தமிழக சட்டமன்றத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவை கடந்த செப்டம்பர் 29-ஆம் தேதி மாற்றியமைக்கப்பட்டது. விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார்.
கே.ராமச்சந்திரன், செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டனர். புதிதாக பனமரத்துப்பட்டி ராஜேந்திரன், சா.மு.நாசர், கோவி.செழியன் ஆகியோர் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டனர்.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த செந்தில் பாலாஜிக்கு, முன்பு அவர் வகித்து வந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை இலாகா மீண்டும் ஒதுக்கப்பட்டு அமைச்சராக்கப்பட்டார்.
இதனையடுத்து அமைச்சரவையில் முதல்வர் ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோருக்கு அடுத்தபடியாக உதயநிதி ஸ்டாலினுக்கு மூன்றாவது இடம் வழங்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.
அமைச்சரவை மாற்றத்திற்குப் பிறகு சட்டமன்ற கூட்டத்தொடர் முதல்முறையாக இன்று கூடியது. காலை 9.30 மணிக்கு தொடங்கியவுடன் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தொடரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோருக்கு அடுத்தபடியாக உதயநிதி உட்கார்ந்துள்ளார்.
விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது உதயநிதிக்கு முதல் வரிசையில் 13-வது இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…