விக்கிரவாண்டி தேர்தல்: 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி… உதயநிதி பிரச்சாரம்!

Published On:

| By Selvam

விக்கிரவாண்டி தொகுதியில் ஜூலை 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை ஒட்டி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜூலை 7) பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய உதயநிதி,

“நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் வெற்றி பெற வைத்த தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட விக்கிரவாண்டியில் விசிக வேட்பாளர் ரவிக்குமார் 8,000 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் புகழேந்தி 10 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்தமுறை அன்னியூர் சிவாவை குறைந்தது 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.

கடந்த மூன்று வருடங்களில் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு ஒவ்வொரு திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் பார்த்து பார்த்து செய்து வருகிறார். தேர்தல் அறிக்கையில் சொன்னது போல பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டது, அதேபோல ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டது,

கடந்த மூன்று வருடங்களில் மகளிர் விடியல் பயணம் திட்டத்தின் மூலமாக 500 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், விக்கிரவாண்டி தொகுதியில் மட்டும் 8 கோடி முறை விடியல் பயண திட்டத்தின் மூலமாக மகளிர் பயன்பெற்றுள்ளார்கள்.

அதேபோல புதுமை பெண் திட்டத்தின் மூலமாக 2.72 லட்சம் மாணவிகள் மாதம் ரூ.1000 பயன்பெறுகிறார்கள். விக்கிரவாண்டி தொகுதியில் 10 ஆயிரம் மாணவிகள் ரூ.1000 வாங்கி வருகிறார்கள்.

காலை உணவு திட்டத்தின் மூலமாக 31 ஆயிரம் அரசு பள்ளிகளில் தினமும் காலையில் 17 லட்சம் மாணவர்கள் தரமான உணவு சாப்பிடுகிறார்கள். விழுப்புரம் மாவட்டத்தில் 60 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுகிறார்கள்.

இந்த மாவட்டத்தில் மட்டும் 60 ஆயிரம் பேர் மகளிர் உரிமை தொகை பெற்று வருகிறார்கள். இப்படிப்பட்ட திட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்பட வேண்டும் என்றால், திமுகவுக்கு ஆதரவளியுங்கள்” என்று உதயநிதி தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“ஒரு மாதத்தில் 133 கொலைகள்”: சீமான் காட்டம்!

கபில் தேவ், தோனி வரிசையில் ரோகித்…. புகழ்ந்து தள்ளிய சுனில் கவாஸ்கர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share