சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏவும், முதல்வர் மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலினை, அமைச்சராக்குவதில் அவசரம் ஏன் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று (டிசம்பர் 13) தனது 60வது பிறந்தநாளை தஞ்சையில் நிர்வாகிகள், தொண்டர்களோடு இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் எங்கிருந்தாலும் ஓரணியில் இணைய வேண்டும். அப்படி இணைந்தால்தான் வருங்காலத்தில் திமுகவை வீழ்த்த முடியும்.

எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர் இல்லை என்பதை பல இடங்களில் நிரூபித்து வருகிறார். உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்குவதில் தவறில்லை. ஆனால் ஏன் இவ்வளவு அவசரத்தில் அமைச்சராக்க மு.க.ஸ்டாலின் நினைக்கிறார் என தெரியவில்லை. அதற்கான காரணத்தை காலம்தான் உணர்த்தும்.
தேர்தல் வாக்குறுதிகளை அளித்துவிட்டு ஏமாற்றுவதுதான் திராவிட மாடல் ஆட்சி. புதுச்சேரி மக்கள் அதுபோல் ஏமாறுவார்களா என தெரியாது. ஆனால் தமிழகத்து மக்கள் இன்று வருத்தப்படுகிறார்கள். பழனிசாமி கம்பெனியின் தவறான ஆட்சியால் பாதிக்கப்பட்ட மக்கள், 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருந்த திமுக, திருந்தி இருக்கும் என நினைத்து வாய்ப்பு கொடுத்துள்ளார்கள்.
இங்கேயே விடியல் ஆட்சி இல்லை; விடியாமூஞ்சி ஆட்சி நடைபெறுவதாக தற்போது மக்கள் கூறி வருகின்றனர். அப்படியிருக்கையில், புதுச்சேரியில் திமுக ஆட்சி அமைய வாய்ப்பு இல்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பர்” என்றார்.
ஜெ.பிரகாஷ்