மத அரசியலா? மனித அரசியலா? ஒரு கை பார்த்து விடுவோம்: உதயநிதி
திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் ஜனவரி 21-ஆம் தேதி நடைபெற்றது. சேலத்தில் நடைபெற்ற மாநாடு என்பது மதநல்லிணக்க மண் தான் தமிழ்நாடு என்பதை உணர்த்தியிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்தநிலையில், இளைஞரணி மாநாட்டின் வெற்றியால், நாடாளுமன்ற தேர்தலில் வெல்லப்போவது சமூக நீதியும், சமுத்துவமுமே என்று இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் இப்படி ஒரு மாநாடு நடந்திடவேயில்லை என்கிற வகையில், திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டை வெற்றி மாநாடாக நடத்தி முடித்துள்ளோம்.
மாநில உரிமை மீட்பு முழக்கத்தை முன் வைத்து நடைபெற்ற மாநாட்டின் வெற்றிக்காக உழைத்த திமுக நிர்வாகிகள் இளைஞரணி நிர்வாகிகள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வழக்கமாக தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் மாநாட்டினை நடத்துவார்கள். ஆனால், இந்த முறை நம் திமுக இளைஞர் அணிக்கு மாநாடு நடத்துகிற வாய்ப்பை தலைவர் ஸ்டாலின் அளித்தார்கள்.
2007 ஆம் ஆண்டு இளைஞரணியின் முதல் மாநில மாநாட்டை நடத்திக் காட்டிய நம் முதலமைச்சர், 2024-ல் இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டை நடத்திட பணித்ததோடு, அதற்கான ஊக்கத்தையும் – உற்சாகத்தையும் தந்தார். நம் முதலமைச்சர் அவர்களுக்கு என் அன்பும், நன்றியும்.
வீரபாண்டியாரின் சேலம் மண்ணில் இந்த மாநாட்டை நடத்துவது என்று முடிவான போதே, இந்த மாநாட்டின் வெற்றியும் தீர்மானிக்கப்பட்டுவிட்டது.
பொதுவாகவே, அரசியல் கட்சிகளின் மாநாடு என்றால் சிலர் திட்டமிட்டு மக்கள் மத்தியில் ஒரு விதமான எதிர்மறை எண்ணத்தை கிளப்பி விடுவார்கள்.
ஆனால், இந்த மாநாடு அந்த எதிர்மறை எண்ணங்களை நேர்மறையாக மாற்றி இருக்கிறது.
அந்த அளவுக்கு கட்டுப்பாடு காத்து மாநாட்டின் வெற்றிக்கு ஒத்துழைத்த இளைஞர் அணியின் தோழர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
மாநாட்டுக்கு முந்தைய நாள் நிகழ்ச்சிகளே, மாநாட்டின் வெற்றியை முன்னறிவிப்பு செய்கின்ற வகையில் நடைபெற்றன.
திராவிட இயக்க மாநாடுகளில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் தான் நாட்டின் எதிர்காலச் சட்டங்கள் என்பார்கள். அந்த வகையில் நமது மாநாட்டுத் தீர்மானங்கள் அத்தனையும் ஆதிக்கத்தையும் – பாசிஸ்ட்டுகளையும் குறிவைத்து தாக்கும் கொள்கை ஏவுகணைகள்.
எனவே, மாநாடு முடிந்து விட்டது சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம் என்று இளைஞர் அணி தோழர்கள் எண்ணிவிட வேண்டாம். நாடாளுமன்ற தேர்தல் மிக அருகில் வந்துவிட்டது இதுவரை உழைத்துவிட்டு இனி ஓய்வெடுத்தால் அது முயல் – ஆமை கதையாய் முடிந்து விடும். உங்களின் சுறுசுறுப்பை நீங்கள் மேலும் கூட்ட வேண்டும். நமது மாநாட்டின் நோக்கம் “மாநில உரிமை மீட்பு” . அந்த நோக்கத்தை நாம் வென்றாக வேண்டுமென்றும்.
இன்னார்க்கு இன்னது என்று சொல்லும் பாசிஸ்ட்டுகளையும் – அவர்களுக்கு ஆமாம் சாமி போடுபவர்களையும் தேர்தல் களத்தில் வீழ்த்திடுவோம். எல்லாருக்கும் எல்லாம் எனும் திராவிட மாடல் தத்துவம் இந்தியா முழுவதும் பரவுகின்ற வகையில் அயராது உழைக்க இளைஞரணி மாநாடு எல்லோருக்கும் உத்வேகம் தந்திருக்கிறது.
மத அரசியலா – மனித அரசியலா? மனு நீதியா – சமூக நீதியா? மாநில உரிமையா? – பாசிச அடக்குமுறையா? என ஒரு கை பார்த்து விடுவோம். வெல்லப்போவது சமூக நீதியும் சமத்துவமுமே என்பதை இளைஞர் அணி மாநில மாநாடு நமக்கு கோடிட்டு காட்டியிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தங்கம், வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!
தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை!