திமுகவில் இருக்கும் சாதி பாகுபாட்டை உதயநிதி களைவார்: பா.ரஞ்சித் நம்பிக்கை!

அரசியல்

திமுகவில் இருக்கும் சாதி பாகுபாட்டை அமைச்சர் உதயநிதி அறிந்திருப்பார் என்றும் மாமன்னன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அதை களைவதற்கான வேலையை ஆரம்பிப்பார் என்று நம்பிக்கை கொள்வதாக இன்று (ஜூலை 3) இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.

பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘மாமன்னன்’. இந்த படத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.

மாமன்னன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜுக்கு அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் நேற்று(ஜூலை 2) சொகுசு கார் ஒன்றை பரிசாக வழங்கியது.

இந்நிலையில், மாமன்னன் வெற்றியை பாராட்டியுள்ள இயக்குநர் பா.ரஞ்சித் , திமுக வில் இருக்கும் சாதி பாகுபாட்டை அமைச்சர் உதயநிதி அறிந்திருப்பார் என்றும் மாமன்னன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அதை களைவதற்கான வேலையை ஆரம்பிப்பார் என்று நம்பிக்கை கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இயக்குநர் பா.ரஞ்சித் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,”மாமன்னன் திரைப்படம், பட்டியலின மக்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நீதியை கொள்கையாக கொண்டுள்ள அரசியல் கட்சியாக இருந்தாலும், கட்சியில் உள்ள மற்ற உயர் வகுப்பினர் சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை அவர்களுக்கு எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறது.

உண்மையாகவே தனித்தொகுதி சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரம் என்னவாக இருக்கிறது? ஏன் பட்டியலின மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க பயப்படுகிறார்கள்? சமூக நீதி பேசுகிற கட்சிகளில் இருந்தும் ஊமைகளாக இருப்பதற்கான காரணம் என்ன?அவர்களுக்கான அங்கீகாரமும், அதிகாரமும், பிரதிநிதித்துவமும் சரியாக தரப்படுகிறதா? என்பதற்கான சான்று மாமன்னன்.

உண்மையாகவே பெரும் பாராட்டுக்குரியவர் நடிகர், தயாரிப்பாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக கட்சியில் இன்றுவரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை அவரும் அறிந்தே இருப்பார், அதை களைவதற்கான வேலையை இத்திரைப்படத்தின் வாயிலாக ஆரம்பிப்பார் என்று நம்பிக்கை கொள்வோம்.

பொட்டி பகடை, வீராயி, ஒன்டிவீரன் என அருந்ததிய மக்களின் வாழ்க்கையின் ஊடாக மாமன்னனை உருவாக்கி பெரும் வெற்றியை பெற்ற மாரி செல்வராஜ், வடிவேலு மற்றும் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்!” என்று கூறியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

தக்காளி விலை குறைந்தது!

விம்பிள்டன்: பெடரர் சாதனையை சமன் செய்வாரா ஜோகோவிச்?

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *