இளைஞர்களிடம் செல்வாக்கு, தேர்தல் பிரச்சாரங்களில் வரவேற்பு என திமுகவின் முகமாக மாறியுள்ளார் உதயநிதி ஸ்டாலின். அரசியல் பின்னணியுள்ள குடும்பத்திலிருந்து வந்தவர் உதயநிதி ஸ்டாலின் என்று அவர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், தனது செயலால் விமர்சனங்களை தவிடு பொடி ஆக்கி வருகிறார். சிரித்த முகம், தக் லைஃப் கமெண்ட் என அரசியல் கடந்து அனைவராலும் ரசிக்கப்படுகிறார் உதயநிதி.
நவம்பர் 27-ஆம் தேதி 1977-ஆம் ஆண்டு பிறந்த உதயநிதி ஸ்டாலின், சென்னை டான் போஸ்கோ பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை நிறைவு செய்தார். பின்னர் சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் பட்டப்படிப்பை முடித்தார்.
கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த உதயநிதி, கல்லூரி கலாச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கிருத்திகாவை முதன்முதலில் சந்தித்திருக்கிறார். அவரை பார்த்த தருணத்திலேயே உதயநிதிக்கு கிருத்திகா மீது காதல் மலர்ந்துள்ளது.
உதயநிதி கிருத்திகாவிடம் புரோபஸ் செய்ய, அரசியல் பின்னணியில் உள்ள குடும்பம் என்பதால் கிருத்திகா முதலில் உதயநிதியின் காதலை மறுத்துவிடுகிறார். பின்னர் உதயநிதியிடம் நட்பாக பழக ஆரம்பித்த கிருத்திகா, போக போக உதயநிதியின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினார்.
கல்லூரியில் படிக்கும் போது துவங்கிய இவர்களது காதல் 2002-ஆம் ஆண்டு திருமணத்தில் முடிகிறது.
”சினிமா, கட்சிப் பணிகளில் தொடர்ந்து ஈடுபடுவதால் பல சமயங்களில் வீட்டிற்கே செல்ல முடியாது. அந்த சமயங்களில் கிருத்திகா தான் அவரது இயக்குனர் பணியையும், குடும்பத்தையும் சிறப்பாக பார்த்து கொள்கிறார்.” என்று உதயநிதி கூறுவார்.
2008-ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தை துவங்குகிறார். தனது முதல் படத்தில் நடிகர் விஜய் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் உதயநிதி. இதனால் விஜய்க்காக காத்திருந்து குருவி திரைப்படத்தை தயாரித்தார்.
பின்னர், 2009-ஆம் ஆண்டு ஆதவன் திரைப்படத்தை தயாரித்த உதயநிதி ஸ்டாலின், படத்தின் இறுதிக் காட்சியில் எண்ட்ரி கொடுத்து அசத்தியிருப்பார்.
தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, மதராசப்பட்டிணம், பாஸ் என்கிற பாஸ்கரன், மைனா உள்ளிட்ட திரைப்படங்களை சினிமாவில் விநியோகம் செய்து தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை உருவாக்கினார் உதயநிதி ஸ்டாலின்.
2012-ஆம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் நடித்தார். முதலில் உதயநிதி, தான் படத்தில் நடிக்கப்போவதை தனது அம்மா துர்கா ஸ்டாலிடன் கூறிய போது படத்தில் நடிக்க வேண்டாம் என்று அவரது அம்மா அட்வைஸ் செய்திருக்கிறார்.
பின்னர் படம் வெளியான போது படத்தை பார்த்த துர்கா ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலினின் படம் ரொம்ப நன்றாக இருப்பதாக மகனை உச்சி முகர்ந்து பாராட்டினார். ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் உதயநிதி ஸ்டாலினுக்கு நல்ல துவக்கமாக இருந்தது.
தொடர்ந்து இது கதிர்வேலன் காதல், நண்பேண்டா, கெத்து உள்ளிட்ட கமர்ஷியல் படங்களில், நடித்த உதயநிதி ஸ்டாலின், 2016-ஆம் ஆண்டு வெளியான மனிதன் திரைப்படத்தில் நடைபாதைகளில் வசிக்கக்கூடிய மக்களுக்காக வாதாடும் ஒரு சமூக அக்கறையுள்ள வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.
இந்த திரைப்படத்தை தனது தாத்தா கலைஞருக்கு காண்பிக்க முடியவில்லை என்பதில் வருத்தம் இருப்பதாக உதயநிதி அடிக்கடி தெரிவிப்பார்.
தொடர்ந்து 2019-ஆம் ஆண்டு வெளியான கண்ணே கலைமானே படத்தில் யதார்த்தமான நடிப்பிலும், சைக்கோ திரைப்படத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாகவும் உதயநிதி நடித்து, நடிப்பில் தன் மீதான விமர்சனங்களுக்கு பதில் தந்தார்.
2022-ஆம் ஆண்டு அருண் ராஜா காமராஜா இயக்கத்தில் வெளியான நெஞ்சுக்கு நீதி திரைப்படம் அவரது நடிப்பிற்கு தீனி போடும் வகையில் அமைந்தது. ஒடுக்கப்பட்ட மக்களுடைய பிரச்சனைகள் இப்படம் பேசியிருக்கும்.
சமீபத்தில் வெளியான கலக தலைவன் திரைப்படம் வசூல் ரீதியாக சுமாராகவும், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பையும் பெற்றது.
சினிமாவில் பிஸியாக வலம் வந்த உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு எண்ட்ரி கொடுத்தார்.
2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்காக 39 தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த தேர்தலில் திமுக கூட்டணி 38 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற்றது.
தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்த உதயநிதி ஸ்டாலினுக்கு, ஜூலை 4-ஆம் தேதி 2019-ஆம் ஆண்டு மறைந்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் இளைஞரணி செயலாளர் பதவியை வழங்கினார்.
திமுக எதிர்கட்சியாக இருந்தபோது, நீட் தேர்வு, குடியுரிமை சட்டத்திருத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
2020-ஆம் ஆண்டு திருக்குவளையில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் பரப்புரையை துவங்கிய உதயநிதி ஸ்டாலின், கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து திமுக பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் ஆக்டிவாக இயங்கிய உதயநிதி ஸ்டாலின், 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்காக 234 தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் மதுரையில் மோடி கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனையை கையோடு எடுத்து வந்திருக்கிறேன் என்று கூறி செங்கலை காட்டினார். இந்த போட்டோ மற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது.
தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் உதயநிதி பிரச்சாரத்திற்கு செல்லும் போது மக்கள் அவரிடம் செங்கலை கேட்ட சம்பவமும் அரங்கேறியது.
2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார்.
இந்த தேர்தலில் 69,335 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமகவைச் சேர்ந்த கஸ்ஸாலி தோற்கடித்தார்.
10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றியது. திமுக ஆட்சியை கைப்பற்றியதில் உதயநிதியின் பிரச்சார வியூகமும், இளைஞரணியை அவர் வழிநடத்திய விதமும் அரசியல் அரங்கில் பேசப்பட்டது.
தம்பி எப்பொழுதும் தொகுதியில் தான் இருக்கிறார் என்று ஸ்டாலினிடம் அமைச்சர்கள் சொன்ன போது புது பொண்டாட்டில்ல கொஞ்ச நாள் அப்படி தான் இருப்பார் என்று அப்பா சொன்னதாக உதயநிதி சொல்லி வருகிறார்.
ஸ்டாலினுக்கு ஒரு மகனாக இருப்பதில் எனக்கு பிரச்சனை இல்லை. ஆனால் ஒரு முதலமைச்சரான அவரிடம் ஒரு சட்டமன்ற உறுப்பினராக நான் இருப்பது தான் பெரிய சவாலாக உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் ரொம்ப ஸ்ட்ரிக்ட் என்றும் உதயநிதி தெரிவித்து வருகிறார்.
இப்படி அரசியல், சினிமா என ஆல் ரவுண்டராக வலம் வரும் உதயநிதி ஸ்டாலின் கடந்த நவம்பர் 23-ஆம் தேதி திமுக இளைஞரணி செயலாளராக இரண்டாவது முறையாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனால் நியமிக்கப்பட்டுள்ளார்.
உதயநிதியை அடுத்த திமுக தலைவராக கருதும் அவரது ஆதரவாளர்கள் 2023-ஆம் ஆண்டு நவம்பர் 27-ஆம் தேதி மாண்புமிகு அமைச்சராக இருப்பார் என்று இன்றே உரத்த குரலில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
செல்வம்
புதுப்பிக்கப்பட்ட ஏவிஎம் ஸ்டுடியோ!
கொடியேற்றத்துடன் தொடங்கியது கார்த்திகை தீப திருவிழா!