“வெளியூர், வெளிநாடு போய் விளையாட வேண்டுமென்றால் அதற்கான செலவு குறித்து கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை” என மாணவர்கள் மத்தியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (நவம்பர் 11) உரையாற்றினார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதிகளில் தங்கி பயிலும் 553 விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு “சாம்பியன்ஸ் கிட்” விளையாட்டு உபகரணங்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி பேசும்போது, “SDAT விடுதி மாணவர்களான நீங்கள் எப்போதுமே எங்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். தேசிய அளவிலான அல்லது மாநில விளையாட்டுப் போட்டி உள்ளிட்ட எந்த ஒரு விளையாட்டு போட்டி நடந்தாலும், கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் உறுப்பினர் செயலர் ஆகியோரிடம், SDAT வீரர்கள் வந்துள்ளார்களா? எத்தனை பேர் கலந்துகொண்டுள்ளார்கள்? அவர்களுக்கு போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? அவர்கள் விளையாட்டு போட்டிகளை பார்ப்பதற்கான வாய்ப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்று நான் எப்போதும் கேட்பேன்.
மற்ற இடங்களில் hostels என்று சொன்னால் தங்குமிடம், உண்டு உறைவிடம் என்று அர்த்தம். ஆனால், SDAT ஹாஸ்டல் என்றால், தலைசிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கான விளையாட்டு வீரர்களை பட்டைத்தீட்டுவதற்கான பயிற்சி களம் என்று தான் சொல்லவேண்டும்.
SDAT மாணவர்கள் இன்றைக்கு பல்வேறு சர்வதேச, தேசிய மாநில அளவிலான போட்டிகளில் சாதித்து வருகின்றீர்கள். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் தம்பிகள் பிரவீன், ரமேஷ், சந்தோஷ். தங்கைகள் சுபா வித்யா ஆகியோர் ஒலிம்பிக்ஸ் வரை சென்று தமிழ்நாட்டுக்கும். இந்தியாவிற்கும் பெருமை தேடித் தந்துள்ளீர்கள்.
நீங்கள் இன்றைக்கு மாணவர்களாக வீரர்களாக இருக்கலாம். ஆனால், நாளைக்கு வருங்காலத்தில் விளையாட்டுத்துறையின் மிகப்பெரிய சாதனையாளர்களாக உருவாக உள்ளீர்கள். முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு நம்முடைய SDAT விடுதி மாணவர்கள் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளது.
அந்த நம்பிக்கையின் அடையாளமாகத்தான் உங்கள் சாதனைக்கு துணை நிற்கக் கூடிய வகையில், இங்கே இந்த சாம்பியன்ஸ் கிட்ஸை வழங்குகின்றோம்.
வெளியூர், வெளிநாடு போய் விளையாட வேண்டுமென்றால் அதற்கான செலவு குறித்து கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. உங்களுடைய திறமைக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்றுதான், முதலமைச்சர் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை இரண்டு வருடங்களுக்கு முன்னர் தொடங்கி வைத்தார்.
இந்த அறக்கட்டளை மூலமாக இதுவரை 600 க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகளுக்கு ரூபாய் 14 கோடி அளவுக்கு நிதி உதவிகள் வழங்கி இருக்கின்றோம். இதற்காக நீங்கள் Inchampions.sdat.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்தால், உங்களுடைய திறமைக்கும் தேவைக்கும் ஏற்ப நிச்சயம் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் நிதி உதவிகள் வழங்கப்படும்.
நம்முடைய விளையாட்டு விடுதி (Sports Hostel) மாணவர்களுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையில் இருந்து உடனுக்குடன். நிதி உதவியை வழங்கி வருகின்றோம். நீங்கள் வெற்றி பெற்று. தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்தால். கண்டிப்பாக உங்களுடைய திறமையை அங்கீகரிக்கின்ற வகையில், முதலமைச்சர் உயரிய ஊக்கத்தொகையை தொடர்ந்து வழங்கி வருகின்றார்.
இதை நான் ஏன் சொல்கின்றேன் என்றால், திராவிட மாடல் அரசு அமைந்த இந்த 3 ஆண்டுகளில் சுமார் 108 கோடி ரூபாய் அளவிற்கு உயரிய ஊக்கத்தொகையை முதலமைச்சர் வழங்கியுள்ளார்.
தமிழக அரசின் திட்டங்களையெல்லாம் நன்றாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். நல்ல முறையில் பயிற்சி செய்யுங்கள். விளையாட்டுத்துறையில் நீங்கள் மேற்கொள்கின்ற முயற்சிகள் நிச்சயம் உங்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திருநம்பிகள் சிக்கினால், ஹமாஸ் என்ன செய்வார்கள்? இஸ்ரேல் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!
வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள்… நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட உத்தரவு!