மகன் உதயநிதி படத்தை ப்ரோமோட் செய்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிவாஜி ஸ்டைலில் வாக்கிங் செல்கிறார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (நவம்பர் 27), முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு அமைதி பேரணி நடத்துவதற்கு அனுமதி கேட்டும், பாதுகாப்பு வழங்கக் கேட்டும் மனு கொடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழ்நாடு என்பது சுகாதார தலைநகரமாக விளங்கியது. இந்தியாவிலிருந்து பலரும் சென்னை வந்து சிகிச்சை பெற்றுச் செல்வார்கள்.
திமுக பொறுப்பேற்ற நாளிலிருந்து மருத்துவத்துறை கேட்பாரற்று கிடக்கிறது. நடைப்பயணம் செய்வதைத்தான் முதல்வர் வாடிக்கையாக வைத்துள்ளார்.
கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு ஏற்பட்டது சாதாரணமான பிரச்சினை. அதற்கு உயிர் போக வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆனால் உயிரை எடுத்துவிட்டார்கள்.
இப்படி நடந்தால் அரசு மருத்துவமனைகள் மீது எப்படி மக்களுக்கு நம்பிக்கை வரும். குரோம்பேட்டையில் பிறந்து 4 நாட்கள் ஆன குழந்தை இறந்துள்ளது.
இதுபோன்று அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து அலட்சியமாக, கவனக்குறைவாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மருத்துவத் துறைக்கு நீதிமன்றமும் தனது வேதனையையும், கண்டனத்தையும் தெரிவித்துள்ளது. மருந்துகள் போதிய அளவில் இல்லாத நிலை இருக்கிறது.
நாட்டை பற்றியெல்லாம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கவலை இல்லை. அவர் மகன் நடித்த படம் ஓட வேண்டும். ப்ரோமோட் செய்வதற்காக வாக்கிங் ஸ்டிக் எல்லாம் எடுத்துச் செல்கிறார்” என்று கடந்த 21ஆம் தேதி அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் வாக்கிங் சென்றபோது முதல்வர் ஸ்டாலின் கலகத் தலைவன் எப்படி இருக்கிறது என கேட்டதைக் குறிப்பிட்டு பேசினார்.
‘உயர்ந்த மனிதன் சிவாஜி கணேசன் போன்று, அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே’ என்ற ஸ்டைலில் நடந்து கொண்டிருக்கிறார்.
முதல்வரின் கேள்விக்கு, அமைச்சரும் படம் பிரமாதம், யாருமே தியேட்டரில் இருந்து எழுந்துபோகவில்லை என்கிறார். நான் கேட்கிறேன் சீட்டில் ஃபெபிகால் போட்டு ஓட்டிவிட்டார்களா என்ன?. இதெல்லாம் நாட்டுக்கு ரொம்ப முக்கியமா?” என்று கேள்வி எழுப்பினார்.

தற்போது தட்டம்மை பரவிக் கொண்டிருக்கிறது, மெட்ராஸ் ஐ-யை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. மருத்துவர்களை மிரட்டுகிறார்கள், பணியிட மாற்றம் செய்கிறார்கள் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த ஜெயக்குமார், “இந்த அரசு முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது” என்றார்.
உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் காரணமாக அண்ணா சாலை முழுவதுமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கொடி கம்பங்கள் வைக்கப்பட்டுள்ளன என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர்,
“சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது. ஆளும் கட்சிக்கு ஒரு சட்டம், எதிர்க்கட்சிக்கு ஒரு சட்டமா. சாலைகள், நடைபாதைகள் எல்லாம் அரசாங்க சொத்து. அதில் ஒரு கட்சியின் கொடிக் கம்பங்களை நடலாமா? அதற்கு கார்பரேஷனிடம் அனுமதி வாங்கியிருக்கிறீர்களா? அப்படி அனுமதி வாங்கியிருந்தால் அதே அனுமதியை எங்களுக்கும் கொடுங்கள் நாங்களும் அண்ணா சாலையில் கொடிக்கம்பங்களை வைக்கிறோம்.
ஆளும் கட்சியாக இருந்தால் எங்கு வேண்டுமானாலும் பேனர், ஃப்ளக்ஸ் போர்டு, கொடிக்கம்பம் எல்லாம் வைக்கலாமா. அவர்களுக்கு ஒரு சட்டம், எதிர்க்கட்சிக்கு ஒரு சட்டமா? என்று கேள்வி எழுப்பினார்.
திருவல்லிக்கேணி தொகுதியில் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து வாகனங்கள் சேதமடைந்த விவகாரத்தில் காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர் போட தயங்குகிறார்கள் என்று செய்தியாளர்கள் கூறியதற்கு, பதிலளித்த ஜெயக்குமார்,
”அப்பா தொகுதியில் உள்ள மருத்துவமனைக்குச் சென்ற பெண்ணுக்குக் காலே போச்சு, மகன் தொகுதியில் நிலைமை இப்படி இருக்கிறது. சினிமா படப்பிடிப்புக்கே நேரம் பத்தாத போது இளவரசர் எப்படி தொகுதிக்குப் போவார். இது மக்களாட்சி கிடையாது, மன்னர் ஆட்சி.” என்றார்.
“ஆன்லைன் ரம்மி முழுவமையாக தடை செய்ய வேண்டும். ஆளுநர் விளக்கம் கேட்டிருக்கிறார். இவர்களும் விளக்கம் அளித்துவிட்டதாக சொல்கிறார்கள். ஆனால் முழு மூச்சாக செயல்படாமல், ஆன்லைன் ரம்மியை வளர்த்துவிடும் முயற்சியில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்” என்றார் ஜெயக்குமார்.
மேலும் அவர், “ஓபிஎஸ், தினகரன் ஆகியோரது கதை முடிந்துபோன கதை, அதையெல்லாம் தொடர்வதாக இல்லை, கட்சிக்காரர்கள் ஓபிஎஸை ஏற்றுக்கொள்ளவில்லை. அம்மாவுடைய அரசு வரக்கூடாது என்று திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார் ஓபிஎஸ்” என குறிப்பிட்டார்.
பிரியா
தனி ஈழம் நிறைவேறாமல் போனதற்கு இதுதான் காரணம்: சுப்புலட்சுமி ஜெகதீசன்
எம்ஜிஆர் போல் பெரும் மாற்றத்தை உருவாக்குவார் உதயநிதி: திண்டுக்கல் லியோனி