தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1000 : உதயநிதி உறுதி!

அரசியல்

விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலையும், தகுதியுள்ள அனைத்து மகளிருக்கு உரிமைத்தொகையும் வழங்கப்படும் என்று துணை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலை சென்றுள்ளார்.

இன்று (அக்டோபர் 19) திருவண்ணாமலையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் 803 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுமார் ரூ.78.05 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் இணைப்புகளை வழங்கினார்.

‘கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம்’ மூலம் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1480 ஊராட்சி மன்றங்களுக்கு 1850 எண்ணிக்கையிலான விளையாட்டு உபகரண தொகுப்புகளையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டார்.

Image

நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “விளையாட்டு வீரர்களின் வெற்றிக்கு திராவிட மாடல் அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பது விளையாட்டு வீரர்களின் கோரிக்கை. முதல்கட்டமாக 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும். 2 ஆண்டுகளில் 513 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.10 கோடி நிதியுதவி வழங்கியுள்ளோம்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “மகளிருக்காக இந்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் 43 சதவிகித மகளிர் வேலைக்கு செல்கின்றனர். இது நமக்கு கிடைத்த பெருமை.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை 1.16 கோடி மகளிருக்கு மாதம்தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்பட்டுள்ளது. ஒருசில மாவட்டங்களில் சில குறைபாடுகள் இருக்கிறது.

எங்களுடைய பெயர் விடுபட்டுள்ளது. பக்கத்து வீட்டு அக்காவுக்கு 1000 ரூபாய் வருகிறது. எங்களுக்கு வரவில்லை என்று சில பெண்கள் சொல்கிறார்கள். உறுதியாக சொல்கிறேன், தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் ரூ.1000 உரிமை தொகை விரைவில் வழங்கப்படும்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “திருவண்ணாமலை மாவட்டத்தில் சர்வதேச அளவிலான ஹாக்கி ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்தோம். அதற்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டேடியம் ஓராண்டில் அமைத்து தரப்படும் ” என்று அறிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

பிரியா

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: ரேவதி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)

ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள்: உத்திரட்டாதி (18.10.2024 முதல் 15.11.2024 வரை)

 

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0