பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன், துணை முதல்வர் உதயநிதி கிரிவலம் சென்றது தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று சொன்னதற்கு அவர் இன்று (அக்டோபர் 19) பதிலளித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் நேற்று(அக்டோபர் 18) திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்றார். அப்போது கிரிவலம் பாதையையும் ஆய்வு செய்தார்.
இது தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் இன்று பத்திரிகையாளர் சந்திப்பில், “உதயநிதி கிரிவலம் சென்றுள்ளார். பவன் கல்யாண் சொன்னது தம்பி உதயநிதி மனதில் தைத்து விட்டது என்று நான் நினைக்கிறேன்.
அதனால் அதிகப்படியான மக்கள் வருகிற கிரிவலத்திற்கு ஏற்பாடு செய்ததற்கு மகிழ்ச்சி. ஐம்பது லட்சத்திற்கு மேலான மக்கள் கிரிவலத்திற்கு வருவார்கள், அவர்களுக்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
அதனால் தவறுகளை திருத்திக்கொண்டு உதயநிதி கிரிவலம் போக ஆரம்பித்திருக்கிறார் என்பது எனக்கு மகிழ்ச்சிதான்” என்று தமிழிசை கூறினார்.
இதற்கு உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அதில் “இந்நாள் ஆரியநர் செய்யும் சூழ்ச்சிகளை சுட்டிக்காட்டினால், முன்னாள் ஆளுநர் அக்காவுக்கு கோபம் வருகிறது.
அக்கா அவர்களே, திருவண்ணாமலையில் ‘கிரி’வலம் வரும் பக்தர்களுக்கு எல்லா வசதிகளும் ‘சரி’யாக இருக்கிறதா என்று ஆய்வு தான் செய்தோம். நீங்கள் குதூகலிப்பது போல அது கிரிவலம் அல்ல – ‘சரி’ வலம்.
ஓடாத தேரை ஓட வைத்தவர் கலைஞர். ஆயிரக்கணக்கான கோவில்களுக்கு திருப்பணிச் செய்தவர் எங்கள் முதல்வர். ‘எல்லோருக்கும் எல்லாம்’ என உழைக்கும் எங்களைப் போன்ற மக்கள் பிரதிநிதிகளைப் பார்த்தால், மக்களால் பல முறை நிராகரிக்கப்பட்ட அக்காவுக்கு கோபம் வரத்தான் செய்யும்.
நியாயம் தானே. நீங்கள் எவ்வளவு சத்தமிட்டாலும், அரசியலும் – ஆன்மீகமும் தமிழ்நாட்டில் என்றைக்கும் கலக்காது. ஒன்றிய அரசின் ‘டி.டி. தமிழை’ப்போல் – அக்காவும் இந்திக்கு வக்காலத்து வாங்கும் துரோகத்தை, தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்” என்று தமிழிசை சவுந்தரராஜனுக்கு பதிலளித்துள்ளார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
என் மகனே மீண்டும் பிறந்திருக்கிறான் – தர்ஷனால் கொல்லப்பட்ட ரேணுகாசாமி தந்தை உருக்கம்!
‘திராவிட நல் திருநாடு’: கவனச் சிதறலும் கவனமிகு தொடர்ச்சியும்!
தீட்சிதர்கள் கடவுளுக்கு மேலானவர்களா? : உயர் நீதிமன்றம் கேள்வி!