வைஃபை ஆன் செய்ததும் புதிய அமைச்சர் உதயநிதிக்கு பல்வேறு சீனியர் அமைச்சர்கள் வாழ்த்து சொல்வதும், சட்டமன்ற அரசு கொறடாவான கோவி.செழியன் காலில் விழுந்து வணங்குவதும் வீடியோக்களாக இன்ஸ்டாகிராமில் வந்தன. அவற்றைப் பார்த்து விட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் விளையாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பு ஏற்றுக் கொண்டாலும் கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் அதிகாரம் செலுத்தும் சூப்பர் பவர் அமைச்சராகவே அவர் கருதப்படுகிறார். அதற்கு ஏற்ற வகையில் பதவியேற்ற அன்றே அமைச்சரவையில் பத்தாவது இடத்தில் அவரது சீனியாரிட்டி உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இதுவரை முதல்வரிடம் நேரடியாக தெரிவிக்க முடியாத தங்கள் கோரிக்கைகளையும் குறைகளையும் இனி உதயநிதி மூலம் முதல்வரிடம் சென்று சேர்த்து விடலாம் என்பதுதான் அமைச்சர்களின் செயல்பாடாக இருக்கிறது.
உதயநிதி அமைச்சராவது உறுதி என்று கடந்த ஒரு வாரமாகவே தகவல்கள் பரவிய நிலையில், அப்போதிலிருந்தே சீனியர் அமைச்சர்கள் முதல் ஜூனியர் அமைச்சர்கள் வரை உதயநிதியை சந்தித்து தங்களது ஒன்றரை வருட அமைச்சக அனுபவங்களை குமுறல்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
குறிப்பாக, தங்களது துறைக்கு செயலாளராக இருக்கும் அதிகாரிகளோடு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை முதல்வரிடம் அவ்வப்போது தெரிவிக்க முயன்றும் முடியாமல் போனதால், அவற்றையெல்லாம் உதயநிதி ஸ்டாலினை தேடிச் சென்று கொட்டியிருக்கிறார்கள்.
காவிரி – குண்டாறு விவகாரத்தில் மிக மூத்த அமைச்சரான நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் முதல்வர் ஸ்டாலினிடம் சில விஷயங்களை உடனடியாகத் தெரிவிக்க விரும்பியிருக்கிறார்.
ஆனால் அவரால் முதல்வரை உடனடியாக தொடர்பு கொள்ள முடியவில்லை. துரைமுருகனுக்கே இந்த நிலை என்றால் மற்ற அமைச்சர்களின் நிலை என்ன என்பதை நினைத்துப் பாருங்கள். அதனால் தான் உதயநிதியைத் தேடிச் செல்கிறோம் என்கிறார்கள் அமைச்சர்கள்.
ஒரு துறையின் செயலாளராக இருக்கும் பெண் அதிகாரி தன்னை மதிப்பதே இல்லை என்றும், ரெவியூ மீட்டிங்குக்கு கூட வருவதில்லை என்றும் ஒரு அமைச்சர் உதயநிதியிடம் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்ல, அந்த அதிகாரியின் கணவர் ரூ.10 கோடி செலவில் ஒரு பங்களா கட்டி வருகிறார்.
அந்தத் துறை மூலம் வட நாட்டு நிறுவனங்களுக்கு அதிக சாதகங்கள் செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டு நிறுவனங்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்றும் அந்த அமைச்சர் உதயநிதியிடம் தெரிவித்துள்ளார். இதையெல்லாம் முதல்வரிடம் நேரடியாக சந்தித்து தெரிவிக்க முடியாததால் தான் இப்போது உங்களிடம் சொல்கிறேன் என்று அந்த அமைச்சர் உதயநிதியிடம் தெரிவித்துள்ளார். ‘
’கடந்த பத்து வருடங்களாக திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது பல ஐஏஎஸ் அதிகாரிகள் திமுக ஆதரவாளர்கள் என்ற முத்திரை குத்தப்பட்டு அதிமுக ஆட்சியால் ஓரங்கட்டப்பட்டார்கள். திமுக ஆட்சிக்கு வந்ததும் தங்களுக்கு நல்ல பொசிஷன் கிடைக்கும் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் முக்கியமான இடத்தில் இருந்தவர்களே, இப்போதும் அதே இடத்தை ஆக்கிரமித்து இருக்கிறார்கள்.
நமக்குத் தோதான நமக்கு அபிமான அதிகாரிகள் இன்னும் ஓரங்கட்டப்பட்ட நிலையில் தான் இருக்கிறார்கள். இதனால் நிர்வாகத்தை ஸ்மூத்தாக நடத்த முடியவில்லை. இப்போது அதிகாரிகள் அமைச்சர்களைப் பற்றி முதல்வரிடம் தவறாகச் சொல்லி ஒரு அபிப்ராயத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். எனவே சீரான நிர்வாகத்துக்கு நமக்குத் தோதான ஐஏஎஸ் அதிகாரிகள் முக்கிய இடத்தில் இருக்க வேண்டியது அவசியம்’ என்று உதயநிதியிடம் பல்வேறு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அமைச்சரான உதயநிதி முதல்வர் ஸ்டாலினிடம் இது பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார். அவர்கள் கொடுத்த ஒரு பட்டியலையும் அவர் முதல்வரிடம் கொடுத்திருக்கிறார். இதையடுத்து வரும் ஜனவரி பொங்கலுக்கு முன்போ பின்போ தமிழக அரசின் முக்கியமான துறைகளில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்படலாம். இதன்மூலம் உதயநிதியின் அதிகார ஆட்டம் ஆரம்பித்து விட்டது என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.
அதேநேரம் அதிகாரிகள் தரப்போ, ’முதல்வர் உத்தரவுப்படி ஆட்சிக்கு கெட்ட பெயர் வந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். அமைச்சர்கள் சொல்படி கேட்டிருந்தால் பல்வேறு துறைகளில் ஆட்சிக்கு எப்போதோ கெட்ட பெயர் ஏற்பட்டிருக்கும்.
அதற்கு ஸ்பீடு பிரேக் போட்டு நாங்கள்தான் நிர்வாகத்தை ஸ்திரப்படுத்தி வைத்திருக்கிறோம். இது புரியாமலோ அல்லது புரிந்தும் மறைப்பதற்காகவோ சில அமைச்சர்கள் அதிகாரிகள் மீது பழி போட்டு வருகிறார்கள்’ என்கிறார்கள் அதிகாரிகள் வட்டாரத்தில்.
எது எப்படி இருந்தாலும் ஜனவரி மாதம் கோட்டையில் அதிகாரிகள் மாற்றம் நடக்கும் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில் என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
உதயநிதி-விஜய்- அண்ணாமலை: முக்கோண மோதலாகுமா தமிழக அரசியல்?
மதுரை மீனாட்சி அம்மன் சப்பர திருவிழா கோலாகலம்!