உதயநிதி சனாதனம் பற்றி பேசியிருப்பது மக்களை திசை திருப்பும் செயல் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறியிருப்பது நாடு முழுவதும் புயலை கிளப்பியிருக்கிறது. அவரது பேச்சுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கோவையில் இன்று (செப்டம்பர் 5) செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது.
சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு என மக்களை வாட்டி வதைத்து வரும் இந்த வேளையில் அவர்களை திசை திருப்புவதற்காக சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருக்கிறார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு எதிராக திமுக வாக்களித்தது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கும் எதிர்த்து வாக்களித்தனர். சனாதன தர்மம் பற்றி பேசுகிறவர்கள் இப்படி நடந்துகொண்டனர்.
அதோடு திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நீதிபதியை இழிவாக பேசினார்.
முன்னாள் சபாநாயகர் தனபாலை தாக்கி, அவரது முன் இருந்த மைக்கை உடைத்து, நாற்காலிகளை உடைத்து அவருக்கு எதிராக செயல்பட்டவர்கள் தான் திமுகவினர்.
இப்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக துரோகம், அநீதி இழைத்த கட்சிதான் திமுக. இவர்கள் சனாதனத்தை பற்றி பேசுவது எல்லாம் வேடிக்கையாக இருக்கிறது.
அதிமுக மதத்திற்கும், சாதிக்கும் அப்பாற்பட்ட கட்சி. உதயநிதி கூறியதை பேசு பொருளாக்கியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துவிட்டது.
அனைத்து துறையிலும் ஊழல், பல்லடத்தில் 4 பேர் துடிக்க துடிக்க கொலை செய்யப்பட்டுள்ளனர். செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஊழல்களை மறைப்பதற்கும், விலைவாசி உயர்வை மறைப்பதற்கும் இன்று இந்த நாடகத்தை திமுக அரங்கேற்றுகிறது. மக்களை திசை திருப்புவது திமுகவின் வாடிக்கை” என்றார்.
அப்போது அதிமுக அண்ணா திமுக இல்லை, அமித் ஷா திமுக என்று உதயநிதி சொல்லியிருக்கிறாரே என்று எடப்பாடி பழனிசாயிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், “உதயநிதி இப்படி பேசி பேசி தன்னை முன்னிலைப்படுத்தி கொள்கிறார். அவருக்கு என்ன தகுதி இருக்கிறது. கலைஞரின் பேரன், ஸ்டாலினின் மகன்… இதை தவிர அவருக்கு வேறு என்ன தகுதி உள்ளது.
உதயநிதிக்கு பிறகு இன்பநிதி வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என்று திமுகவினரே கூறியிருக்கிறார்கள். இப்படி அடிமைத்தனமான கட்சிதான் திமுக. அது குடும்ப ஆட்சி நடத்துகிறது. கார்பரேட் கம்பெனி.
இவர்களது வாரிசு அரசியல் முடிவுகட்டப்படும். அன்று காங்கிரஸை எதிர்த்த திமுக இன்று எதற்கு அந்த கட்சியோடு கூட்டணி வைத்திருக்கிறது.
இந்தியாவுக்கே முதன்மையான அரசாங்கம், முதன்மையான முதல்வர் நான் தான் என்று தன்னை தானே ஸ்டாலின் கூறிக்கொள்கிறார்.
தன்னை தானே புகழ்ந்துகொள்ளும் முதல்வர் எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க வேண்டியதுதானே? ஏன் பயப்படுகிறீர்கள்?” என்று ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பேசினார்.
“திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டு காலத்தில் என்ன செய்தது. இரண்டரை ஆண்டு காலத்தில் 2.75 லட்சம் கோடி கடன் வாங்கிவிட்டார்கள்.
மதுபானக் கடை, பத்திரப் பதிவு, ஜிஎஸ்டி என அனைத்திலும் அதிக வருமானம் வந்த போதும், அதிக கடன்கள் வாங்கினாலும் தமிழ்நாட்டு மக்களுக்காக திமுக எதுவும் செய்யவில்லை” என்று கண்டனம் தெரிவித்தார்.
பிரியா
அயோத்தி சாமியாரின் பேச்சு வன்முறையல்ல: செல்லூர் ராஜூ
“இந்தியா என்ற சொல் பாஜகவை மிரட்டுகிறது” – ஸ்டாலின்