திமுக இளைஞர் அணி செயலாளரும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி கட்சியில் தொடங்கி, அமைச்சர்களிடையேயும் செல்வாக்கு செலுத்தி அடுத்து இப்போது அரசு அதிகாரிகளின் நியமனங்களிலும் முக்கியப் பங்காற்றி வருகிறார்.
இந்த நிலையில் திமுகவின் முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏ.க்களை தொடர்ந்து சந்தித்து அவர்களது பிரச்சினைகளையும், தொகுதியின் பிரச்சினைகளையும் கேட்டுத் தெரிந்துகொள்கிறார் உதயநிதி.
ஆட்சி அமைந்ததில் இருந்தே திமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களது குறைகளை எல்லாம் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினை சந்தித்து சொல்ல முடியவில்லையே என்ற வருத்தத்தில் இருந்தார்கள்.
இந்த நிலையில் அவ்வப்போது முதல்வரின் மாப்பிள்ளை சபரீசன் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டு வந்தார். அதை முதல்வரிடமும் தெரியப்படுத்தி வந்தார்.
இந்த நிலையில்தான் இப்போது திடீரென அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சமீப நாட்களாக திமுக எம்.எல்.ஏ க்களையும் முன்னாள் எம்.எல்.ஏ க்களையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினே வரவழைத்து அவர்களுடன் பேசுகிறார்.
ஒரு நாளைக்கு ஐந்து பேர்களை சந்திக்க இரண்டு மணி நேரம் ஒதுக்கீடு செய்கிறார். யார் யாரை சந்திப்பது என்று ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.வுக்கு தகவல் கொடுக்கிறார் உதயநிதி உதவியாளர்.
ஸ்டாலினை சந்திக்க முடியாமல் இருந்த திமுக எம்.எல்.ஏ.க்கள் உதயநிதி ஆபீசில் இருந்து போன் வந்ததும் ஆச்சரியமாக சந்தித்திருக்கிறார்கள்.
அவர்களிடம் உதயநிதி, ‘நீங்க எப்படி இருக்கீங்க. தொகுதி எப்படி இருக்கு? உங்க மாவட்ட அமைச்சர் எப்படி இருக்கார்?’ என்று கேட்கிறார்.
இதைதான் எதிர்பார்த்தோம் என்பது மாதிரி திமுக எம்.எல்.ஏ.க்கள் உதயநிதியிடம் தங்களது மனதில் இருப்பவற்றை எல்லாம் கொட்டித் தீர்க்கிறார்கள்.
சில நாட்களுக்கு முன் வேலூர் சட்டமன்ற உறுப்பினரான கார்த்திகேயன், அமைச்சர் உதயநிதியை சந்தித்தார். அவரிடம் இந்த சந்திப்பு பற்றி கேட்டபோது, ‘சின்னவர் அமைச்சர் உதயநிதி அப்பாய்மென்ட் என்றதும் மெய் சிலிர்த்துப்போனது. ஆவலுடன் சென்றேன்.
எனக்கு முன்னால் சில எம். எல். ஏ க்கள் உதயநிதியை சந்தித்து விட்டனர். எனக்குப் பிறகும் சந்திக்க சில எம். எல். ஏ.க்கள் காத்திருந்தனர்.
என்னிடம் அன்பாக பேசினார் சின்னவர். குடும்பத்தைப் பற்றி விசாரித்தார். என்னிடம் தனியாக சுமார் 20 நிமிடங்கள் பேசினார்.
தொகுதியில் என்ன பிரச்சனைகள் உள்ளது, அதிகாரிகள் உங்களை மதிக்கிறார்களா இல்லையா, எம் பி தேர்தல் எப்படி இருக்கும், உங்களுக்கு என்ன குறைகள் உள்ளது என விசாரித்தார்.
அப்போது நான் சொன்ன விஷயங்களை கவனமாக கேட்டுக்கொண்டு டைரியில் குறிப்புகள் எடுத்துக்கொண்டார். அவ்வப்போது முடிவில், சரிங்கண்ணா நான் பார்த்துக்குறேன். ஏதாவது குறைகள் என்றால் என்னிடம் தெரிவியுங்கள்.
அப்பாதான் ( தலைவர் ஸ்டாலின்) உங்களை சந்தித்து பேசச் சொன்னார். உங்கள் தகவல்களை தலைவரிடம் சொல்கிறேன்’ என்று வழியனுப்பி வைத்தார்” என்று ஆச்சரியம் குறையாமல் பேசுகிறார் எம்.எல்.ஏ கார்த்திகேயன்.
இவரைப் போல திமுகவின் மற்ற எம்.எல்.ஏ க்களும் உதயநிதியை சந்தித்து வருகிறார்கள்.
