வைஃபை ஆன் செய்ததும் திமுக தலைமையகமான அறிவாலயத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு நடத்திவரும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை புகைப்படங்கள் இன்பாக்சில் விழுந்தன.
அவற்றைப் பார்த்தபடியே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
”நாடாளுமன்றத் தேர்தல் பணிகளுக்காக திமுக தலைமை குழுக்களை அமைத்துள்ளது. அதில் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு ஒவ்வொரு மாவட்டமாக திமுக நிர்வாகிகளை அறிவாலயத்துக்கு வரவழைத்து சந்தித்து வருகிறது, முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு, அமைச்சர் வேலு, அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர் உதயநிதி ஆகியோர் இந்த தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவில் இடம்பெற்றிருக்கிறார்கள்.
இந்த குழுவின் நடுநாயகமாக அமைச்சர் உதயநிதி அமர்ந்திருக்கிறார். அவருக்கு இரு புறமும் ஆர்.எஸ்.பாரதி, தங்கம் தென்னரசு மற்றும் நேரு, வேலு ஆகியோர் அமர்ந்திருக்கிறார்கள்.
ஏற்கனவே கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளை ஒருங்கிணைப்புக் குழுவினர் சந்தித்த நிலையில் இன்று (ஜனவரி 27) சேலம், கோவை மாவட்ட நிர்வாகிகளை சந்தித்தனர்.
சேலம் மாவட்டம் திமுகவுக்கு மிக முக்கியமான மாவட்டம். அதுவும் அமைச்சர் உதயநிதிக்கு மேலும் முக்கியமானது. இளைஞரணி மாநில மாநாட்டை நடத்த சேலத்தைத் தேர்ந்தெடுத்தது உதயநிதிதான். அம்மாவட்டத்தில் திமுக பலவீனமாக இருக்கிற நிலையில் அதை பலப்படுத்தவே சேலத்தில் மாநாட்டை வைத்தார் உதயநிதி. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 11 தொகுதிகளில் ஒரு தொகுதியில்தான் திமுக ஜெயித்தது. மேலும் இது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமும் கூட.
இந்த நிலையில்தான் சேலம் நிர்வாகிகளை சந்தித்தார்கள் உதயநிதி தலைமையிலான குழுவினர். இந்த சந்திப்பின்போது 2019 சேலம் எம்பி தேர்தலில் திமுக பெற்ற வாக்குகள், 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக பெற்ற வாக்குகள், அதன் பின் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெற்ற வாக்குகள் எண்ணிக்கையை கையில் புள்ளி விவரமாக வைத்திருந்தார் உதயநிதி.
அதை வைத்துக் கொண்டு, ‘எம்பி தேர்தல்ல ஜெயிச்சிருக்கோம். உள்ளாட்சித் தேர்தல்ல ஜெயிச்சிருக்கோம். ஆனா சட்டமன்றத் தேர்தல்ல மட்டும் ஏன் நம்ம வாக்குகள் அதிமுகவுக்கு போச்சு?’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். நிர்வாகிகள் அதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலை சொல்லியிருக்கிறார்கள்.
இதையடுத்து சேலம் கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட வீரபாண்டி தொகுதிக்குள் வரும் பனைமரத்துப்பட்டி ஒன்றிய செயலாளர் உமாசங்கர் உள்ளிட்ட சில நிர்வாகிகளை மட்டும் தனியாக சந்தித்துப் பேசினார்கள் உதயநிதி மற்றும் குழுவினர். உமா சங்கரிடம், ‘நீங்க ரொம்ப கோஷ்டிப் பூசல் பண்றீங்கனு தொடர்ந்து புகார் வருது. அனுசரிச்சு போங்க… ‘என்று சற்றே எச்சரிக்கை கலந்து அறிவுறுத்தியிருக்கிறார் உதயநிதி,.
கிழக்கு மாவட்டச் செயலாளரான சிவலிங்கத்திடம், ‘அண்ணா… உங்களை பத்தியும் நிறைய புகார்கள் வருதுண்ணா… பாத்துக்கங்க’ என்று கூறியுள்ளார்.
அதன்பின் பொதுவாக நிர்வாகிகளிடம் பேசிய அமைச்சர் உதயநிதி, ‘நமக்கு கிடைச்ச விவரங்கள்படி சேலம் திமுகவுல இன்னும் ஒற்றுமை வரலைங்குற மாதிரிதான் தெரியுது. அதிமுகவுல எடப்பாடி சேலம் தொகுதிய வெற்றி பெற கடுமையா முயற்சி பண்ணுவாரு. நாம ஒத்துமையா வேலை பார்க்கணும். இப்போதைய நிலவரப்படி நமக்கு சேலம் டஃப்பாதான் இருக்கு. ஆனா நீங்க ஒத்துமையா இருந்து செயல்பட்டா ஜெயிச்சுடலாம்’ என்று சொல்லியனுப்பியிருக்கிறார் உதயநிதி” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ரக்ஷனின் காதல் கதை… மறக்குமா நெஞ்சம் டீசர் ரிலீஸ்!
எழில் 25: தேசிங்கு ராஜா 2 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!