“யாரும் வாழ்த்து வாங்க வர வேண்டாம்…” -இளைஞர் அணி புதிய நிர்வாகிகளுக்கு உதயநிதி கட்டளை!

அரசியல்

திமுக வின் 15 வது உட்கட்சித்தேர்தல் கடந்த வருடம் அக்டோபர் மாதம் நடந்து முடிந்தது. அதனைதொடர்ந்து மீண்டும் அக்கட்சியின் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து அக்கட்சியின் பல்வேறு அணிகளுக்கான நியமனங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனிடையே உதயநிதி அமைச்சர் ஆனதால் இளைஞர் அணி நிர்வாகிகள் பட்டியலை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், திமுகவின் இளைஞர் அணிச் செயலாளராக 5-ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் உதயநிதி ஸ்டாலின் புதிய இளைஞரணி நிர்வாகிகள் பட்டியலை நேற்று (ஜூலை 5) வெளியிட்டுள்ளார்.

அதேநேரம், யாரும் தன்னை சந்தித்து வாழ்த்து வாங்க வர வேண்டாம் என்றும் இளைஞர் அணி புதிய நிர்வாகிகளுக்கு உதயநிதி கட்டளையிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக இளைஞர் அணியின் செயலாளராக 4 ஆண்டுகளை நிறைவுசெய்து, 5-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். இந்த மகிழ்வான தருணத்தில் மாவட்ட மாநகரங்களுக்கான இளைஞர் அணி அமைப்பாளர் / துணை அமைப்பாளர்கள் பட்டியலை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இளைஞர்களை வழிநடத்திடும் பெரும் பொறுப்பை ஒப்படைத்துத் தேவைப்படும் நேரங்களில் எல்லாம் அறிவுரை வழங்கி, புதிய முயற்சிகளை முன்னெடுக்கும் போதெல்லாம் வாழ்த்தும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் , பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னை முதன்முதலில் இளைஞர் அணியின் செயலாளராக நியமிக்கும் அறிவிப்பை வெளியிட்ட அன்றைய பொதுச்செயலாளர், பேராசிரியர் அன்பழகன், தங்களின் கொள்கைகளால் எப்போதும் நம்மை வழிநடத்திடும் தந்தை பெரியார், அண்ணா, கலைஞரையும் இந்த நேரத்தில் என் நினைவில் நிறுத்தி வணங்குகிறேன்.

கடந்த நான்கு ஆண்டுகளில், கிளைக் கழக அளவிலும், வட்ட/வார்டு அளவிலும் இளைஞர் அணி அமைப்பை உருவாக்கியது, தொகுதி தோறும் ‘திராவிட மாடல்’ பயிற்சிப் பாசறைக் கூட்டங்களை நடத்தியது, முரசொலியில் பாசறைப் பக்கத்தைத் தொடர்ந்து தயாரிப்பது, இல்லம்தோறும் சென்று இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை நடத்துவது, என மனதிற்கு நிறைவான பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளோம்.
அந்த வகையில், பொதுக்குழுவில் அனைத்து அணிகளும் சிறப்பாகச் செயலாற்றிட வேண்டும் எனவும், அணிகளுக்கான புதிய நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளை உடனடியாக மேற்கொள்ளும்படியும் அறிவுறுத்தினார் நம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

அதையொட்டி, இளைஞர் அணிக்கான மாவட்ட-மாநகர-மாநில நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான பணிகளை விரைந்து தொடங்கினோம். புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான அறிவிப்பைக் கடந்த டிசம்பர் 12-ம் தேதி வெளியிட்டோம். 72 கழக மாவட்டங்களிலிருந்தும் 4,158 விண்ணப்பங்கள் குவிந்தன.

விண்ணப்பதாரர்கள் அனைவரிடமும் அன்பகத்திலிருந்து அழைத்துப் பேசி தகவல்களைப் பெற்று, விண்ணப்பங்களை ஆவணமாக மாற்றினோம்.தொடர்ந்து, இளைஞர் அணியில் உள்ள 9 மண்டலங்கள் வாரியாக நேர்காணலுக்கான தேதிகளை அறிவித்தோம். நேர்காணல் மிக எளிதாக நடந்து முடிந்துவிடும் என்றுதான் எதிர்பார்த்தோம்.

ஆனால், அந்தப் பணி அவ்வளவு எளிதானதாக அமைந்துவிடவில்லை. சென்னை, கோவை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், சேலம் எனப் பயணித்துப் பல நாட்கள் பல மணிநேரங்கள் நேர்காணல்கள் தொடர்ந்தது. யாரைத் தேர்வு செய்வது யாரை விடுவது என எண்ணும் வகையில், நேர்காணல்கள் அமைந்தன. தகுதியும் கழக உணர்வும் நிறைந்த பலநூறு இளைஞர்களை நேர்காணலில் காண முடிந்தது.

தலைமுறை தலைமுறையாகப் பாதுகாத்து வரும் தங்கள் குடும்பத்தினரின் உறுப்பினர் அட்டைகளை அடுக்கி எடுத்து வந்து காண்பித்தனர்.

பழுப்பேறிய அந்த உறுப்பினர் அட்டைகளைப் பார்க்கும்போது ஏற்படுகிற உணர்ச்சியும் மகிழ்ச்சியும் அளவிட முடியாதது. பேரறிஞர் அண்ணா, கலைஞர் பேராசிரியர் அன்பழகன், மு.க.ஸ்டாலின் கையொப்பமிட்ட அந்த அடையாள அட்டைகள் நாம் எவ்வளவு பெரிய வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள் என்கிற பெருமிதத்தை அளித்தன.

தங்களின் பணிகளை எல்லாம் தொகுத்து அளித்த ஆல்பங்களையும், நிர்வாகிகளின் மினிட் புத்தகங்களையும், அதில் ஆய்வுசெய்து தலைவர் இட்டிருந்த கையெழுத்தையும் பார்க்கும்போது, எனக்கு பெரும் பொறுப்பு இருப்பதை உணர்த்தின. அமைப்பு ரீதியாக, இளைஞர் அணியை நம்முடைய தலைவர் அவர்கள் எந்த அளவுக்கு வலுப்படுத்தி இருக்கிறார் என்பதை உணர முடிந்தது.

அந்தப் பணிகளை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லவேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த நேர்காணலைத் தொடர்ந்தோம்.நிர்வாகிகளைத் தேர்வு செய்வது குறித்து அவ்வப்போது கேட்டறிந்த மு.க.ஸ்டாலின், காலதாமதத்தையும் சுட்டிக்காட்டினார். காலதாமத்திற்குக் காரணம் சரியான நபர்களைத் தேர்வு செய்வதற்கான எங்களின் மெனக்கெடல்கள்தான்.

நேர்காணல் பணி ஒருபுறம் என்றால். நேர்காணலுக்குப் பிறகு நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் பணிதான் அதிக நேரத்தை எடுத்துக்கொண்டது. நேர்காணலை மட்டும் வைத்து முடிவு செய்யாமல், அவர்களின் களப்பணிகளையும் துணைச் செயலாளர்களின் உதவியுடன் கேட்டறிந்து விவாதித்து ஒவ்வொரு முடிவையும் பார்த்துப் பார்த்து எடுத்துள்ளோம்.

நிர்வாகிகளின் நியமனத்திற்கு ஒப்புதலைப் பெறுவதற்காக, திமுக தலைவர் ஸ்டாலினை சமீபத்தில் சந்தித்த போது, நேர்காணலில் எங்களுக்குக் கிடைத்த அனுபவங்களைப் பகிர்ந்தோம். எந்தெந்த மாவட்டங்களில் இளைஞர் அணி சிறப்பாக இயங்குகிறது. எந்தெந்த மாவட்டங்களில் இளைஞர் அணி பணிகளில் தொய்வு உள்ளது…என அனைத்தையும் தெரிவித்தோம்.

எங்களின் மெனக்கெடல்களை தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தியது பெரும் உற்சாகத்தைத் தந்தது. அனுபவம் வாய்ந்த சில அமைப்பாளர்-துணை அமைப்பாளர்கள் அதே பொறுப்புகளில் தொடர்ந்து கழகப் பணியாற்ற தலைவர் வாய்ப்பு வழங்கியுள்ளார்கள். விண்ணப்பித்த 4,158 நபர்களிலிருந்து 609 பேர் தேர்வாகி, இளைஞர் அணியின் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டு உள்ளார்கள்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இளைஞர் அணி நிர்வாகிகள் அனைவருக்கும் என் வாழ்த்துகள். வாய்ப்பு கிடைக்காதவர்கள் சோர்வடைய வேண்டாம். உங்களின் கழகப்பணிகள் உரிய நேரத்தில் அங்கீகரிக்கப்படும். இளைஞர் அணியில் பணியாற்ற வேண்டும் என்ற பெருங்கனவோடு உள்ள அனைவருக்கும் என் அன்பு. நாம் அனைவரும் இணைந்து கழகப் பணியை மேற்கொள்வோம். தொடர்ந்து இணைந்து பயணிப்போம்.

இளைஞர் அணியை ‘இயக்கத்தின் புது இரத்தம்’ என்பார் கலைஞர் . இன்று புத்துணர்ச்சியோடு இயக்கப் பணியைத் தொடங்கியுள்ள நீங்கள் அது சற்றும் குறைந்திடாமல் பணிகளைத் தொடர்ந்திட வேண்டும். பேரறிஞர் அண்ணா, கலைஞர், பேராசிரியர் அன்பழகன் எனும் இயக்கத்தின் தத்துவத் தலைவர்களிடம் நேரடியாக அரசியல் பாடம் பயின்று அணியை வளர்த்தெடுத்த நம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழியில் செயலாற்றி கழகத்தின் வெற்றிக்கு உழைத்திட வேண்டும்.

திமுகவின் வளர்ச்சியும் வெற்றியும் வெறும் கட்சிக்கானது மட்டுமல்ல, அது ஒட்டுமொத்த தமிழ் நாட்டிற்கான வெற்றி, வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட- ஒடுக்கப்பட்ட-சிறுபான்மை மக்களுக்கான வெற்றி. ஆகையால், இவற்றை எல்லாம் உணர்ந்து இளைஞர் அணியின் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கலைஞரின் நூற்றாண்டிலும், இளைஞர் அணியை வளர்த்தெடுத்த மு.க.ஸ்டாலின் செயலாற்றும் இந்தத் தருணத்திலும் இளைஞர் அணியின் பொறுப்புக்கு வந்துள்ளீர்கள். கலைஞர் நம் தலைவருக்கு வழங்கிய அறிவுரை போல் இதைப் பதவியாக எண்ணாமல், பொறுப்பாக உணர்ந்து செயல்படுவீர்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

இந்தியா மிக இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாசிஸ்டுகளை விரட்டுவதற்கு பெரும் முன்னெடுப்பாக நம் முதலமைச்சர் நாடு முழுவதிலும் உள்ள தோழமை சக்திகளை ஒருங்கிணைக்கிறார். அதற்கு திமுக தலைவரின் கரங்களை வலுப்படுத்தும் பெரும் பொறுப்பு, நம்மிடம் உள்ளது. திமுகவின் சாதனைகளை ஒவ்வொருவரின் மனதிலும் நிலைநிறுத்தும் வகையில், நம் செயல்பாடுகள் அமைந்திட வேண்டும்.

அதைச் செய்து காட்டுவோம்.. நாற்பதையும் வென்று கழகத்தின் வெற்றியை உறுதி செய்திடுவோம்! பொறுப்பேற்றுள்ள இளைஞர் அணி நிர்வாகிகள், உடனடியாக சந்தித்து வாழ்த்து பெற நேரில் வர வேண்டாம் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

சில தினங்களில் புதுச்சேரி, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கான இளைஞர் அணி நிர்வாகிகள் பட்டியலும் வெளியாக உள்ளது. அதன் பிறகு, இளைஞர் அணியின் மாவட்ட-மாநகர-மாநில அமைப்பாளர்-துணை அமைப்பாளர்கள் கூட்டத்தை திமுக தலைவர் அறிவுரைப்படி நடத்தவுள்ளோம்.

எனவே, அந்தக் கூட்டத்தில் சந்திப்போம்.அதற்கு முன்பாக அந்தந்த மாவட்டங்களில் உங்களை ஒருங்கிணைக்கக்கூடிய மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கழகச் செயலாளர்கள். திமுக மூத்த முன்னோடிகளை, நேரில் சந்தித்து வாழ்த்து பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த நேரத்தில் திமுக தலைவருக்கும், பொதுச் செயலாளர், பொருளாளர், முதன்மைச் செயலாளர், தலைமைக் கழகம் சார்பில், இளைஞர் அணி பணிகளை ஒருங்கிணைக்கும் துணைப் பொதுச்செயலாளர் ராசா உள்ளிட்ட அனைத்து துணைச் பொதுச் செயலாளர் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். என்னுடன் தோளோடு தோள்நின்று செயலாற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழகங்களின் செயலாளர்கள் உட்பட அனைத்து திமுக நிர்வாகிகளுக்கும் நன்றி.
அனைவருக்கும் என் அன்பும் வாழ்த்தும்” என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

எழிலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: ரூ.2.24 லட்சம் பறிமுதல்!

குழந்தையின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் கிச்சா சுதீப்

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

1 thought on ““யாரும் வாழ்த்து வாங்க வர வேண்டாம்…” -இளைஞர் அணி புதிய நிர்வாகிகளுக்கு உதயநிதி கட்டளை!

  1. சிறப்பான அறிக்கை..புதிய ரத்தம் நேர்மையாளருக்கும் தன்னலம் பாராத தொண்டருக்கும் மட்டுமே பரவட்டும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *