வைஃபை ஆன் செய்ததும் இன்ஸ்டாகிராமில் சில படங்கள் வந்து விழுந்தன. திமுக இளைஞரணிச் செயலாளராக நியமிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின் தனது அணியின் மாநில நிர்வாகிகளோடு திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற படங்கள்தான் அவை. இந்தப் படங்களைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“திமுகவின் இளைஞரணிச் செயலாளராக மீண்டும் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இளைஞரணி மாநில துணைச் செயலாளர்களாக இந்த முறை ஒன்பது பேர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் ஏற்கனவே உதயநிதியின் மாநில டீமில் இருந்தவர்களில் தூத்துக்குடி ஜோயலுக்கு மட்டுமே மீண்டும் மாநில துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. மீதி எட்டு பேரும் தற்போது மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இருப்பவர்கள்தான்.

நவம்பர் 23 ஆம் தேதி திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இந்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில் சென்னையில் உதயநிதியை சந்தித்த செய்தியாளர்கள்,
‘சார்… நீங்க மறுபடியும் இளைஞரணிச் செயலாளராக ஆகியிருக்கீங்களே’ என்று கேட்டனர். அதற்கு தனது பாணியில் ஒரு நக்கல் சிரிப்பு சிரித்த உதயநிதி, ‘அப்படியா நீங்க சொல்லிதாங்க தெரியும்’ என்று சொன்னார்.
உதயநிதி இப்படி ஜோக் அடித்தாலும் சீரியசாகவே தனது இந்த இரண்டாம் இன்னிங்ஸ் ஆட்டத்துக்கான டீமை மிக கவனமாக திட்டமிட்டு செலக்ட் செய்திருக்கிறார். நவம்பர் 23 ஆம் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து நவம்பர் 24 ஆம் தேதி இளைஞரணி மாநில துணைச் செயலாளர்கள் எல்லாம் அறிவாலயத்துக்கு வந்துவிட்டனர்.
அவர்களோடு உதயநிதியும் சேர்ந்து கொண்டார். உதயநிதி தலைமையில் புதிய நிர்வாகிகள் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினை சந்தித்தார்கள். பிற்பகல் 12.30க்கு ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றவர்கள் ஒரு மணி வரையிலும் அறிவாலயத்தில் தான் இருந்தனர். அதன் பின் உதயநிதி தனது புதிய நிர்வாகிகள் அனைவரையும் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

மாநில துணைச் செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டிருக்கும் ஜோயலை தனது அருகே சேர் போட்டு உட்காரச் சொன்ன உதயநிதி, மற்ற எட்டு பேரையும் தன் எதிரே வரிசையாக அமர வைத்தார்.
புதிய நிர்வாகிகளிடம் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தார் உதயநிதி. முதலில் சம்பிரதாயமாக எல்லாருக்கும் வாழ்த்து சொன்ன உதயநிதி, ‘நீங்க எல்லாரும் என்னை விட சீனியர். அது எனக்கு நல்லாவே தெரியும். என்னையும் சேர்த்துக்கிட்டு நல்லா வொர்க் பண்ணுங்க’ என்று சிரித்தார்.
ஒவ்வொருவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட பிறகு, ‘நீங்க இப்ப உட்கார்ந்திருக்கிற இடத்துக்கு எவ்வளவு போட்டி இருந்துச்சுனு உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன். பொதுக்குழு முடிஞ்ச பிறகு அணி நிர்வாகிகள் நியமனம்னு பேச்சு வந்தவுடனேயே பலரும் என்கிட்ட பேசினாங்க. சில அமைச்சர்கள் அவங்க பையன்களுக்கு இளைஞரணி மாநில துணைச் செயலாளர் பதவி வேணும்னு கேட்டாங்க. எல்லாருமே என் மதிப்புக்கு உரியவங்கதான்.
ஆனா… நான் எந்த வித சிபாரிசுக்கும் இடம் கொடுக்கலை. உங்க உழைப்புதான் உங்களை சிபாரிசு பண்ணிருக்கு. வேற எந்த சிபாரிசுக்கும் நான் இடம் கொடுக்கலை. அதனால இப்ப நீங்க உட்கார்ந்திருக்கிற இந்த சீட் எப்படிப்பட்டதுனு புரிஞ்சிக்கிட்டீங்களா… தொடர்ந்து உழைக்கணும். புதிய உறுப்பினர்கள் சேர்க்கணும்.
ஏற்கனவே நான் இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்துல கூட பேசியிருந்தேன். உறுப்பினர் சேர்க்கையில யாரும் ஏமாத்த வேண்டாம். ஆயிரம் பேரா இருந்தாலும் ஒரிஜினல் உறுப்பினர்களா இருக்கணும். நானும் செக் பண்ணுவேன். நீங்களும் செக் பண்ணுங்க. அடுத்து 234 தொகுதியிலயும் திராவிட மாடல் பாசறை முடிச்சிருக்கோம்.
கொஞ்சம் கேப் விட்டு ஒவ்வொரு ஒன்றிய அளவுலயும் பாசறை நடத்தணும். கலர் கலரா டெகரேட் பண்ணி கண்காட்சி காட்ட வேணாம். நூறு நூத்தம்பது பேர்னாலும் நம்ம இயக்கத்தோட கொள்கைகளை கொண்டு சேர்க்கணும். உங்ககிட்ட பெரிய பொறுப்பு இருக்கு’ என்று சொல்லி வழியனுப்பி வைத்திருக்கிறார்.

நாம் இளைஞரணி வட்டாரத்தில் விசாரித்தபோது, ’திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்துக்கு இப்ப கட்சிப் பொறுப்பு எதுவும் இல்லை. மாவட்டச் செயலாளர் பதவி கேட்டு துரைமுருகன் போராடியும் ஸ்டாலின் ஒ.கே. சொல்லலை. அதனால இளைஞரணி மாநிலப் பொறுப்பாவது கொடுங்கனு கதிர் ஆனந்த் கேட்டும் இடம்பிடிக்க முடியலை.
பொன்முடியும் தன் மகன் எம்பி கௌதம சிகாமணிக்கு முயற்சி செய்திருக்கிறார். இப்படி சீனியர் அமைச்சர்கள் பலரும் கேட்டும் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பதவியை உதயநிதி எந்த அமைச்சருக்காகவும் கொடுக்கலை. இந்த பட்டியலைப் பார்த்தாலே தெரியும். யாரும் எம்பி, எம்.எல்.ஏ கிடையாது. எல்லாருமே உதயநிதியின் செலக்ஷன் தான்’ என்கிறார்கள்.
அடுத்ததாக திமுகவின் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பதவிக்கு போட்டி ஆரம்பமாகிவிட்டது. அதிலும் இதேபோன்ற ஸ்கேலை வைத்து உதயநிதி செலக்ட் செய்வாரா என்பதுதான் இளைஞரணியினரின் எதிர்பார்ப்பு” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
அரியவகை ஏழைகளுக்கான இடஒதுக்கீடு: மனுவின் மறுஅவதாரம்!
உங்களையே யார் என்று தெரியவில்லையா? – சுவாதியிடம் கொந்தளித்த நீதிபதிகள்!