Udhayanidhi incharge Chief Minister

டிஜிட்டல் திண்ணை: உதயநிதி… துணை முதல்வருக்கு முன் பொறுப்பு முதல்வர்?

அரசியல்

வைஃபை ஆன் செய்தவுடன் உலக முதலீட்டாளர் மாநாடு தொடர்பான முதல்வரின் ட்விட் இன்பாக்சில் வந்து விழுந்தது.

“ஜனவரி 7,8 தேதிகளில் சென்னையில் நடக்கும் உலக முதலீட்டாளர் மாநாட்டை ஒட்டி அரசியல் வட்டாரத்திலும் தொழில் வர்த்தக வட்டாரத்திலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பொங்கலுக்கு முன்பு தமிழ்நாட்டை பலப்படுத்த உலக முதலீட்டாளர் மாநாடு, பொங்கலுக்கு பின்பு திமுகவை பலப்படுத்த சேலம் இளைஞரணி மாநாடு இந்த இரு மாநாடுகளையும் முடித்த பிறகு ஜனவரி 3 ஆவது வாரத்தில் முதலமைச்சர் முக்கிய முடிவெடுக்கப் போகிறார் என்று திமுகவின் உயர் மட்ட வட்டாரங்களில் பேச்சுகள் உலவுகின்றன.

அதாவது ஜனவரி மூன்றாவது வாரம் அல்லது மாத இறுதியில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறாராம். சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டாலின் லண்டனுக்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்று வந்தார்.

முதல்வர் ஆனதிலிருந்து தனிப்பட்ட பயணமாக முதல்வர் வெளிநாடு சென்றதில்லை, துபாயில் நடந்த உலக வணிக எக்ஸ்போவுக்கும், முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜப்பானுக்கும் சென்று வந்தார் ஸ்டாலின்.

இந்த நிலையில் சமீப மாதங்களாக முதல்வரின் உடல் நலத்தில் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. நவம்பர் முதல் வாரம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அதிலிருந்தே மருத்துவர்கள் அவரை அதிக பணிகளை வைத்துக் கொள்ளாமல் குறைந்தபட்ச ஓய்வெடுக்கச் சொல்லி அறிவுறுத்தி வருகின்றனர்.

கொரோனா காலத்திலேயே முதல்வர் ஸ்டாலின் நோயாளிகள் சிகிச்சை பெறும் வார்டுக்கே சென்று பார்வையிட்டார். கொரோனா பரவல் காலத்துக்கு பின் முதல்வர் ஸ்டாலினுக்கு சளித் தொந்தரவு அதிகமாக இருக்கிறது, வேறு சில உடல் உபாதைகளும் இருக்கின்றன. இவற்றுக்காக வெளிநாடு சென்று மருத்துவ பரிசோதனை செய்து வரலாம் என்று முதல்வருக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

Udhayanidhi incharge Chief Minister

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக கடுமையாக உழைக்க வேண்டியிருப்பதால் அதற்கு முன்பாக வெளிநாடு சென்று உடல் நலனை மேம்படுத்திக் கொண்டு வரலாம் என்ற திட்டமும் முதல்வருக்கு நெருக்கமான வட்டாரங்களில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

அப்படி ஒரு சூழ்நிலையில் தான் மீண்டும் சென்னை திரும்பும் வரை உதயநிதி ஸ்டாலினை பொறுப்பு முதலமைச்சராக நியமித்துவிட்டு செல்வார் முதல்வர் என்பதுதான் ஜனவரி 4 ஆம் தேதி முதலாகவே திமுக உயர் மட்டப் புள்ளிகள் விவாதித்துக் கொள்ளும் விஷயமாக இருக்கிறது. இளைஞரணி மாநாட்டுக்குப் பிறகு அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என்று திமுகவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில்தான் இப்படி பொறுப்பு முதல்வர் என்ற தகவலும் சேர்ந்துகொண்டிருக்கிறது.

ஏற்கனவே கலைஞர் முதல்வராக இருந்தபோது வெளிநாடு சென்றுள்ளார். எடப்பாடி பழனிசாமியும் முதல்வராக இருந்தபோது வெளிநாடு சென்றுள்ளார். அப்போது அவர்கள் பொறுப்பு முதல்வர் என்று யாரையும் நியமித்துவிட்டுச் செல்லவில்லை. இந்த பின்னணியில் முதல்வர் ஸ்டாலின் ஒருவேளை வெளிநாடு பயணம் மேற்கொண்டால், அவர் தமிழ்நாட்டுக்குத் திரும்பும் வரை உதயநிதியை பொறுப்பு முதல்வராக நியமிப்பாரா என்பது அவரது தனிப்பட்ட விருப்பம் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வெளியானது அயலான் ட்ரெய்லர்… 5 வருடங்கள் தாமதத்திற்கு காரணம் என்ன?

அருண் விஜய்யின் மாஸ் ஆக்சன்: புதிய படத்தின் ட்ரெய்லர்!

+1
1
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *