சங்கிகளை பார்த்து எனக்கு பரிதாபம் மட்டுமே வருகிறது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு, ‘சனாதனத்தை டெங்கு, மலேரியாவை போன்று ஒழிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இதுதொடர்பாக சமீபத்தில் பேசிய ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், “சனாதன தர்மத்தை அழிக்க போவதாக சிலர் சொல்கிறார்கள். உண்மையில் அவர்கள்தான் அழிந்துபோவார்கள்” என்று கூறியிருந்தார்.
இதற்கு உதயநிதி ஸ்டாலின் வெயிட் அண்ட் சீ என்று பதிலளித்திருந்தார்.
இந்தநிலையில் ஆந்திராவில் உள்ள கோயில் ஒன்றில் கால்மிதியில் உதயநிதியின் புகைப்படத்தை போட்டு அதை சிலர் காலால் மிதிக்கும் வீடியோ வைரலானது. இதற்கு திமுகவினர் கண்டனம் தெரிவித்து எதிர்வினையாற்றினர்.
என்னை இழிவு செய்வதாக நினைத்து தங்களின் அரசியல் முதிர்ச்சி இவ்வளவு தான் என்று அம்பலப்பட்டு நிற்கும் சங்கிகளைப் பார்த்து எனக்குப் பரிதாபம் மட்டுமே வருகிறது!
கொள்கை எதிரிகளுக்கு நம் மீது இவ்வளவு ஆத்திரம் வருகிறது என்றால், திராவிடக் கொள்கையினை நான் எந்தளவுக்குச் சரியாக… pic.twitter.com/rlLFPHUoJL
— Udhay (@Udhaystalin) October 9, 2024
இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “என்னை இழிவு செய்வதாக நினைத்து தங்களின் அரசியல் முதிர்ச்சி இவ்வளவு தான் என்று அம்பலப்பட்டு நிற்கும் சங்கிகளைப் பார்த்து எனக்குப் பரிதாபம் மட்டுமே வருகிறது!
கொள்கை எதிரிகளுக்கு நம் மீது இவ்வளவு ஆத்திரம் வருகிறது என்றால், திராவிடக் கொள்கையினை நான் எந்தளவுக்குச் சரியாக பின்பற்றுகிறேன் என்பதற்கான சான்றிதழாகவே இதனைப் பார்க்கிறேன்.
தந்தை பெரியார் மீது செருப்புகளை வீசினர். அண்ணல் அம்பேத்கரை எவ்வளவோ அவமதித்தார்கள். பேரறிஞர் அண்ணாவை வசைபாடி மகிழ்ந்தனர். கலைஞர் மீது ஏச்சுக்களையும் – பேச்சுக்களையும் தொடுத்தனர். முதல்வர் மீது வீசப்படாத கடுஞ்சொற்கள் இல்லை.
அனைவரும் சமம் என்கிற நமது கொள்கை அவர்களுக்கு எரிச்சலூட்டுகிறது. பிறப்பாலும் – மதத்தாலும் பிரித்தாளும் கொள்கையைப் பேசி மக்களை வெல்ல முடியாத அவர்களின் விரக்தி தான் நம்முடைய வெற்றி.
என் புகைப்படத்தை அவர்கள் காலால் இன்னும் நன்கு மிதிக்கட்டும். அவர்களின் அழுக்கேறிய மூளையை நம்மால் சுத்தம் செய்ய முடியாது. அவர்களின் கால்களாவது சுத்தமாகட்டும்.
திமுகவினர் இதைக்கண்டு கோபமுற வேண்டாம். இதற்கு எதிர்வினையாற்றுவதை – உணர்ச்சிவசப்படுவதைத் தவிருங்கள். சமத்துவப் பாதையில் என்றும் அயராது நடை போடுவோம்” என்று குறிபிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
பிக் பாஸ் – 8: டஃப் கொடுக்கும் ஆண்கள்… குழப்பத்தில் தவிக்கும் பெண்கள் அணி!
சாம்சங் தொழிலாளர்கள் கைது : நீதிமன்றத்தில் அவசர முறையீடு!