பாஜக அரசை ஒழிக்க கவனம் செலுத்த வேண்டும் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து 50 மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி, காது கேட்கும் கருவி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி சர்ச்சை தொடர்பாக காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு வந்த அதீத கூட்டம் தான் காரணம் என கூறப்படுகிறது. இதுபோன்று மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி தொடர்பாக உண்மையான காரணம் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சனாதானம் குறித்து 200 ஆண்டுகளாக பேசிக் கொண்டே இருக்கிறோம். தற்போது பாஜகவின் ரூ.7.5 லட்சம் கோடி ஊழல் குறித்தும் மணிப்பூர் கலவரம் குறித்தும் பேச வேண்டியது கட்டாயம். அத்துடன் பாஜக அரசை ஒழிக்க கவனம் செலுத்த வேண்டும்
அதிமுக தொடர்ந்து தேர்தலில் தோல்வியடைந்து வருகிறது. அதனால் தான் ஒரே நாடு ஒரே தேர்தலை அதிமுக இப்போது ஆதரிக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் நடந்தால் அந்த தேர்தலிலும் ஒரேயடியாக தோல்வியடைந்துவிட்டால் அதிமுக மன திருப்பதி அடைந்துவிடும்.
தேர்தலை எதிர்கொள்ள திமுக தயாராக இருக்கிறது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீட்டுக்கு அனுப்பி இந்தியா கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமையும்” என்று தெரிவித்தார்.
தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது : கர்நாடக முதல்வர் சித்தராமையா
இசைக்கச்சேரியில் பங்கேற்காதவர்களுக்கு பணம் திருப்பி செலுத்தப்படும்: ஏசிடிசி நிறுவனர்