துணை முதல்வர் பதவி குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என்று விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி இன்று (செப்டம்பர் 18) கூறியுள்ளார்.
அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி தொடர்பாக கடந்த சில மாதங்களாகவே பேசப்பட்டு வருகிறது. முதல்வர் அமெரிக்கா சென்ற போது உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என்று சொல்லப்பட்டது. ஆனால் இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை.
இந்நிலையில் திமுக முப்பெரும் விழாவில் ஸ்டாலின் விருது பெற்ற எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பேசுகையில், உதயநிதியை துணை முதல்வர் ஆக்க வேண்டாமா? இன்னும் ஏன் தயக்கம்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்தசூழலில் இன்று (செப்டம்பர் 18) 11.30 மணிக்கு உதயநிதி துணை முதல்வராக நியமிக்கப்படும் அறிவிப்பு வரும் என்று திமுகவினர் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
அதேசமயம் உதயநிதி ஸ்டாலின், கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பெரியார் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் திமுக மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்நிலையில் கோட்டூர்புரத்தில் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் துணை முதல்வர் பதவி தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
“அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஆலோசனை நடத்தியுள்ளார், தொண்டர்கள் இனிப்பு பட்டாசுகளோடு காத்திருக்கின்றனர். 11.30 மணிக்கு அறிவுப்பு வரும் என்று நேரமெல்லாம் குறிப்பிட்டிருந்தார்களே என்ற கேள்விக்கு, “யார் சொன்னது… நான் அறிவாலயம் போகவில்லை. எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பேசியது அவருடைய விருப்பம்… உங்கள் விருப்பம் என்ன சொல்லுங்கள்?
எதுவாக இருந்தாலும் முதல்வர் முடிவெடுப்பார்… முழுக்க முழுக்க முதல்வரின் தனிப்பட்ட முடிவாக இருக்கும். எல்லா அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாக இருப்போம்” என்றார்.
தவெக தலைவர் விஜய் பெரியார் திடலுக்கு சென்று மரியாதை செலுத்தியது குறித்து பேசிய அவர், “யாராக இருந்தாலும் தமிழ்நாட்டில் பெரியாரை தொடாமல் அரசியல் செய்ய முடியாது. விஜய்க்கு வாழ்த்துகள்” என குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
”என் மகன் என்கவுண்டருக்கு சம்போ செந்தில் தான் காரணம்”: காக்காதோப்பு பாலாஜியின் தாய் கண்ணீர்!
புரட்டாசி மாத நட்சத்திர பலன் – சித்திரை! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)