தமிழக துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை நவம்பர் 27ஆம் தேதி திமுகவினர் உற்சாகமாக கொண்டாட உள்ளனர்.
அவர் துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் கொண்டாடப்படும் முதல் பிறந்தநாள் என்பதால், தமிழகம் முழுவதும் இதனை விமரிசையாக கொண்டாட பல்வேறு நிகழ்ச்சிகள் திமுக தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக திமுக இளைஞரணியினர் உதயநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அதற்கான கொண்டாட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் உதயநிதியின் பிறந்தநாளையொட்டி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் அவரது பிறந்தநாள் பாடல் வெளியீட்டு விழா இன்று காலை நடைபெற்றது.
திமுக இளைஞரணி துணைச் செயலாளர் தூத்துக்குடி ஜோயல் வரிகளில் உருவான “தலைவனே..! இளம் தலைவனே…!” என்ற பாடலை பிரபல பின்னணி பாடகர் மனோ பாட, மாரிசக்தி இசையமைத்துள்ளார்.
இந்த பாடலை விழா பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட, இளைஞரணி துணைச் செயலாளர்கள் பெற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து கூட்டத்தில் அன்பில் மகேஷ் பேசுகையில், “உதயநிதி ஸ்டாலின் இன்று Deputy சிஎம். ஆனால் ஒருநாள் அவர் Definitely சிஎம்” என்று பேச, அங்கிருந்த நிர்வாகிகள் எழுப்பிய கோஷம், விழா அரங்கம் முழுவதும் எதிரொலித்தது.
தொடர்ந்து பேசிய அவர், “துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பின் தொடர்கிற இளைஞரணியில் உள்ள பலருக்கும் காதல் உண்டு. அவர் எங்குமே சிடுசிடு என்று இருக்கமாட்டார். ஆனால் கொள்கை என்று வந்தால் அவ்வளவு பிடிப்புடன் இருக்கிறார். இந்தியா முழுவதும் ஒரு விஷயத்திற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியபோது, நான் கலைஞரின் பேரன் என சென்று கொண்டே இருந்தார்.
அவரிடம் உள்ள நக்கல் நையாண்டி, அவரது தாத்தா கலைஞர் போன்றே உள்ளது. எப்போதும் டீசர்ட் போட்டிருக்கீங்களே, இதுகுறித்து எதிர்க்கட்சிக்காரங்க பேசிக்கிட்டே இருங்காங்களே என்று கேட்டால், ‘நானாச்சு டீசர்ட் போட்டிருக்கேன், அவங்க அதுகூட இல்லாம கூவத்தூர்ல போட்ட ஆட்டத்த மறக்க முடியுமா’னு திருப்பி கேட்கிறார்.
தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களை எல்லாம், ’விழுகின்ற கற்கல் விழுந்த இடத்திலேயே மூழ்கி போக, நிற்காமல் செல்லும் நதி’ போல சென்று கொண்டிருக்கிறார்.” என்று அன்பில் மகேஷ் பேசினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
அதானி விவகாரம் … மோடி மீது குற்றச்சாட்டு வைக்க ராமதாஸ் தயாரா?: வைகோ கேள்வி!
வங்கக்கடலில் உருவாகிறது ‘ஃபெங்கல்’ புயல்… 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!