நான் துணை முதலமைச்சராகப் போவதாக வரும் செய்திகள் வதந்தி என்று திமுக இளைஞரணி செயலாளரும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜூலை 20) தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் இன்று திமுக இளைஞரணியின் 45-ஆம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இளைஞர் அணிக்கு மாவட்ட வாரியாக சமூக வலைத்தளப் பக்கங்களை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பின்னர் பேசிய உதயநிதி, “எனக்கு துணை முதல்வர் பதவி தர வேண்டும் என்று இங்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பத்திரிகைகளில் வருகின்ற கிசுகிசுக்கள், வதந்திகளை எல்லாம் படித்துவிட்டு வந்து நாமும் ஒரு துண்டு போட்டு வைப்போம் என்ற அடிப்படையில் இங்கு பேசியிருக்கிறீர்கள்.
தலைவர் ஸ்டாலின் எந்த பொறுப்புக்கு சென்றாலும், இளைஞரணி செயலாளர் என்பது தான் எனது மனதிற்கு மிக மிக நெருங்கிய பொறுப்பு என்று கூறுவார். அதேபோல துணை முதலமைச்சராக ஆகப்போகிறீர்களா என்று பத்திரிகை நண்பர்கள் என்னிடம் பலமுறை கேட்டபோது, எல்லா அமைச்சர்களும் எங்களுடைய முதலமைச்சருக்கு துணையாக தான் இருப்போம் என்று சொன்னேன்.
அதேபோல இங்கு வந்திருக்கக்கூடிய அத்தனை அமைப்பாளர்களும் நம்முடைய முதலமைச்சருக்கு துணையாகத்தான் இருப்போம். எவ்வளவு பெரிய பொறுப்பு வந்தாலும், என்னுடைய மனதிற்கு மிக மிக நெருங்கிய பொறுப்பு இளைஞரணி செயலாளர் என்ற பொறுப்பு தான். எனவே எந்த பொறுப்பு வந்தாலும் இளைஞரணியை மறந்துவிட மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆம்ஸ்ட்ராங் கொலை: அரசியல்வாதிகள் பின்னணியில் ரவுடிகள்… நாராயணன் திருப்பதி ஓபன் டாக்!
துயரங்கள் நம்மைக் கவர்வது ஏன்?