உதயநிதி அறை: அலங்கரிக்க இருக்கும் 3 புகைப்படங்கள்!

அரசியல்

அமைச்சராய் பொறுப்பேற்க இருக்கும் உதயநிதி ஸ்டாலின், தன்னுடைய அறையில் மூன்று முக்கியப் புகைப்படங்களை வைக்க இருக்கிறார்.

திமுக இளைஞரணிச் செயலாளரும், சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின், நாளை (டிசம்பர் 14) அமைச்சராகப் பொறுப்பேற்கிறார் என்பதுதான் அனைவரும் பேசப்படும் செய்தியாக இருக்கிறது.

கடந்த ஆண்டு (2021) நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்று, முதல்வராக மு.க.ஸ்டாலினும், 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

திமுக அமைச்சரவை பொறுப்பேற்றபோதே, கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

அதுகுறித்து கட்சியிலிருந்த பலரும் பேசி வந்தனர். ஆனால், முதல்வர் ஸ்டாலின்

இதுகுறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை. இந்த நிலையில்தான் சமீபத்தில் திமுக உட்கட்சித் தேர்தல்கள் முடிந்து, இளைஞரணிச் செயலாளராக மீண்டும் உதயநிதி ஸ்டாலின் தேர்வானார்.

இதையடுத்து, அவரை அமைச்சராக்க வேண்டும் என்று அமைச்சர்கள் சிலரே பேசி வந்தனர்.

udhayanidhi stalin minister room three photos

இதையடுத்து, இதற்கு ஒப்புதல் அளித்த முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் மாளிகைக்கும் பரிந்துரைத்தார்.

அதன்படி, நாளை (டிசம்பர் 14) காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் உதயநிதி அமைச்சராகப் பதவியேற்க உள்ளார். கிண்டி கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது.

இதில் கவர்னர் ஆர்.என்.ரவி, உதயநிதி ஸ்டாலினுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். விழாவில் கலந்துகொள்வதற்காக 400 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

பதவியேற்ற பின்பு, அவர் நேராக தலைமைச் செயலகத்தில் உள்ள தன்னுடைய அறைக்குச் சென்று பொறுப்பேற்க உள்ளார்.

அவருக்கு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை ஆகியவை ஒதுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. அவர் அமைச்சர் ஆவதையடுத்து, தலைமைச் செயலகத்தில் அவருக்காக இரண்டு அறைகள் தயாராகி வருகின்றன.

சட்டப்பேரவைக் கட்டடத்தின் 2ஆம் தளத்தில் உள்ள இரண்டு அறைகளில் இதற்கான பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில், உதயநிதி எந்த அறையைத் தேர்ந்தெடுக்கிறாரோ, அந்த அறையில் பொறுப்பேற்க இருக்கிறார். இதையடுத்து, தன்னுடைய அறையில் மூன்று முக்கிய புகைப்படங்களை வைக்க இருக்கிறார்.

udhayanidhi stalin minister room three photos

அதில் தந்தை பெரியாருக்கு முதல் இடத்தை அளித்துள்ளார். அடுத்து, பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரது புகைப்படங்களை வைக்க இருக்கிறார். இப்புகைப்படங்கள் அனைத்தும் கறுப்பு வெள்ளை நிறத்தில் வைக்கப்பட இருக்கின்றன.

இவர்களது புகைப்படங்களைத் தொடர்ந்து முதல்வரும் தந்தையுமான மு.க.ஸ்டாலினின் வண்ண புகைப்படத்தை வைக்க உள்ளார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக மற்றும் திமுக அமைச்சரவையில் அலங்கரித்த முன்னாள் அமைச்சர்கள்கூட பெரியாரின் படத்தை வைக்காத நிலையில், உதயநிதி அவரது படத்துக்கு முன்னுரிமை அளித்திருப்பது திமுக வட்டாரத்தில் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.

ஜெ.பிரகாஷ்

இடஒதுக்கீடு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கு: நீதிபதி விலகல்!

+1
0
+1
1
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0