இந்து மதத்தை இழிவுபடுத்திய உதயநிதி ஸ்டாலினை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழர் வ. உ சிதம்பரனார் 152 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ராஜாஜி சாலையில் உள்ள துறைமுக வளாகத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் “தமிழ்நாடு கொலை கொள்ளை மாநிலமாக திகழ்கிறது. வாழ்வதற்குரிய நிலைமையை இந்த அரசாங்கம் உறுதிப்படுத்தவில்லை.
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கின்ற வகையில் நாடு சீர் கெட்டு மக்கள் பாதுகாப்பாக வாழ முடியாத சூழல் உள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மக்களை திசை திருப்ப வேண்டும் என்பதற்காக சனாதனம் என்ற ஆயுதத்தை திமுக கையில் எடுத்து விமர்சனப் பொருளாய் ஆக்கியிருக்கிறது.
1947 ஆம் ஆண்டு சுதந்திரத்திற்கு பிறகு அரசியலமைப்பு சட்டத்தின்படி அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளது. சமதர்மம் பேசும் இவர்கள் இந்தியா கூட்டணியில் திருமாவளவனை ஒருங்கிணைப்பாளராக போட ஏன் முயற்சி எடுக்கவில்லை.
உதயநிதிக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகம் தேவை என்பதற்காக ஒரு மதத்தை இழிவு படுத்தலாமா.
மக்களை திசை திருப்பும் முயற்சியாகவும் மக்களை ஏமாற்றும் முயற்சியாகவும் உதயநிதி செய்து வருகிறார்.
கிறிஸ்துவ மதமாக இருந்தாலும் இஸ்லாமிய மதமாக இருந்தாலும் எந்த மதமாக இருந்தாலும் மதத்தை இழிவு படுத்துவதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
ஒரு மதத்தை இழிவுபடுத்தினால் அது யாராக இருந்தாலும் அது தண்டனைக்குரிய விஷயம். உதயநிதி மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மீறியதால் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும்” என தெரிவித்தார்.
ஐசிசி உலகக் கோப்பை: இந்திய அணி அறிவிப்பு!
31 ஆண்டுகளுக்கு பின் இணையும் பாரதிராஜா- இளையராஜா கூட்டணி!