டிஜிட்டல் திண்ணை: பழுப்பது நிச்சயம்… ஸ்டாலின் வீட்டில் நடந்த ஆலோசனை!

Published On:

| By Kavi

வைஃபை ஆன் செய்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்த வீடியோ இன்பாக்சில் வந்து விழுந்தது.

அதைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“ஆகஸ்டு 5 ஆம் தேதி திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின், தனது கொளத்தூர் தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் சுறுசுறுப்பாக பங்கேற்றார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, உதயநிதிக்கு துணை முதல்வர் வழங்கப்படுமா என்று ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், ‘அதுபற்றி கோரிக்கை வலுத்துள்ளது. ஆனால் பழுக்கவில்லை’ என்று பதிலளித்தார்.

உதயநிதிக்கு துணை முதல்வர் வழங்குவது குறித்து திமுகவில் பலரும், ஏன் உதயநிதியே கூட பேசியிருக்கிறார். பிற கட்சித் தலைவர்கள் கூட கருத்து தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் இதுவரை பதிலே அளித்ததில்லை. முதல் முறையாக ஆகஸ்டு 5 ஆம் தேதி தனது கொளத்தூர் தொகுதியில் இருந்தவாறு ஸ்டாலின் அளித்த பதில் பரபரப்பான விவாதத்துக்கு வித்திட்டுள்ளது.

ஆகஸ்டு 1 ஆம் தேதி டிஜிட்டல் திண்ணையில், ‘உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி உண்டா இல்லையா? கேட்டவரிடம் ஸ்டாலின் சொன்ன பதில்’ என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

அந்த செய்தியில் குறிப்பிட்டதைத்தான் நேற்று ஸ்டாலின் பொது வெளியில் பதிலாக சொல்லியிருக்கிறார்.

முதல்வர் ஸ்டாலின் வரும் ஆகஸ்டு 27 ஆம் தேதி அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார். வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி தான் சென்னை திரும்புகிறார். இந்த நிலையில் உதயநிதியை அதற்குள் துணை முதல்வர் ஆக்கிடுவார் என்று எதிர்பார்ப்புகள் நிலவிய சூழலில்தான், ‘இன்னும் பழுக்கவில்லை’ என பதிலளித்திருக்கிறார் ஸ்டாலின். அவரது இந்த பதிலைக் கேட்டு பல அமைச்சர்கள், குறிப்பாக இளைஞரணி நிர்வாகிகள் அப்செட் ஆகிவிட்டனர்.

ஸ்டாலின் அமெரிக்க பயணத்துக்கு முன் உதயநிதி துணை முதல்வர் ஆக்கப்படும் அறிவிப்பு வரும் என்ற எதிர்பார்ப்பில் அதைக் கொண்டாடும் விதமாக பலர் ஏற்பாடுகளையும் திட்டமிட ஆரம்பித்தனர். போஸ்டர்கள், விளம்பரங்கள் என டிசைன்களையும் வடிவமைத்துத் தயாராக இருந்தனர்.

இந்த சூழலில்தான் ஸ்டாலின் இப்படி ஒரு பதிலை சொல்லியிருக்கிறார். முதல்வரின் பதிலுக்கு பின்னணி குறித்து சித்தரஞ்சன் சாலை வட்டாரத்தில் விசாரித்தபோது,

‘சமீப நாட்களாக முதலமைச்சரை உற்று கவனித்துப் பார்த்தால் தெரியும், ஒரே நாளில் நான்கு அல்லது ஐந்து நிகழ்ச்சிகளில் கூட கலந்துகொள்கிறார். தினமும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். பிரேமலதா போன்றவர்கள் தனது உடல் நிலை குறித்து அநாகரீகமாக பேசிய நிலையில், இதுபோன்ற தொடர் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலமாக நாகரீகமாக பதிலடி கொடுத்து வருகிறார் ஸ்டாலின்.

அதுமட்டுமல்ல… இப்போதே உதயநிதியை துணை முதல்வர் ஆக்கினால் தனது உடல் நிலை பற்றிய கேள்விகள் அதிகமாவதை அவர் விரும்பவில்லை.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 53% வாக்குகளை வாங்கி பெரும் வெற்றி பெற்றது. 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 46% வாக்குகள் பெற்று ஸ்டாலின் முதலமைச்சரானார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 47% வாக்குகள் பெற்றது. இதே ரீதியில் கணக்கிட்டால் … 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் ஆட்சிக்கு எதிரான அதிருப்தி இருக்கும்.  அந்தவகையில்  5 சதவிகித வாக்குகள் குறைந்தாலும்  திமுக கூட்டணி சராசரியாக குறைந்தபட்சம்  42% வாக்குகளை பெறும். ஆனால்  எதிர்க்கட்சிகள் இந்த வாக்குசதவிகிதத்தை எட்ட முடியாது.  ஐந்து வருட ஆட்சியின் முடிவில் நலத்திட்டங்களால் கிடைக்கும் மக்களின் ஆதரவு மூலம் மீண்டும் ஆட்சியை தொடர முடியும் என்று நம்புகிறார் ஸ்டாலின்.

இப்படிப்பட்ட அரசியல் சூழலில் உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக்கினால், வரும் சட்டமன்றத் தேர்தலில் தன்னை முன்னிறுத்துவதா, உதயநிதியை முன்னிறுத்துவதா என்ற கேள்வி எழும் என நினைக்கிறார். முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின் என்று சொல்வதே நன்றாக இருக்கும் என கருதுகிறார். அந்த அடிப்படையில்தான் துணை முதல்வர் கோரிக்கை இன்னும் பழுக்கவில்லை என்று சொல்லியிருக்கிறார்” என்கிறார்கள்.

அதேநேரம் இதுகுறித்து உதயநிதிக்கு நெருக்கமானவர்கள் தரப்பில் விசாரித்தபோது, ‘இதுவரை இந்த விவகாரம் குறித்து முதலமைச்சர் எந்த கருத்தும் கூறவில்லையே என்பது ஒரு பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. இப்போது ஸ்டாலின் அதை நிறைவேற்றிவிட்டார். அதாவது கோரிக்கை வலுத்துள்ளது இன்னும் பழுக்கவில்லை என்று சொல்லியிருக்கிறார்.

அப்படியென்றால் கோரிக்கை வலுத்துள்ளது என்பதை முதல்வரே ஒப்புக் கொண்டிருக்கிறார். கோரிக்கை பூக்கவில்லை, காய்க்கவில்லை என்று சொன்னால்தான் தாமதமாகும் என்று அர்த்தம்.

ஆனால் முதல்வரோ பழுக்கவில்லை என்றுதான் சொல்லியிருக்கிறார். ஆக உதயநிதியை துணை முதல்வர் ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை பூத்துவிட்டது, காய்த்துவிட்டது இன்னும் பழுக்கத்தான் இல்லை என்பதே முதல்வரின் பதிலில் இருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டும். காய்த்தது நிச்சயம் பழுத்தே தீரும். அதுவும் மிக விரைவில் பழுத்துவிடும் என்பதே இயற்கை. எனவே உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி விரைவில் வழங்கப்படும்’ என்று நம்பிக்கையாக சொல்கிறார்கள்.

ஏற்கனவே உதயநிதி சட்டமன்றத் தேர்தலில் நிற்க மாட்டார் என்று ஸ்டாலினே சொன்னார். என் குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்றும் சொன்னார். ஆனால் உதயநிதி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பலர் கோரிக்கை வைத்தார்கள். அதன் அடிப்படையில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டார். சட்டமன்ற உறுப்பினரான உதயநிதியை அமைச்சர் ஆக்க வேண்டுமென்றும் கோரிக்கைகள் எழுந்தன. அதன் பின் அவர் அமைச்சராகவும் ஆக்கப்பட்டார். அதே வரிசையில்தான் உதயநிதி துணை முதல்வர் ஆக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துள்ளன. விரைவில் இதுவும் நடக்கும். முதல்வர் அமெரிக்கா செல்லும் முன்னர் ஆகஸ்டு 19 ஆம் தேதி உதயநிதி துணை முதல்வர் ஆகலாம் என்று உதயநிதி வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

இதற்கிடையில் ‘பழுக்கவில்லை’ என்று ஸ்டாலின் பதிலளித்த ஆகஸ்டு 5 ஆம் தேதியன்று மாலை சித்தரஞ்சன் சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, மாப்பிள்ளை சபரீசன் ஆகியோர் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள்.

ஆகஸ்டு 5 ஆம் தேதி மாலை 6.20 மணிக்கு சபரீசன் தனது இல்லத்தில் இருந்து முதல்வரின் இல்லத்துக்கு சென்று அவரோடு முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.

அடுத்த சில நிமிடங்களில் அதாவது இரவு 7.30 மணி வாக்கில் உதயநிதி அங்கே வந்தார். முதல்வர், சபரீசன் ஆகியோரோடு உதயநிதியும் அந்த முக்கிய ஆலோசனையில் கலந்துகொண்டார். இந்த ஆலோசனை சுமார் 8 மணி வரை நீடித்தது.

வலுத்துள்ள கோரிக்கை பழுப்பது தொடர்பாகத்தான் இந்த ஆலோசனை என்று அடித்துச் சொல்கிறார்கள் சித்தரஞ்சன்சாலை வட்டாரங்களில்” என்ற மெசெஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

வங்கதேச நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது!

நட்சத்திர ஹோட்டல்களுக்கு மீண்டும் பார் உரிமம்: அன்புமணி கேள்வி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share