பிப்ரவரி 28 ஆம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்தது இன்னமும் கூட ஒரு மூடு மந்திரமாகவே அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.
ஈரோடு இடைத் தேர்தல் பிரச்சாரத்துக்குப் பிறகு 3 நாட்கள் சிங்கப்பூருக்கு தனிப்பட்ட பயணமாக சென்ற அமைச்சர் உதயநிதி, திடீரென அங்கிருந்து நேராக டெல்லிக்கு சென்றார். பிப்ரவரி 27 ஆம் தேதி டெல்லியில் தமிழ்நாடு முன்னாள் ஆளுநரும், இப்போது பஞ்சாப் ஆம் ஆத்மி அரசோடு மோதிக் கொண்டிருக்கும் பஞ்சாப் ஆளுநருமான பன்வாரிலால் புரோகித் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டார்.
அதன் பின் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கை ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ்.சுடன் சென்று சந்தித்து மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குக் கூடுதல் நிதி தொடர்பாகக் கோரிக்கை வைத்தார்.
இந்த பயணத்தின் முத்தாய்ப்பாக பிரதமர் மோடியை பிப்ரவரி 28 ஆம் தேதி மாலை 5 மணியளவில் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
பிரதமர் உடனான உதயநிதியின் சந்திப்பில் டெல்லி திமுக முகங்களான டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன், கனிமொழி, ஆ.ராசா போன்ற யாரும் இல்லை. அவர் மட்டுமே மோடியை சந்தித்தார்.
பிரதமருடனான சந்திப்பு முடிந்ததும் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி, “ இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. பிரதமர் சென்னை வந்தபோது, ‘டெல்லி வந்தால் என்னை சந்தியுங்கள்’ என்று கூறியிருந்தார்.
அதன்படியே டெல்லிக்கு மத்திய அமைச்சர்களை பார்க்க வந்த நான் பிரதமரிடம் நேரம் கேட்டேன். நேரம் கொடுத்தார். சந்திப்பின்போது, பிரதமரின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தேன். பிறகு எனது தந்தையாரின் நலம் விசாரித்தார்.
விளையாட்டுத் துறையில் நான் செய்து வரும் பணிகள் பற்றி கூறினேன். தொகுதிக்கு ஒரு ஸ்டேடியம் அமைப்பது பற்றி கூறினேன். ‘அதை தனியாரிடம் கொடுக்கப் போகிறீர்களா? அரசே பராமரிக்குமா?’ என்று கேட்டார். அவர் குஜராத் முதல்வராக இருந்தபோது செய்த விஷயங்களைக் கூறி எனக்கு டிப்ஸ் அளித்தார்.
கேல் இந்தியா விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை தமிழ்நாட்டுக்கு வழங்குமாறு கோரிக்கை வைத்தேன். நீட் விஷயம் தொடர்பாக பேசினேன். அதற்குப் பிரதமர் சில விளக்கங்களை அளித்தார்” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் உதயநிதி.
மார்ச் 1 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடந்தது, அதில் தேசிய அரசியல் பற்றி ஸ்டாலின் பேசிய பேச்சு.. முதல் நாளான பிப்ரவரி 28 ஆம் தேதி நடந்த பிரதமர் மோடி- அமைச்சர் உதயநிதி சந்திப்பின் அரசியல் முக்கியத்துவத்தைக் குறைத்துவிட்டது அல்லது திசை திருப்பிவிட்டது என்று சொல்லலாம்.
நாம் டெல்லி வட்டாரங்களில் விசாரித்தபோது,
“முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்வதற்குப் பதிலாகத்தான் அவரது மகன் உதயநிதி டெல்லி சென்றிருக்கிறார். பிரதமரிடம் அப்பாயின் மென்ட் கேட்கப்பட்டு முறைப்படி இந்த சந்திப்பு நடந்திருக்கிறது. மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று உதயநிதி சொல்லியிருக்கிறார்.
ஆனால் பிரதமர் மோடி- உதயநிதி சந்திப்பு 40 நிமிடங்கள் நடந்திருக்கிறது. மரியாதை நிமித்தமான சந்திப்புக்கு 40 நிமிடங்கள் தேவையில்லை என்று அரசியலில் எல்லாருக்கும் தெரியும்.
முதல்வர் ஸ்டாலின் தனது தனிப்பட்ட செய்தியைப் பிரதமர் மோடியிடம் தெரிவித்திருக்கிறார். அதற்காகத்தான் உதயநிதி அனுப்பப்பட்டுள்ளார். காங்கிரசை கழற்றிவிடுங்கள் என்று நாடாளுமன்றத்திலேயே பிரதமர் மோடி திமுக உறுப்பினர்களை பார்த்து நேருக்கு நேராக கூறினார். இதன் ரீதியாகவும், தமிழ்நாடு அரசுக்கும் மத்திய அரசுக்குமான நிர்வாக உறவு தொடர்பாகவும் சில விஷயங்களைப் பிரதமர் மோடியிடம் உதயநிதி ஸ்டாலின் தனது தந்தை சார்பில் தெரிவித்துள்ளார்” என்கிறார்கள்.
பிரதமர் மோடியை போலவே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் உதயநிதி சந்திக்க முயற்சித்தார். ஆனால் அந்த சந்திப்புகள் நடக்கவில்லை. பிரதமர் மோடியை -தமிழக முதல்வர் ஸ்டாலினுடைய மகன் உதயநிதி தனிப்பட்ட முறையில் சந்தித்து நாற்பது நிமிடங்கள் பேசியது டெல்லி அரசியல் பேசுபொருளானது.
சோனியா காந்தி கவனத்துக்கும், ராகுல் காந்தி கவனத்துக்கும் இது கொண்டு செல்லப்பட்டது. அவர்கள் சார்பில் காங்கிரஸின் மூத்த தலைவர்கள் டெல்லியின் திமுக முகங்களிடம், ‘என்ன இந்த நேரத்தில் திடீர் சந்திப்பு?’ என்று விசாரிக்க ஆரம்பித்தனர். இதன் மூலம் முதலமைச்சர் ஸ்டாலினுடைய இமேஜ் டெல்லியில் சற்று குறைவதாகவே ஒரு பேச்சு எழுந்தது.
இந்த தகவல் ஸ்டாலினுக்கு தெரியப்படுத்தப்பட்டதும் அவர் வருத்தம் அடைந்தார். எத்தனையோ மாநில முதல்வர்கள் பிரதமரை சந்திக்கிறார்கள், மாநில அமைச்சர்கள் மத்திய அமைச்சர்களை சந்திக்கிறார்கள். அப்போதெல்லாம் எழாத அரசியல் கிசுகிசு மோடியை உதயநிதி தனிப்பட்ட முறையில் சந்தித்தது பற்றி எழுந்துவிட்டதை ஸ்டாலின் உணர்ந்தார்.
மோடி -உதயநிதி சந்திப்பைத் தமிழக பாஜகவும் ரசிக்கவில்லை. பாஜக பிரமுகர்கள் பலரும் சமூக தளங்களில் இதை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதை உணர்ந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசும்போது,
“இந்திய அரசியலில் யார் அப்பாயின்ட்மென்ட் கேட்டாலும் நமது பிரதமர் மோடி கொடுப்பார். அதன்படிதான் உதயநிதிக்கும் கொடுத்திருக்கிறார். மற்றவர்களுக்கும் நம் பிரதமருக்கும் இதுதான் வித்தியாசம். பிரதமரை சந்திக்கும் அளவுக்கு சீனியர் அமைச்சர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் மகனை அனுப்பியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். முதல்வருக்கு யாரை அனுப்ப வேண்டும் என்ற உரிமை இருக்கிறது. குடும்ப அரசியலுக்கு நமது பிரதமர் எதிரி. சுதந்திர தின உரையிலே இதை சொன்னார். உதயநிதியை சந்தித்தபோது குடும்ப அரசியலின் மொத்த உருவமாகப் பார்த்திருப்பார் பிரதமர்” என்று இதை மோடிக்கான இமேஜாக கருத்துச் சொன்னார் அண்ணாமலை.
கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி கல்கத்தாவில் கிழக்கிந்திய மாநில வளர்ச்சி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடந்த அந்த கூட்டத்தில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், ஜார்க்கண்ட் முதல்வர் சோரன், ஒடிசா மாநில பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள்.
இந்தக் கூட்டம் முடிந்து டெல்லிக்குப் புறப்பட்ட அமித் ஷா மேற்கு வங்காள அரசின் தலைமைச் செயலகத்திலேயே முதல்வர் மம்தா பானர்ஜியை இருபது நிமிடங்கள் சந்தித்துப் பேசினார். அந்த சந்திப்பில் அமித் ஷா, மம்தா ஆகிய இருவர் மட்டுமே இருந்தனர். இது அப்போது தேசிய அரசியலிலும் எதிரொலித்தது.
அதாவது காங்கிரஸோடு எந்த வித உறவும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று மம்தாவை அப்போது அமித் ஷா தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொண்டதாகத் தகவல் பரவியது. இது இப்போது ராகுல் -மொய்தா மோதல் வரை நீடிக்கிறது. இந்த நிலையில், நேற்று வரும் மக்களவைத் தேர்தலில் திருணமூல் காங்கிரஸ் தனித்தே நிற்கும் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
இதேபோலத்தான் ஸ்டாலின் மகன் உதயநிதியின் மோடியுடனான சந்திப்பும் டெல்லியில் உள்ள கட்சிகளால் பார்க்கப்படுகிறது. இதை உணர்ந்தோ என்னவோ, மார்ச் 1 ஆம் தேதி முதல்வர் தனது பிறந்தநாள் விழாவில், ‘எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒற்றுமையாக வரும் மக்களவை தேர்தலை சந்திக்க வேண்டும். காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணி கரை சேராது’ என்றெல்லாம் மிக வலிமையாகவே பேசி தன் பாஜக எதிர்ப்பு இமேஜை டெல்லிக்கு தெரியப்படுத்தியுள்ளார் என்கிறார்கள் டெல்லி வட்டாரங்களில்.
ஆரா
மனைவியை மணந்த காதலன்: பழிவாங்கிய கணவன்
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!