’அந்த பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லையே’: மேடையில் வருந்திய உதயநிதி

Published On:

| By christopher

அறிஞர் அண்ணாவையும், தந்தை பெரியாரையும் நேரில் பார்த்துள்ள கழகத்தின் மூத்த நிர்வாகிகளை பார்க்கும்போது தனக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லையே என்று பொறாமை ஏற்படுவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

திருவாரூர் மாவட்ட தி.மு.க சார்பில் முப்பெரும் பொதுக்கூட்ட விழா நேற்று (ஏப்ரல் 5) நடத்தப்பட்டது. அதனை முன்னிட்டு ஒரு நாள் பயணமாக காலையிலேயே திருவாரூருக்கு சென்ற அமைச்சர் உதயநிதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று அங்குள்ள அதிகாரிகளுடன் அரசு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

அவருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.எல்.ஏ டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி, ”தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கங்களுக்கு அனுமதி அளிக்கப்படாது.

இந்தப் பிரச்னை தொடர்பாக நாளை (இன்று) நடைபெறவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதல்வர் பேச உள்ளார்” என்று கூறினார்.

udhayanidhi stalin gave open speech in thiruvarur

சாரட் வண்டியில் பயணம்

பின்னர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து கருணாநிதியின் நெருங்கிய நண்பரான கு.தென்னனின் இல்லத்துக்கு நேரில் சென்று, அங்கு வைக்கப்பட்டிருந்த அவரின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அங்கிருந்து தி.மு.க பொதுக்கூட்டம் நடைபெற்ற வன்மீகபுரத்திலுள்ள கலைஞர் அரங்கம் வரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, திருவாரூர் எம்.எல்.ஏ பூண்டி.கே.கலைவாணன் இரண்டு குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அமர்த்தி அழைத்து சென்றார்.

அமைச்சர் உதயநிதி சாரட் வண்டியில் அமர்ந்து பயணித்ததைக் கண்ட தி.மு.க-வினர், உற்சாக கரவொலி எழுப்பி மகிழ்ந்தனர்.

பின்னர் நடைபெற்ற முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில், தி.மு.க-வைச் சேர்ந்த சுமார் 1,000 மூத்த நிர்வாகிகளுக்கு 10,000 ரூபாய் ரொக்கம், கைகடிகாரம், சுவர் கடிகாரம், குடை, வேட்டி சேலை உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய பொற்கிழியினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

udhayanidhi stalin gave open speech in thiruvarur

அடிக்கடி பொறாமை ஏற்படும்

பின்னர் பொதுக்கூட்ட மேடையில் உதயநிதி உரையாற்றினார். அவர் பேசுகையில், ”நமது கட்சியின் சார்பில் எத்தனையோ விழாக்களும், பொதுக்கூட்டங்களும் முன்னெடுக்கப்பட்டாலும், கழக மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்வு எனது மனதுக்கு நெருக்கமான ஒரு நிகழ்வு.

என்னிடம் பூங்கொத்து, பொன்னாடை வழங்கக்கூடிய நண்பர்களிடம் இளைஞரணிக்கு அதிக அளவில் நிதியைத் தாருங்கள். அவற்றை நாங்கள் எங்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகளின் மருத்துவச் செலவுக்காகப் பயன்படுத்துகிறோம் என்று சொல்லியிருக்கிறேன்.

இந்த விழாவின் உண்மையான சிறப்பு விருந்தினர் நான் அல்ல, கழகத்துக்காக தங்கள் ரத்தத்தையும் வியர்வையையும் சிந்தி உழைத்த மூத்த நிர்வாகிகளான நீங்கள்தான், இந்த விழாவின் முக்கியமான நாயகர்கள். நீங்கள் இல்லாமல் திமுக இல்லை.

உங்களையெல்லாம் பார்க்கும்போது எனக்கு ஒரு சின்ன பொறாமை ஏற்படும். நான் கலைஞரைப் பார்த்திருக்கிறேன், தலைவர் மு.க.ஸ்டாலினைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அறிஞர் அண்ணாவையும், தந்தை பெரியாரையும் நான் நேரில் பார்த்ததில்லை.

எனக்கு முன்னால் அமர்ந்திருக்கின்ற கழகத்தின் மூத்த நிர்வாகிகளாகிய நீங்கள் அண்ணாவையும், பெரியாரையும் நேரில் பார்த்திருப்பீர்கள். அந்த பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லையே என்கிற ஒரு பொறாமை எனக்கு அடிக்கடி ஏற்படும்.” என்றார்.

udhayanidhi stalin gave open speech in thiruvarur

கலைஞரின் முதல் நண்பன்

தொடர்ந்து கு. தென்னன் குறித்து அவர் பேசுகையில், ”இங்கே கலைஞர் தாத்தாவின் நெருங்கிய நண்பர்களில் முதலிடம் பிடித்த தென்னனின் நூற்றாண்டு விழாவையும் கொண்டாடி வருகிறோம். அவரைப் பற்றி கலைஞர் தாத்தா அதிகமாக தனது `நெஞ்சுக்கு நீதி’ புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.

தன்னுடைய முதல் நண்பனாக தென்னன் அவர்களைதான் கலைஞர் தாத்தா கூறிக் கொண்டே இருப்பார். அந்த அளவுக்கு கலைஞர் அவர்களுக்கும் தென்னன் தாத்தா அவர்களுக்கும் இடையே மிகப்பெரிய நட்பு இருந்தது.” என்று பேசினார்.

udhayanidhi stalin gave open speech in thiruvarur

நான் சின்னவர்தான்

மேலும் அவர், “எனக்கு ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் நமது உடன்பிறப்புகள் எனக்கு நிறைய பட்டப் பெயர்களைச் சூட்டி வருகிறார்கள். அதில் எனக்கு கொஞ்சம்கூட நம்பிக்கை இல்லை. எனினும் அந்தச் சின்னவர் பட்டம் எப்போது பொருந்துகிறதோ இல்லையோ இந்த மேடையில் எனக்குப் பொருந்துகிறது. கழகத்தின் மூத்த நிர்வாகிகளான உங்களைவிட நான் அனுபவத்திலும், வயதிலும் சின்னவர்தான்.

அந்த வகையில், இந்தப் பொதுக்கூட்ட நிகழ்வுக்கு வந்திருக்கிற கழகத்தின் முன்னோடிகளான உங்கள் அனைவரின் பாதங்களையும் தொட்டு வணங்கி தொடர்ந்து கழகத்தின் வளர்ச்சிக்காகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் பாடுபடுவேன் என்பதை உறுதியாகச் சொல்கிறேன்” என்றார்.

சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம்

நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நிலக்கரி சுரங்கம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், “தமிழகத்தில் நிலக்கரி எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். இது தொடர்பாக அவர் பிரதமருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். நாளை (இன்று) நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில் மன்னார்குடி எம்.எல்.ஏ. ராஜா கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரவுள்ளார்” எனத் தெரிவித்தார்.

கிறிஸ்டோபர் ஜெமா

நிலக்கரி சுரங்க விவகாரம் : நாடாளுமன்றத்தில் திமுக நோட்டீஸ்

பல் பிடுங்கிய விவகாரம்: காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.