கடல் அலையை மாற்றுத்திறனாளிகள் கண்டுகளிக்க வசதியாக மெரினாவில் அமைக்கப்பட்ட நடைபாதையை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் இன்று (நவம்பர் 27) மாலை திறந்துவைத்தார்.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மணல் பரப்பை மாற்றுத்திறனாளிகளும் கடந்து சென்று கடல் அழகை பார்க்கும் வகையில் நடைபாதை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டது.
அதன்படி வீல் சேரில் மணல் பரப்பை கடக்க மரக்கட்டைகளால் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. நம்ம சென்னை செல்பி பாயிண்ட் பின்பக்கம் உள்ள மணல் பரப்பில் 380 மீ நீளம் மற்றும் 3 மீட்டர் அகலத்தில் இந்தப் பாதை அமைக்கப்பட்டது.

சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ. 1.14 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட இந்த நடைபாதையை உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை திறந்துவைத்தார்.
இதையடுத்து முதியவர்களும், மாற்றுத்திறனாளிகளும் வீல் சேரில் அமர்ந்தபடி சென்று கடல் அலையில் காலை நனைத்து மகிழ்ந்த வண்ணம் இருக்கின்றனர்.
“இந்த நடைபாதை மிகவும் வசதியாக இருக்கிறது. இளமை காலத்தில் வந்து கடலில் கால் நனைத்தது. அதன்பிறகு இப்போதுதான் வருகிறேன்.
அதுவும், இந்த நடைபாதை அமைக்கப்பட்டதால் தான் வீல் சேரில் அமர்ந்தபடி வர முடிந்தது. இந்த பாதை அமைப்பதற்கு முன்னதாக சர்வீஸ் ரோட்டோடு சென்றுவிடுவேன்” என்று மூதாட்டி ஒருவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.

“முன்னதாக, மெரினாவில் மாநகராட்சி சார்பில் ஆண்டுக்கு ஒருமுறை தற்காலிக சாய்வு தளம் அமைக்கப்படும். இதனால் மாற்றுத்திறனாளிகள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கடற்கரைக்குச் செல்ல முடியும்.
தற்போது நிரந்தர பாதை அமைக்கப்பட்டுள்ளதால் வருடத்தில் எப்போது வேண்டுமானாலும் வந்து செல்லலாம், கடல் அலைகளில் கால் வைத்து நனைவதை உணரலாம்” என மெரினாவுக்கு வந்திருந்தவர்கள் கூறுகின்றனர்.
முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் வரும் அவர்களது குடும்பத்தினர், “மரத்தால் இந்த பாதை அமைக்கப்பட்டுள்ளதால் மழை வெயிலுக்கு தாக்குப்பிடித்துச் சேதமடையாமல் இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். கழிவறைகள் அமைக்கப்பட்டு, கடற்கரை முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்ததாக மாற்றப்பட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர்.
“வரும் மாதங்களில் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் நிரந்தர சாய்வு தளம் அமைக்கப்படும். பெசன்ட் நகரில் உள்ள சாய்வுதளம் சுமார் 1.15 கோடி செலவில் அமைக்கப்படும். டிசம்பர் மாதத்திற்குள் இதற்கான டெண்டர்களை இறுதி செய்யப்படும்” என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை தெரிவித்துள்ளது.
சென்னை போன்று மற்ற கடற்கரை மாவட்டங்களிலும் இதுபோன்று பாதை அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டம் முத்துநகர் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் வீல் சேரில் சென்று கடல் அலையில் கால் நனைத்து விளையாட பாதைகள் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
கதிர் ஆனந்த், தயாநிதி மாறனுக்கு புதிய பொறுப்பு!
சோபிதாவுடன் நாக சைதன்யா டேட்டிங்?