அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வருக்கு நிகரானவர் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியிருப்பது தமிழக அரசியலில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (டிசம்பர் 29) நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கே.என்.நேரு தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், மூர்த்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, திருநாவுக்கரசர், ஜோதிமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதில் வரவேற்புரை வழங்கிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “சென்னையில் அலுவல் கோட்டை இருந்தாலும் உங்களின் அன்புக்கோட்டை திருச்சிதான்” என முதல்வர் மு.க.ஸ்டாலினைப் புகழ்ந்த அமைச்சர் பொய்யாமொழி, ஆங்கிலப் புத்தாண்டுப் பரிசாக திருச்சி மாவட்டத்துக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார் எனத் தெரிவித்தார்.
மேலும் அவர், “தங்களை பொறுத்தவரை முதல்வரின் வருகையால் இன்று முதலே புத்தாண்டுதான்’’ எனக் குறிப்பிட்டார். தொடர்ந்து அவர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும் வரவேற்றுப் பேசினார்.
”இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை மட்டுமல்ல, சிறப்பு திட்ட அமலாக்கத் துறைக்கும் அமைச்சராக இருப்பதால், கிட்டத்தட்ட துணை முதல்வருக்கு நிகரான பொறுப்பையும் உதயநிதி கையாள்கிறார்” என உதயநிதியை துணை முதல்வருக்கு நிகராக உயர்த்தி பேசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இதன் மூலம் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் மட்டுமல்ல, அவர் துணை முதல்வருக்கு நிகரானவர் என்பதை தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வருக்கு நிகரான பொறுப்பை கையாள்வதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியபோது முதல்வர் ஸ்டாலின் மௌனமாக கேட்டுக்கொண்டிருந்தார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் இந்தப் பேச்சு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என முதல் குரல் கொடுத்தவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
தொடர்ந்து அவரை அமைச்சராக்க வேண்டும் என நிகழ்வுகளில் அன்பில் மகேஷ் பேசி வந்தார். இந்நிலையில் இன்று துணை முதல்வர் பதவி குறித்து முதல் முறையாக பேசியிருக்கிறார்.
அதுமட்டுமின்றி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவருடைய புகைப்படங்களையும் இணைத்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெ.பிரகாஷ்
இன்று சாயந்தரமே கூட நான் மாற்றப்படலாம்: காங்கிரஸ் மாநிலத் தலைவர் அழகிரி
புரட்சிப் பெண்ணான புதுவை ஆட்சியர்: குவியும் பாராட்டுகள்!