– ஸ்ரீராம் சர்மா
சில நாட்களுக்கு முன்னர் திமுகவின் இளைஞர் அணி செயலாளரும் – தமிழ்நாட்டு அரசாங்கத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களது குறிஞ்சி இல்லத்தில் முதலமைச்சர் நீங்கலாக திமுகவின் ஒட்டு மொத்த மூத்த அமைச்சர்களும் கூடியிருந்தனர்.
அது, சேலம் மாநாட்டுக்காக அயராது உழைத்தவர்களுக்கான பாராட்டு விழா என அறிவிக்கப்பட்டிருந்தாலும் கூட, எதிலும் ஆழம் காண விரும்பும் அரசியல் ஆய்வாளர்கள் பலரும் அந்த நிகழ்வை வேறு விதமாக எடை போட்டபடி அலசிக் கொண்டிருக்கிறார்கள் .
ஆகட்டுமே! அவர்கள் போட்ட அந்த கணக்கும் ஒருவிதத்தில் சரிதானே! நன்மைக்குத் தானே ! வருங்காலத்துக்கு வாகானது தானே !?
வெளிப்படையாகவே சொல்லி விடுகிறேனே…
கத்தரிக்காய் முற்றினால் கடைத்தெருவில்… பத்திரிக்கை முடிந்தால் கதவிடுக்கில்… சத்திரியன் விளைந்தால் சாவடியில்… அவ்வளவுதானே !
எங்களுக்கானதோர் சத்திரியன் விளைந்து விட்டான். அவனை இன்றைய வாக்குச் சாவடியில் முன் நிறுத்த விழைகிறோம். அவனை வாழ்த்துங்கள் என பாரிய கட்சி ஒன்று ஏகோபித்த அளவில் துணிந்து முன் மொழிவதில் என்ன தவறிருக்கிறது என்கிறேன்.
அப்படி என்றும் இப்படி என்றும் ஆளாளுக்கு ஒன்றை விளாசிக் களிக்கலாம். அதில் ஏதேனுமொரு அர்த்தம் இருக்கலாகுமா எனத்தான் கேட்கிறேன்.
*******
ஒரு குடும்பமே ஆட்சி செய்ய வேண்டுமா ? அது நியாயமாகுமா ? திராவிட அரசியலில் ஓடி உழைத்த மு. கருணாநிதி எனும் தாத்தன் சொத்தை , அந்த வீரிய தலைமையோடு போராடி தன் இளமை கடந்து தலைமை அடைந்த மு. க. ஸ்டாலின் எனும் அப்பன் அடைந்த சொத்தை, ஏதோ சினிமாவுக்குள் சுற்றி வந்த உதயநிதி எனும் பேரனுக்கு அள்ளிக் கொடுத்து விடுவதா?
திமுக என்ன கம்பெனியா? சங்கர மடமா? உதயநிதி என்ன அவரது பாட்டனார், தந்தையாரைப் போல பற்பல போராட்டங்களில் கலந்து கொண்டவரா? காராக்கிரகம் சென்றவரா? மிசா வாங்கியவரா? பொடா வாங்கியவரா என்றெல்லாம் கசகசப்பவர்கள் உண்டு.
கலகத் திரிகளை எதிரிக் கட்சிகள் கொளுத்திப் போடுவது வழக்கம்தான். அதில் ஆச்சரிப்படுவதற்கு ஏதொன்றும் இல்லை. அப்படித்தான் இருக்கும் அவர்களது வேலைத் திட்டம். ஆனால், திமுக எனும் அடர்ந்த கட்சியானது அப்படி நினைக்கவில்லை என்பதுதான் உதயநிதி ஸ்டாலின் என்பவருக்கான அமோகமான அங்கீகாரம். அதி முகாந்திரம்.
யார் என்ன நீட்டி முழக்கினாலும் உண்மை ஒன்றுதான். அது உதயநிதி ஸ்டாலின் என்பவர் தவிர்க்கவே முடியாத நாளைய தலைவர். அவ்வளவுதான்.
திமுக எனும் அகண்ட கட்சியினை தோளில் சுமப்பதே பெரும் பாரம்தான். அதை உதயநிதி ஸ்டாலின் திறம்பட கொண்டு செலுத்துகிறாரா என்பதை மட்டும்தான் பார்க்க வேண்டும்.
உதயநிதி ஸ்டாலினின் எழுச்சியை திமுகவின் கடைக்கோடி தொண்டர்கள் வரை உளமார ஏற்றுக் கொண்டார்கள் என்பதை அவரது ஆகப் பெரிய வெற்றி என சொல்வதை விட அவரது இளைய சிரத்தில் சூட்டப்பட்ட அகண்ட முள் மகுடம் என்பேன்.
அதனை சுமந்து கொண்டேற்றும் வலிமை உதயநிதி ஸ்டாலினுக்கு உண்டு என்பதை என்னளவில் ஆழ நம்புகிறேன்.
*******
ஆம், எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய இளைய தலைமை ஒன்றை தேர்ந்தெடுக்க முடியாது போனால் ஒரு கட்சி என்னவாகும் என்பதற்கு இன்று இரண்டாக அல்ல மூன்றாக பிளவுபட்டிருக்கும் அதிமுகவே அருகாமை சாட்சியாகிறது !
குறித்துக் கொள்ளுங்கள்…
திராவிட சித்தாந்தத்தின் வருங்கால நம்பிக்கையாக நிற்கும் உதயநிதி எனும் அரசியல்வாதியின் வயது 46. அவருடைய சித்தாந்தத்துக்கு எதிர் சித்தாந்தத்தில் தலைமை ஏற்று நிற்கும் தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை அவர்களுக்கோ 39 வயது.
ஒரு சித்தாந்த மோதலில் தலைமையேற்கும் தளபதிகள் சம வேகத்தில் இருப்பது போருக்கும் வெற்றிக்கும் நல்லது என திமுகவின் தலைமை முடிவெடுத்தால் அதில் குற்றம் கண்டுவிட முடியாது.
மீண்டும் குறித்துக் கொள்ளுங்கள்…
திமுக எனும் கட்சி தோன்றி 75 ஆண்டுகள்தான் ஆகிறது. ஆனால் அதன் எதிர் சித்தாந்தத்தின் ஆணி வேரான ஆர்.எஸ்.எஸ் தோன்றி 99 ஆண்டுகள் ஆகிறது. அடுத்த வருடம் அது தனது நூற்றாண்டை கொண்டாடப் போகிறது.
இந்தியத்தின் பெரும்பாலான மாநிலங்கள் அவர்களின் பிடியில்தான் இருக்கிறது. இந்த முறையும் அவர்கள் வென்று விட்டால் அது இன்னுமின்னும் வலுப்பெறக் கூடும். ஆர்.எஸ்.எஸின் எதிர்பாராத அர்பணிப்பு உணர்வை ஈடு செய்ய முடியாது போனால் எந்த மாநிலக் கட்சியும் நிலை குலைந்துதான் போகும் என்பதற்கான எண்ணற்ற உதாரணங்கள் தேசமெங்கும் கொட்டிக் கிடக்கின்றன.
வெறும் வியூகங்களையும் பணத்தையும் வைத்துக் கொண்டு இனி தேர்தலை சந்தித்துவிட முடியாது என்றே தோன்றுகிறது. காரணம், சாதியும் மதமும் அதன் பாற்பட்ட உணர்வெழுச்சியும் பண வியூகங்களைக் காட்டிலும் வீரியமானது என்பது வெளிப்படையாகி நிற்கிறது.
*******
எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தல் திமுகவுக்கு ஒரு சவாலே அல்ல. மிக எளிதில் வென்றுவிடக் கூடிய வாகான நிலையில்தான் எதிரிகளற்ற களத்தில் திமுக இன்று இருக்கிறது. ஆனால், அடுத்து வரக்கூடிய 2026 தேர்தல் அப்படியாக இருக்காது. மிக மிக சவாலானதாக இருக்கும் என்பதை மறுத்துவிட முடியாது.
திராவிட சித்தாந்தத்தின் அவசியத்தை இன்றைய இளைய வாக்காளர்களுக்கு ஏற்றாற்போல புனரமைத்த பின், அதனை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தாக வேண்டிய காலம் இது. அதற்கு நாடறிந்த நம்பிக்கையான இளைய முகம் ஒன்று அவசியப்படுகிறது. அந்த நம்பிக்கையான முகம்தான் உதயநிதி ஸ்டாலின்.
அவரை எல்லோரும் மனமுவந்து ஏற்றுக் கொண்டால், அவரது கரத்தை பலப்படுத்த ஓயாது உழைத்தால் அது திராவிட சித்தாந்தத்துக்கு நல்லது.
போலவே, முன்பே சொன்னது போல அவர் இன்னுமின்னும் ஓடியாக வேண்டும். அவருக்குண்டான பக்க பலத்தை அவரோடு அணிவகுத்திருக்கும் இளைய தலைவர்கள் அள்ளிக் கொடுத்தாக வேண்டும். மூத்த தலைவர்களின் வழி காட்டுதலோடு சித்தாந்தப் போரில் நின்று ஜெயித்தாக வேண்டும்.
*******
மூத்த பத்திரிக்கையாளர் மணி அவர்கள் “அண்ணாமலையை குறைத்து எடை போட்டு விடாதீர்கள்” என அவ்வப்போது சொல்லக் கேட்டிருக்கிறேன்.
என்னளவில் இன்று நான் துணிந்து சொல்கிறேன், “உதயநிதி ஸ்டாலினை யாரும் குறைத்து எடை போட்டு விடாதீர்கள்”.
கவனியுங்கள்…
அன்றொரு நாள் மாமழை ஒன்று சென்னையை புரட்டிப் போட்ட தினத்தில் முதலமைச்சரின் தொகுதியை குறிவைத்து ஓடிய அன்றைய பாஜகவின் புதிய அண்ணாமலை ஆங்கிருந்த முழங்கால் மழை நீரில் அப்பாவியாக ‘போட்’ ஏறி ஓட்டிக் காட்டிய காட்சியை கிண்டலடித்து எழுதியிருக்கிறேன்.
அதன் பிறகு, 18.4.2023 தேதியிட்ட எனது எண்ணித் துணிக கருமம் எனும் மின்னம்பலக் கட்டுரை ஒன்றில் அண்ணாமலை அவர்களின் முதிர்ச்சியற்ற அரசியல் அணுகுமுறையை கடுமையாக சாடி, “முதலில் மக்களை சென்று சந்தியுங்கள். உழையுங்கள். அதன் பிறகு வந்து உங்கள் ஆரவாரத்தை காண்பியுங்கள்” என ஏளனமாக அலசி எழுதியிருக்கிறேன். அது பழைய கதையானது.
ஆனால், இன்று நாடெங்கும் நாலு கிலோ மீட்டரான நவீன நடைப் பயணமாகவேனும் சுற்றி வந்து நிற்கும் அவரை கூர்ந்து கவனிக்கிறேன். அண்ணாமலையின் கண்களில் வசப்பட்டுவிட்ட கூர்மையை, ஆளுமைத் திறனைக் கண்டு உளமார வியக்கிறேன். ஆம், அவரது அயராத உழைப்பை மனதார வாழ்த்துகிறேன்.
ஒரே வருடத்தில் அண்ணாமலை அவர்களிடம் இப்படியொரு முதிர்ச்சி வந்துவிடக் கூடும் எனில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் உதயநிதி ஸ்டாலின் இறங்கி அடித்தால் என்னவாகும்?
ஆகட்டும் !
***
எனது பேரன்பிற்குரிய உதயநிதி ஸ்டாலின் அவர்களே…
உங்களை நான் சந்தித்தது ஒரே ஒருமுறைதான். அது, கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு எனது நெஞ்சகத்துக்கு உகந்த உடன்பிறவா சகோதரர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் அழைப்பின் பேரின் அன்பகத்தில் வைத்து எனது மகனோடு உங்களை சந்தித்தேன். முத்தமிழறிஞரின் திருக்குறள் உரையை எனக்கு பரிசளித்ததை அன்று ‘ட்வீட்’ செய்திருந்தீர்கள். அன்றே உங்கள் அன்பை அரவணைப்பை உணர்ந்தேன். இந்த மனிதன் உயர்வது சமூகத்துக்கு நல்லது என அன்றே சகலரிடமும் சொன்னேன்.
உங்களிடம் நான் கேட்டுக் கொள்வதெல்லாம் ஒன்றுதான். இன்னுமின்னும் இறங்கி நீங்கள் உழைத்தாக வேண்டும். உங்களால் முடியும். உங்களுக்கு வயது இருக்கிறது. போதுமான அனுபவமும் ஆளுமையும் இருக்கிறது. அடுத்தவரை ஆளாக்கி வைக்கும் நல்ல குணமிருக்கிறது. பாரியதோர் கட்சிப் பலமிருக்கிறது. இம் எனில் ஆம் எனும் ‘அன்பில்’ விளைந்த நம்பிக்கையான நண்பர்களின் படையிருக்கிறது.
உங்களுக்கு வாய்த்திருக்கும் கட்சிக் கட்டமைப்பு இன்று மற்றவர்களுக்கில்லை. அது, எதிரிகளின் அச்சத்தைக் கூட்டக் கூடியது. அதனால் அவர்களின் வேகம் இன்னமும் கூடும் என்பதையும் கவனத்தில் கொண்டாக வேண்டும்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களிடமிருந்து கற்ற பாடங்களை, மு. க ஸ்டாலின் எனும் ஆய்ந்த முதலமைச்சரிடமிருந்து கற்ற பாடங்களை இன்றைய காலத்துக்கு ஏற்றாற்போல மடை மாற்றி முன்னோர் வழியில் ஊர் ஊராக வெயிலிலும் மழையிலுமாக ஓடி ஓடி அடிமட்ட கட்சித் தொண்டர்களை சந்தியுங்கள். அதில் இன்னுமின்னும் நீங்கள் கூர்மைப்படுவீர்கள்.
வருங்காலத்தில் வெகு நிச்சயமாக நீங்கள் கூர்மையானதோர் அரசியல் தலைவராக எழுவீர்கள்! உங்கள் எழுச்சி தமிழ் நாட்டின் அரசியலுக்கு மட்டுமல்ல இந்திய அரசியலுக்கும் வலு சேர்க்கும் என மிக ஆழமாக நம்புகிறேன்.
ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
எனும் மகாகவி பாரதியாரின் வைர வரிகளை ஒட்டி நீங்கள் மூறி எழுந்து முரசொலி செய்வீர்கள் என உளமார நம்புகிறேன்.
ஓங்கி எழுங்கள் உதயநிதி ஸ்டாலின் !
உங்களது அயராத உழைப்பால் தமிழ்நாட்டிற்குண்டான தனிச் சிறப்புகள் யாவும் ஓங்கி மிளிரட்டுமே.
சாதி மதம் கடந்த தேசியம் சார்ந்த மாநில சுயாட்சிக் கொள்கைகள் யாவும் வருங்காலத்திலும் உங்களால் வலுப்பெறட்டுமே! சார்பற்ற சமூக எழுத்தாளனாகிய எனது எழுத்துதான் பலிக்கட்டுமே !
கோயில் கோயிலாக சென்று வழிபடும் உங்கள் தாயாரின் புண்ணியங்கள்தான் அதற்கு வலு சேர்த்து வைக்கட்டுமே !
வாழியவே ! எம் திராவிடத் தமிழ்ப் பொன்னாடே !
கட்டுரையாளர் குறிப்பு
வே.ஸ்ரீராம் சர்மா – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர்.
300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.
அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆப்பிள் இறக்குமதி: பாதிக்கப்படும் இந்திய விவசாயிகள்!
பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை!
ஹெல்த் டிப்ஸ்: பூக்களால் அலர்ஜியா? சமந்தா சொல்வது நிஜமா?
ஒரு வருடத்திற்கு இலவச OTT… முன்னணி ‘தொலைத்தொடர்பு’ நிறுவனத்தின் அசத்தல் ஆஃபர்!
வஞ்சப்புகழ்ச்சி அணியா?
வஞ்சகன் ஆடு அண்ணாமலையை உதயநிதியோடு ஒப்பிடுவதா?
வாயை பொய்யையும், கொஞ்சமும் நேர்மையற்ற தன்மை கொண்ட ஆட்டுக்குட்டியின் கண்களில் உங்களுக்கு ஒளி தெரிகிறதா? ஹா….ஹா…ஹா….
அயோக்கியனை பாராட்டும் நீங்கள் அவளை விட மோசமானவர்.
உதயநிதி உழைப்பில் உயர்வில்
தமிழ்நாடு திறளட்டும் திளைக்கட்டும்!