2026 சட்டமன்ற தேர்தலில் எந்த திசையில் இருந்து யார் வந்தாலும் திமுகதான் வெற்றி பெறும் என்று அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் இன்று (நவம்பர் 5) தவெக தலைவர் விஜய்க்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற்றது.
மாநாட்டில் பேசிய விஜய் ஆளும் திமுகவை கடுமையாக சாடியிருந்தார். தனது அரசியல் எதிரி திமுக என்றும் மக்கள் விரோத திராவிட மாடல் அரசு என்றும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
விஜய் பெயரை குறிப்பிடாமல் வாழ்க வசவாளர்கள் என்று முதல்வர் ஸ்டாலின் நேற்று (நவம்பர் 4) பதிலடி கொடுத்திருந்தார்.
இந்தநிலையில், திமுக துணை பொதுச்செயலாளரும் வனத்துறை அமைச்சருமான பொன்முடியின் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கலைஞர் திருவுருவச்சிலையை திறந்து வைப்பதற்காக இன்று விழுப்புரம் மாவட்டத்திற்கு உதயநிதி சென்றிருந்தார்.
முன்னதாக கடந்த நவம்பர் 2-ஆம் தேதி நடைபெற்ற விழுப்புரம் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தின் போது விஜய்யின் மாநாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, விழுப்புரம் மாவட்டத்திற்கு சென்ற உதயநிதி ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆயிரக்கணக்கில் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இன்று மாலை விழுப்புரம் தெற்கு மாவட்டக்கழகம் சார்பில் திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி, திருவெண்ணெய்நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் திருவுருவச்சிலையை உதயநிதி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் கெளதம சிகாமணி, திமுக விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “இன்றிலிருந்து 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை மேற்கொள்வோம். நம்முடைய அரசின் மூன்றரை ஆண்டுகால திட்டத்தை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்போம்.
ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பயனாளி இருக்கிறார்கள். அந்த பயனாளிகளைத் தொடர்புகொண்டு நீங்கள் ஒவ்வொருவரும் பிரச்சாரத்தை ஆரம்பிக்க வேண்டும்.
கலைஞர் சிலையின் முன்பு நாம் அனைவரும் உறுதியேற்போம். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் நம்மை எதிர்த்து யார் நின்றாலும், எப்பேர்ப்பட்ட கூட்டணி அமைத்தாலும், எந்த திசையில் இருந்து வந்தாலும், டெல்லியில் இருந்து வந்தாலும் லோக்கலில் இருந்து வந்தாலும் திமுகவுக்கு தான் வெற்றி” என்று தெரிவித்திருந்தார்.
நடிகர் விஜய்யின் பெயரை குறிப்பிடாமல் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் மிக முக்கியமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தெலுங்கர்கள் குறித்து அவதூறு பேச்சு… கஸ்தூரி மீது பாய்ந்த வழக்கு!
கூடுதல் அட்வகேட் ஜெனரலாக காங்கிரஸ் வழக்கறிஞர் சந்திரமோகன் நியமனம்!