறை: திமுக நிர்வாகிகள் சஸ்பெண்ட்!
வேலைவாய்ப்பு: இந்திய விமான ஆணையத்தில் பணி!