வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் திரைத்துறை ரீதியாக மட்டுமல்ல அரசியல் ரீதியாகவும் பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
வாரிசு வெளியாகும் அதே பொங்கல் அன்று அஜித்குமார் நடித்து வினோத் இயக்கத்தில் துணிவு படமும் வெளியாகிறது. இந்த துணிவு படத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடைய ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இங்கிருந்து தான் வாரிசுக்கும் துணிவுக்கும் இடையில் சினிமா மோதல் அரசியல் மோதலாகவும் ஆரம்பமானது.
உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வசம் தமிழகத்தின் பெரும்பாலான தியேட்டர்கள் இருப்பதால் அவர்கள் துணிவு படத்துக்காக அதிக தியேட்டர்களை ஒதுக்கி உள்ளார்கள் என்றும் வாரிசு படம் வெளியிட தியேட்டர்கள் சிரமமாக இருக்கிறது என்றும் டிசம்பர் முதல் வாரத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தகவல்கள் வெளியாகின.
இது பற்றிய உறுதிப்படுத்தப்படாத கருத்துக்கள் இரு தரப்பில் இருந்தும் வெளியாகிக் கொண்டே இருந்த நிலையில் டிசம்பர் 15 ஆம் தேதி வாரிசு படத்தின் தயாரிப்பாளரான தெலுங்கானாவைச் சேர்ந்த தில் ராஜு கொடுத்த பேட்டி தமிழ்நாட்டு சினிமாவிலும் அரசியலிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
“தமிழ்நாட்டில் அஜித்தை விட விஜய் தான் மாஸ் ஹீரோ எனவே உதயநிதி ஸ்டாலின் துணிவு படத்துக்கும் இணையான தியேட்டர்களை ஒதுக்க வேண்டும். இது என் பிசினஸ். இது தொடர்பாக தேவைப்பட்டால் உதயநிதி ஸ்டாலினை சந்திப்பேன்” என்று தெரிவித்த தில் ராஜு சென்னைக்கும் வந்திருந்தார்.
உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தரும் நெருக்கடி காரணமாக விஜய் படத்துக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று பேசப்பட்ட தகவல்களை தில் ராஜூவின் பேட்டி உறுதிப்படுத்தியது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக டிசம்பர் 16ஆம் தேதி வாரிசு படத்தின் சென்னை, செங்கல்பட்டு, தென்னார்க்காடு, வட ஆற்காடு, கோவை ஏரியாக்களை உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாரிசு படத்தின் திருநெல்வேலி -கன்னியாகுமரி உரிமையை ஸ்ரீ சாய் கம்பைன்ஸ் முத்துக் கனியும், மதுரை ஏரியா உரிமையை 5 ஸ்டார் பிலிம்ஸ் நிறுவனமும், திருச்சி தஞ்சாவூர் உரிமையை விஎஸ் பாலமுரளி, சேலம் விநியோக உரிமையை செந்திலும் பெற்றிருக்கிறார்கள்.
இந்த ஏரியாக்களை தவிர சென்னை கோயம்புத்தூர் தென்னார்க்காடு வட ஆற்காடு செங்கல்பட்டு ஆகிய முக்கிய ஏரியாக்களை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.
இது பற்றி விஜய் வட்டாரத்திலும் உதயநிதி வட்டாரத்திலும் பேசும்போது பல சுவாரஸ்யங்கள் கிடைத்தன.
“வாரிசு படத்துக்கு முக்கியமான ஏரியாக்களில் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதை உணர்ந்த விஜய் இதை தான் வெளிப்படையாக பேசினால் பெரிய அளவில் சர்ச்சை ஏற்படும் என்பதால் தனது தயாரிப்பாளர் தில் ராஜுவிடம் கூறி அவர் மூலமாகவே பேச சொல்லி உள்ளார். இந்த பின்னணியில்தான் விஜய் பட தயாரிப்பாளர் தில் ராஜூ உதயநிதிக்கு வெளிப்படையாகவே வேண்டுகோள் வைத்தார்.
இதில் பாதிக்கப்பட போவது தனது பிசினஸ் என்பதால் அவர் உதயநிதி தரப்பிடம் பேசி இந்த டீலுக்கு ஓகே செய்ய வைத்திருக்கிறார். வாரிசு படம் வெற்றிகரமாக ஓடினால் உதயநிதிக்கும் அதற்கு ஈடான வெளியீட்டு லாபம் கிடைக்கப் போகிறது. இந்தப் புரிந்துணர்வின் அடிப்படையில் தான் தமிழகத்தின் பாக்ஸ் ஆபிஸில் எழுபது சதவீதத்தை நிர்ணயிக்கும் சென்னை, செங்கல்பட்டு, தென்னாற்காடு, வட ஆற்காடு மற்றும் கோவை விநியோக உரிமையை உதயநிதி பெற்றிருக்கிறார்.
இதில் இப்பொழுது இன்னொரு விஷயமும் சேர்ந்து கொண்டுள்ளது. வரும் 24ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் நடக்க இருக்கிறது.
கடந்த சில திரைப்படங்களுக்கு விஜய் ஆடியோ வெளியீட்டு விழாக்களில் நிகழ்த்திய உரைகள் மிகவும் பிரபலமாக பேசப்பட்டன. இடையில் கொரோனா காரணமாக பீஸ்ட் படத்துக்கு ஆடியோ லான்ச் விழாவே நடக்கவில்லை.
அதற்கு பதிலாக தான் சன் டிவியில் பல வருடங்களுக்கு பிறகு சிறப்பு பேட்டி கொடுத்தார் விஜய். இந்த நிலையில் வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் பேச போகும் உரையை அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
ஏற்கனவே ஆடியோ வெளியீட்டு விழாக்களில் விஜய் பேசிய பஞ்ச் டயலாக்குகள் அவரது பட டயலாக்கை விட அதிக புகழ் பெற்றன.
இந்த சூழலில் வாரிசு படத்தின் வெளியீட்டு உரிமை விவகாரத்தில் உதயநிதிக்கும் விஜய்க்கும் மோதல் நடந்திருப்பதை போன்ற தோற்றம் ஏற்பட்டுவிட்ட நிலையில்… வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாவில் உதயநிதியையும் விஜய்யையும் ஒரு சேர கலந்து கொள்ள வைப்பதற்கு சிலர் முயற்சித்து வருகிறார்கள்.
உதயநிதி தற்போது விளையாட்டுத் துறை அமைச்சர் ஆகி விட்டார். அவரது துறைக்கு உட்பட்ட நேரு விளையாட்டு அரங்கில் தான் இந்த நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. மேலும் தனது அரசு அதிகாரத்தை பயன்படுத்தி உதயநிதி விஜய் படத்துக்கு சிக்கல் கொடுத்ததாக ஒரு சலசலப்பு கிளம்பி இருக்கிறது.
இந்த சர்ச்சைக்கு முடிவு கட்டும் விதத்தில் ஆடியோ லான்ச் விழாவில் உதயநிதி கலந்து கொண்டால், தான் எல்லோருக்கும் பொதுவானவன் என்ற அவரது பிம்பத்தை உறுதிப்படுத்தலாம் என்று உதயநிதியிடம் அவரது நலம் விரும்பிகள் கூறியிருக்கிறார்கள்.
அதேபோல விஜய் இன்னும் நேரடி அரசியலில் இறங்காத நிலையில் இப்போது உதயநிதியை தேவையில்லாமல் எதிர்த்துக் கொள்ள வேண்டாம் என்றும் அவரை ஆடியோ லான்ச்சுக்கு அழைப்பதன் மூலம் விஜய்யின் இமேஜ் உயர வாய்ப்புள்ளது என்றும், அவரிடமும் சிலர் தெரிவித்துள்ளனர்.
விஜய்க்கும் உதய்க்கும் பொதுவான சிலர் இந்த வாரிசு வெளியீட்டு விழாவில் இருவரையும் ஒருசேர மேடை ஏற்ற முயற்சித்து வருகிறார்கள்.
நடக்குமா என்பது டிசம்பர் 24 ஆம் தேதி தெரிந்துவிடும்!
-ஆரா
“விவசாயத்தையே நம்பி இருக்க முடியாது” – ஆ.ராசா பேச்சு!
ராகுல் காந்தியின் அழைப்பு: கமல்ஹாசனின் முடிவு!