திமுக இளைஞரணிச் செயலாளரான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பொறுப்பேற்க இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், அவரது துறை பற்றிய அடுத்தடுத்த ஆலோசனைகளும், விவாதங்களும் ஆட்சி மேலிடத்தில் தொடங்கிவிட்டன.
உதயநிதிக்கு இளைஞர் நலன் விளையாட்டு, மகளிர் மேம்பாடு, சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை ஆகியவற்றை கொடுக்கலாம் என்று முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்திருப்பது குறித்து மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் அமைச்சர் உதயநிதி- 3 துறைகள் இவைதான் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதேநேரம் அமைச்சர் உதயநிதிக்கு தோதான ஐ.ஏ.எஸ். அதிகாரியைத் தேடும் படலமும் தொடர்ந்து நடந்திருக்கிறது.
உதயநிதி கடந்த ஒன்றரை வருடமாக சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். அரசுத் துறையில் இதுதான் அவருக்கு உள்ள அனுபவம். அதேநேரம் அமைச்சர் பொறுப்பேற்றால் கோப்புகள் பார்ப்பதில் இருந்து முடிவுகள் எடுப்பது வரை பணிச் சுமைகள் அதிகமாகும். நிர்வாக ரீதியான நடைமுறைகளை புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு மிக அனுபவம் வாய்ந்த திறமையான ஐ.ஏ.எஸ். அதிகாரி உதயநிதியின் துறைக்கு செயலாளராக இருக்க வேண்டும் என்பதுதான் ஸ்டாலினுடைய எதிர்பார்ப்பு.
இதுகுறித்து திமுக உயர் மட்ட வட்டாரங்களில் விசாரித்தபோது பல புதிய தகவல்கள் கிடைத்தன.
“பொதுவாகவே நிர்வாகத்தில் ஒவ்வொரு தலைவருக்கும் ஒவ்வொரு பாணி உண்டு. கலைஞர் முதல்வராக இருக்கும்போது முக்கிய முடிவுகள் எடுக்கும்போது அதிகாரிகளை ஆலோசிப்பார். அவர்களது கருத்துகளை கேட்டுக் கொள்வார். ஆனால் தன்னுடைய அனுபவம், சிந்தனை, மக்களின் பார்வையில் ஒரு பிரச்சினையை பார்த்து முடிவெடுத்து அதன்படியே கோப்பு தயாரிக்கச் சொல்லுவார்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அதிகாரிகளுக்கு தனது முடிவைச் சொல்லிவிடுவார். அதன்படி செயல்படுமாறு அதிகாரிகளுக்கு ஆணையிடுவார்.
தற்போதைய முதல்வர் ஸ்டாலின் முடிவெடுப்பதில் அதிகாரிகளுக்கு அதிக இடம் கொடுக்கிறார் என்பது வெளிப்படையாக பேசப்படும் உண்மை. இப்படியாக அதிகாரிகளின் ஒத்துழைப்பு அரசு நிர்வாகத்துக்கு முக்கியமானதாக இருக்கிறது.
இந்த பின்னணியில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பொறுப்பேற்றால் அவருக்கு ஆலோசனை சொல்லி அவரது செயல்பாட்டை செம்மைப்படுத்தக் கூடிய ஓர் அதிகாரி உதயநிதி துறைக்கு செயலாளராக இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் கருதுகிறார்.

ஏற்கனவே ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது அசோக் வரதன் ஷெட்டிதான் உள்ளாட்சித் துறை செயலாளராக இருந்தார். அவரது ஆலோசனைகள் ஸ்டாலினின் நிர்வாகத்தில் பேருதவியாக இருந்தன. அதனால் அசோக் வரதன் ஷெட்டியுடன் ஸ்டாலினின் தொடர்பும் நட்பும் தொடர்ந்தது. இடையில் அசோக் வரதன் ஷெட்டி விருப்ப ஓய்வு பெற்று கனடா சென்றுவிட்டார். ஸ்டாலின் 2021 ல் முதல்வராக பொறுப்பேற்ற நிலையில், அசோக் வரதன் ஷெட்டி முதல்வரின் ஆலோசகராக நியமிக்கப்படுவார் என்று செய்திகள் வந்தன. அப்படி அதிகாரபூர்வ பொறுப்பு அவருக்கு அளிக்கப்படவில்லை. என்றாலும் அசோக் வரதன் ஷெட்டியின் ஆலோசனைகளை அவ்வப்போது முதல்வர் பெறுகிறார் என்கிறார்கள்.
இதேபோல உதயநிதியின் நிர்வாகச் செயல்பாடுகளை செம்மையாக்க எந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமிக்கலாம் என்று ஸ்டாலின் நடத்திய தேடுதலில் தேர்வாகியிருப்பவர் தற்போது சென்னை மாநகராட்சி ஆணையராக இருக்கக் கூடிய ககன் தீப் சிங் பேடி. அனுபவமும், நிர்வாகத் திறமையும் ஒருங்கே பெற்ற ககன் தீப் சிங் பேடி இதுவரை பெரிதாக எந்த சர்ச்சைகளிலும் சிக்காத அதிகாரி. மக்களோடு நல்ல தொடர்பில் இருப்பவர். பல சவாலான சந்தப்பங்களில் திறமையாக செயல்பட்டவர்.

கடந்த நவம்பரில் சென்னையில் பெருமழை பெய்தபோது மழை நீர் பல இடங்களில் உடனடியாக வடிந்துவிட்டதைக் குறிப்பிட்டு சமூக தளங்களில் பொதுமக்களே முன் வந்து ஸ்டாலின் அரசை பாராட்டினர். இந்த மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து செயல்படுத்தியதில் ககன் தீப் சிங் பேடிக்கு பெரும் பங்கு உண்டு,
இவ்வாறு அரசுக்கும் நிர்வாகத்துக்கும் நல்ல பெயர் பெற்றுத் தரும் அதிகாரிகள் மிகச் சிலரே. அவர்களில் ஒருவரான ககன் தீப் சிங் பேடியை ஸ்டாலின் தனது மகன் உதயநிதியின் அமைச்சகத்தில் பணியமர்த்த விரும்புகிறார். ஏனென்றால் உதயநிதியின் அனுபவமின்மையை அதிகாரிகள் தவறாக பயன்படுத்தி அவருக்கும் ஆட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதன் முக்கிய அம்சமாகத்தான் தனக்கு அசோக் வரதன் ஷெட்டியை போல உதயநிதிக்கு ககன் தீப் சிங் பேடியை தேர்வு செய்ய முடிவு செய்திருக்கிறார் ஸ்டாலின்” என்கிறார்கள்.
–வேந்தன்
அதி கனமழை, பலத்த காற்று: மாண்டஸ் புயல் எச்சரிக்கை!
ஓபிஎஸ்க்கு தடை கேட்ட இபிஎஸ்: உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் மனு!