“பாஜக என்ற விஷப்பாம்பை ஒழிக்க வேண்டும்” – உதயநிதி

தமிழ்நாடு நிம்மதியாக இருக்க பாஜக என்ற விஷப்பாம்பை ஒழித்து அதிமுக என்ற குப்பையை அழிக்க வேண்டும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நெய்வேலி சட்டமன்றத் தொகுதி திமுக எம்எல்ஏ, சபா ராசேந்திரன் இரா. அங்கையர்கண்ணி தம்பதிகளின் மகன் சுமந்த்க்கும், கடலூர் ஒன்றிய திமுக அவைத்தலைவர் சாரங்கபாணி செல்வராணி தம்பதிகளின் மகள் தனரஞ்சினிக்கும் திமுக இளைஞர் அணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று திருமணம் நடைபெற்றது.

திருமண நிகழ்ச்சியில் வரவேற்று பேசிய அமைச்சர் சி.வி கணேசன், “கலைஞரும் பேனாவும் போல, கலைஞரும் கடலும் போல இந்த மணமக்களும் வாழவேண்டும்” என வாழ்த்தி பேசினார்.

காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, தவாக தலைவர் வேல்முருகன், அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான், எம்ஆர்கே பன்னீர்செல்வம், சிவசங்கர் ஆகியோர் மணமக்களை வாழ்த்தி பேசினார்கள்.

உதயநிதி வாழ்த்தி பேசியபோது, “எல்லோரும் குறிப்பிட்டதைப் போல இது சுயமரியாதை திருமணம். அதைவிட எனக்கு மகிழ்ச்சி இது காதல் திருமணம். இந்த திருமண நிகழ்ச்சி மாநாடு போல் நடக்கின்றது. எங்கள் குடும்ப திருமணத்திற்கு வந்துருக்கீங்க என்று சபா பேசினார். அதில் ஒரு திருத்தம். உங்கள் வீட்டு திருமணம் எங்கள் வீட்டு திருமணம் என்று பிரித்து பேசாதீங்க. இது நம்ம வீட்டு திருமணம். கலைஞர் வீட்டு திருமணம்” என்றவர்,

“மணமக்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் புரிந்துகொண்டு வாழவேண்டும். பகுத்தறிவோடு, சுய மரியாதையோடு நடக்கவேண்டும். அதிமுகவில் ஒபிஎஸ் அணி, இபிஎஸ் அணி, சசிகலா அணி, தீபா அணி, தீபா டிரைவர் அணி, டிடிவி அணி இப்படி பல அணிகள் உள்ளது.

குடும்ப வாழ்க்கை என்று வந்துட்டால் மாமியார் அணி மருமகள் அணி என பிரிந்திருக்கக்கூடும். அதையெல்லாம் சமாளித்து, நம்ம மதச்சார்பற்ற அணியைப் போல வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் வெற்றிப் பெறக்கூடிய அணியாக இருக்க வேண்டும்.

சபா ராசேந்திரன் சீனியர். மூன்று முறை எம்எல்ஏ வாக இருந்தவர். மக்கள் சேவை செய்துவருகிறார். சொந்த செலவில் 40க்கும் மேற்பட்ட ஏரிகளை தூர் வாரியிருக்கிறார். பெரிய அளவில் வேலைவாய்ப்பு நடத்தி இந்த தொகுதியில் 15 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வாங்கி கொடுத்துள்ளார்.

கலைஞர் ஒரு கதை சொன்னது ஞாபகம் வருகிறது. ஒரு நாள் ஒரு விஷ பாம்பு வீட்டுக்குள் வந்துவிட்டது. உடனே தடி எடுத்து அடித்ததும் வெளியே போய்விட்டது. அடித்த பாம்பு எப்படி வீட்டுக்குள் வந்தது என்று பார்த்தால் வெளியில் குப்பை இருந்துள்ளது. நான் விஷ பாம்பு என்று சொன்னது மத்தியில் ஆளக்கூடிய பாஜக. குப்பை என்று சொன்னது அதிமுக. வீடு என்று சொன்னது தமிழகம். நாம் நிம்மதியாக வாழ விஷ பாம்பை ஒழித்து அதிமுக என்ற குப்பையை அழிக்க வேண்டும்” என்றார்.

இறுதியாக முதல்வர் ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தும் ஆறு நிமிடங்கள் வீடியோவை ஸ்கிரீனில் போட்டுக்காட்டி அனைவரும் பார்த்தனர்.

வணங்காமுடி

இம்மானுவேல் சேகரன் நினைவு தினம்: ராமநாதபுரத்தில் போலீஸ் குவிப்பு!

சென்னை: டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் உயிரிழந்த சோகம்!

 

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts